போர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியம்: நவநீதம்பிள்ளை
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச மற்றும் விடுதலைப் புலிகளினால் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட 3 பேரைக்கொண்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விசாரணை அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்தினை மிகவும் பாதித்திருப்பதாகவும் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வரவேற்பு
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான பதிலளிக்கும் கடப்பாடு குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாகவும் போர்க் குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வறிக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனேடிய லிபரல் கட்சி ஆதரவு
ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தேர்தல் பிரசாரத்தின் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தையும் நீதியையும் காண வேண்டுமாயின் ஐ.நா. நிபுணர்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment