பக்குவமற்ற தமிழ் தலைமைகளால் - மீண்டும்
சந்தர்ப்பங்களை இழக்கும்; தமிழ் மக்கள்
தமிழ் மக்களின் அரசியற் தலைமைகள் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பாக ஒரு அடிப்படையான புரிந்துணர்வுக்கு வரமுடியாதவையாகத்தான் இருக்கின்றன. இந்த பரிபக்குவக் குறைவு அண்மையில் டெல்லியிலும் எதிரொலித்தது.
மனித உரிமைகள் மற்றும் உலகபொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் இலங்கை வடக்கு-கிழக்கின் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பொன்றை அனுப்பியிருந்தார்.
ஆகஸ்ட் 23, 24ந் திகதிகளில் டெல்லியில் ‘துயரும் தீர்வும’; என்ற தலைப்பின் கீழ் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட 25ந்திகதி இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை விவாதிக்கப்படவிருந்தது.
24ந் திகதி மாலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த - குறிப்பாக தமிழ் நாட்டையும் சேர்ந்த முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ்க்கட்சிகள் இரண்டு பகல் பொழுதுகள் அமர்ந்து பேசியும் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக ஒரு பொது அறிக்கையை உருவாக்கும் அளவுக்கு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.
உயர்பாதுகாப்பு வலயங்கள்;, மக்களின் மீள் குடியேற்றம், இராணுவ மயமாக்கம், திட்டமிட்ட குடியேற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரு கருத்தொருமைப்பாட்டிற்கு இழுபறிகளுடன் வர முடிந்தது. ஆனாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவ்வாறு வரமுடியவில்லை.
இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவையே என்று இந்தியாவும், உலகமும், இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் கணிசமான மக்களும் ஏற்கக் கூடிய ஒரு தீர்வை கருத்தொருமைப்பாட்டுடன் முன்வைக்க தமிழ்க் கட்சிகளால் முடியவில்லை.
இந்த நிலைமை மிகவும் அவலமான ஒன்றாகும். அங்கு கலந்து கொண்ட கட்சியினரில் ஒரே ஒரு கட்சியிரே “இலங்கையில் தமிழர்; தேசம் என்று ஒன்ற உண்டு, அது தனித்துவமான ஒரு தேசம், அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு அதனை இந்தியாவும் இலங்கையும் முதலில் அங்கீகரிக்க வேண்டும்” என்ற கருத்துக்களை; ஆரவாரமாக முன்வைத்தனர்.
இந்த சொற்பதங்கள் அல்லது அவற்றின் நியாயப்பாடுகள் அல்ல இங்கு பிரச்சினை. ஆனால் தமிழர்களின் இன்றைய நிலையில் இந்த சொற்சிலம்பங்கள் தமிழர்களின பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமா என்பதுதான் பிரச்சினை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட திரு கஜன் பொன்னம்பலம் இதனைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதிலேயே அக்கறை கொண்டிருந்தார்.
இது அதிதீவிர நிலைப்பாடு எனத் தெரிந்து கொண்டும் இந்த நிலைப்பாட்டிற்கு மாற்றான யதார்த்தமான நிலைப்பாடொன்றிற்கு மற்றைய கட்சியினருடன் சேர்ந்து முன்வருவதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்ததுதான் இங்கு முக்கியமான விடயமாகும்.
இறுதியாக இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒரு நியாயமான நிலைப்பாட்டினை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டது என்பதே நடந்து முடிந்த விடயமாகும்.
நாம் கிடைத்த சந்தர்ப்த்தைப் பயன்படுத்தி நியாயமானதும், முக்கியமானதுமான சில விடயங்களை இந்திய சட்ட மன்றங்களில் வலியுறுத்தும் வகையாக முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும்..
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தலைவர்களிடம் அறிய முயன்றதெல்லாம் நறுக்குத்தெறிக்க நச்சென்று சொல்ல வேண்டிய – சொல்லக்கூடிய அரசியற் தீர்வு விடயங்களையே.
ஆனால் கோவிலில் கந்தபுராண பாராயணம் செய்வதைப் போன்ற சங்கிலியன் காலம் தொடக்கம் இன்று வரையான வரலாற்றுக் கதையையோ, அல்லது தனி இறைமை கொண்ட தமிழீழத்திற்கு நிகரான ஏற்பாட்டையோ அல்ல. மாறாக மக்கள் எதிர்பார்ப்பது இலங்கையின் அரசியல் முறைமையில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த நாட்டின் சிஙகள மக்களுக்குச் சமாந்தரமாக முறையான பங்குதாரர்களாக ஆக்கப்படும் விதமான அரசியலமைப்புச் சீர்திருத்தத்தையே.
