28 December 2009

இலங்கையை உலகின் அதி சிறந்த நாடாக மாற்றுவேன்- ஜனாதிபதி

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையை உலகின் அதிசிறந்த நாடாக்குவதே தமது ஒரே நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மினுவாங்கொடை நகர சபை கூட்டத்தில உரையாற்றிய போது கூறினார்.

அவர் மேலும் பேசுகையில் தெளிவான மற்றும் உறுதியான நோக்கத்தை கொண்டுள்ள தம்மீது சேறு பூசும் பிரச்சாரங்களை செய்ய எந்த நியாயமும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலை அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகவே எதிர்க்கட்சியினர் மாற்றியுள்ளனர். அவர்கள் அரசியல் தரிசனம், கொள்கை, பொருளாதார அல்லது அபிவிருத்தி நோக்கு ஆகியவற்றைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை.

மஹிந்த சிந்தனையில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ள தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்பதைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

ஆனால் மஹிந்த சிந்தனையை நிறைவேற்ற மக்கள் ஆணை வழங்கிய ஆறு வருடங்களில் இன்னும் இரண்டு வருடங்கள் மிகுதியாக உள்ளதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள மக்கள் முன் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதனை செய்வதற்கு எதிர்க்கட்சியினர் தனக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் தமக்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாற்பது வருட கால அரசியல் அனுபவம் உள்ள நாம் நாற்பது நாட்கள் அனுபவத்தை மட்டுமே பெற்றுள்ள அறியாக் குழந்தையுடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனினும் அரசியல் அனுபவத்தின் இடைவெளிக்கு சமமான அதிகப்படி வாக்குகளால் தான் வெற்றி பெறப்போவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment