16 December 2009

கிழக்கில் 65,000 குடும்பங்கள் பாதிப்பு


கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக சுமார் 65,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் தெரிவித்தனர். இம் மழையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 58,000 குடும்பங்களில் 377 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வழிபாட்டு தலங்களிலும், பொது இடங்களிலும் தங்கியிருப்பதாக மட்டு. மாவட்ட இணைப்பாளர் கே. விமலராசா தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்டத்தில் சுமார் 5600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக திருமலை மாவட்ட இணைப்பாளர் எம். எஸ். எம். ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களில் சுமார் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்

தொடர் மழையால் மட்டக்களப்பு வாகனேரி, றூகம், நவகிரி, புனாணை, உன்னிச்சை குளங்களின் அணைகள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவற்றின் சில வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.

மட்டு. செங்கலடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாகரை, காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் சில குடும்பங்கள் பொதுக் கட்டடங்களிலும் தங்கியுள்ளனர்.பல கிராமங்களின் தொடர்பு வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பாதைகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வாகனங்கள், பயணிகள் பயணிக்க முடியாதுள்ளது.

மட்டு. மாவட்டத்தில் வெள்ள நிலைமை காரணமாக வேத்துச்சேனைக் கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கிராம மக்களை மீட்கும் பணிகள் வள்ளங்கள் மூலம் இடம்பெற்று வரு கின்றன. வெள்ளாவெளி மண்டூர் வீதி, வெள்ளாவெளி பாலையடி வட்டை வீதி, ஆனைகட்டிய வெளி வீதி, முங்கில் ஆறு பாதை மேல் 5 அடிக்கு வெள்ள நீர் செல்கின்றது.


No comments:

Post a Comment