தமிழ் பேசும் மக்களும் சிங்கள மக்களும் சரிநிகர் சமானமாக ஐக்கிய இலங்கைக்குள் வாழும் நிலை ஏற்படுத்தப்படுதல்,
நிதி அதிகாரம், சட்டம் ஒழுங்கு, மற்றும் நிலப்பயன்பாட்டு அதிகாரங்கள் பகிரப்படுதல் .இவ்வாறாக விடயங்களை நாம் முன்வைப்பதில் வெளிப்படையான நியாயம் இருக்கிறது. இது இந்தியாவிலுள்ள அதிகாரப்பகிர்வு முறைக்கும் இந்தியாவின் அரசமைப்பின் செயன்முறைக்கும் இசைவுபட்டதும் கூட.
தமிழ்தேசியக் கூட்டமைப்பு திரு கஜன் பொன்னம்பலத்தின் அதிதீவிரமான உரத்த குரலுக்கு முன்னால் ஏன்தானோ மௌனமாகிப்போனார்கள் என்பது எமக்கு இன்னமும் புரியாத புதிராக உள்ளது.
பிரச்சினை தீர்க்கப்பட்ட வேண்டிய இடம் இலங்கையே . அதற்கு இந்தியாவின் அனுசரணை மிகவும் அவசியமாகும். பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியவர்கள் - முன்முயற்சி எடுக்க வேண்டிய பிரதான பிரிவினர் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே!
புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விடுத்து தமது நாடு கடந்த தேசியவாதக் கனவுகளை உள்ள+ர் மக்கள் மீது திணிக்கக் கூடாது. ஜனநாயகபூர்வமாக நாட்டு நிலைமையை, எமது மக்களின் நிலைமைகளைக் கருத்திற்கெடுத்ததாக ஆக்க பூர்வமானவையாக அவர்களின் பங்களிப்பு அமைய வேண்டும்.
சமூகப் பொறுப்பில்லாத செயற்பாடுகளால் ஆக்க பூர்வமானதொரு வரலாற்று பாத்திரத்தை டெல்லியில் ஆற்றியிருக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டு விட்டது என்றே கவலைப்பட வேண்டியுள்ளது.
தற்போது கிறிஸ்பூதப் பீதி சமூகத்தையே மனநோயாளியாக்கிவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது, பாதுகாப்பற்ற, நிம்மதியற்ற, நிராதரவான, நிர்க்கதியான நிலையினால் மக்கள் அல்லோலகல்லப்படுகிறார்கள். மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்த அவலத்தை விஞ்சிய நிலை தான் எமது மக்களின் வாழ்வு. அநியாயங்களைத் தட்டிக் கேட்பதற்கு அவசியமான ஐக்கியப்பட்ட வீரியம் மிக்க
தலைமைத்துவத்தின் அவசியம் இங்கு உணரப்படுகிறது
அறிவு பூர்வமான, ஆக்கபூர்வமாக ஓர் அரசியற் தீர்வை ஐக்கிய இலங்கைக்குள் பெற்று தமிழ்மக்கள் தமது பகுதிகளில் சுயநிர்வாகம் செய்யக்கூடிய சுயாட்சி முறையொன்றை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு செலுத்துதல் வேண்டும். இன்று தமிழ் சமூகத்தின் இருப்புடன் தொடர்புபட்ட வகையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதனையே உணாத்துகின்றன.
மக்களின் எதிர்காலத்துடன் பாதகமாக விளையாடுவது தார்மீக உணர்வு கொண்ட தலைமைத்துவங்கள் செய்யக் கூடிய காரியமாகாது. இதில் எமக்கு எமது கடந்தகால பட்டறிவுகள் பயன்பட வேண்டும்.
இலங்கையில் ஜனநாயகம், சமத்துவமான இன நல்லுறவு, பல்லினப்பாங்கு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் மீது அக்கறை கொண்ட அனைத்து சத்திகளும் மற்றைய பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவதே தமிழர்களின் மீட்சிக்கும், அத்துடன் எண்ணிக்கையில் சிறுபான்மையான ஏனைய தேசிய சமூகங்களின் மீட்சிக்கும், ஒட்டுமொத்தமாகப் பார்ப்பின் இலங்கையின் அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளினது மீட்சிக்கும் அவசியமாகும்.
தி.சிறிதரன்,
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
No comments:
Post a Comment