31 August 2009

முகாம்களில் நாளாந்தம் 25-30 முறைப்பாடுகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25 – 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணைக்குழுவினர் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதையடுத்தே, முகாம்களில் இருந்து இவ்வாறு தமக்கு முறைப்பாடுகள் வரத் தொடங்கியிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினால், அங்கிருந்த மக்கள் நெருக்கடிகள் மிகுந்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்தபோது பலர் தமது உறவினர்களை, பிள்ளைகளை, பெற்றோரை, உற்றாரைப் பிரிய நேர்ந்தமை தெரிந்ததே. அவ்வாறு பிரிந்த பலரது இருப்பிடத்தைத் தாம் அறிய முடியாதிருப்பதாகவும், அவர்கள் பற்றிய தகவல்களைத் தங்களால் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் இந்த முறைப்பாடுகளில் குறிப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு இந்த அஞ்சல் வழியான முறைப்பாடுகளில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களும், பொதுமக்களும் மனித உரிமைகள் தொடர்பான தமது பிரச்சினைகள் குறித்து வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும் என்று வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment