இயற்கையும், மனிதன் இன்புற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்று தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது.
பேராசிரியர் இரா. சிவசந்திரன் டாக்டர் நரேந்திரன் போன்றவர்களின் சில கட்டுரைகள் வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் இன்றைய வாழ்வியல் மனோபாவங்கள், அபிவிருத்தி வளங்களை பாதுகாப்பு பற்றி சமூக, பொருளாதார அக்கறையுடனான கட்டுரைகள் தேனீயில் அவ்வப்போது இடம்பெற்றிருக்கின்றன.
மனிதர்களுக்கிடையிலான உறவுகள், உழைப்பின் மீது நம்பிக்கையீனம் ,சமூகச் சீர்கேடுகள் பற்றியும் சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கான வாய்ப்புக்களை யாழ்ப்பாணம் கொண்டிருப்பது பற்றியும் நரேந்திரன் எழுதிய அருமையான கட்டுரை ஒன்றை வாசிக்கமுடிந்தது.
திரு சிவசந்திரன் வீதி அபிவிருத்தியும், சட்டம் ஒழுங்கு பேணப்படாமையும் விரயமும் தாறுமாறான மின்சாரக்கட்டமைப்பும் அடிக்கடி செயலிழந்து போவது வரலாற்றுச் சின்னங்கள் அழிந்துபோவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தின் நில, நீர் வளம் பற்றிய கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்துள்ளார்.
இவை எனக்கு மிகவும் பிடித்தமான பத்திகளாக இருந்திருக்கின்றன.
பல்வேறுதளங்களிலும் பிரச்சனைகள் இருக்கின்றன
யாழ்ப்பாணத்தில் மினி பஸ்ஸில் (தனியார் போக்குவரத்து) பிரயாணம் செய்பவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் அதிர்ச்சியளிப்பவை.
பரவலாகவே நடத்துனர்கள் பின்னால் போ, தள்ளிப்போ, நிமிர்ந்துநில், வளைந்து நில், ப என்று ஈவிரக்கமற்று ஆட்களை அடைவார்கள்.
அன்பான வார்த்தைகளுக்கு அங்கு இடமில்லை. குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் இந்த மினி பஸ்களில் பிதுங்கிய படி பயணம் செய்ய வேண்டும். மானிட ஜென்மங்களு;கான எந்த மதிப்பும் இல்லை.
மிளகாய், அரிசி சாக்குகளை தூக்கி, தூக்கி அடைவதுபோல் அடைவார்கள். ஆனால் பயணிகளிடமிருந்து எந்த எதிர்ப்புக் குரல்களும் எழுவதில்லை. எல்லாம் மரத்துப் போய்விட்டது.
யாழ்ப்பாணத்தினுள் ஐந்து கிலோ மீற்றர் ஆட்டோவில் பிரயாணம் செய்வதானால் ஐநூறு ரூபாய் செலுத்த வேண்டும்.
யாழ்;ப்பாணம் நகரிலிருந்து வடமராட்சி செல்வதானால் இரண்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
தவிர ஆஸ்பத்திரி ஆயினும் செயலகம் ஆயினும் அங்கு சாதாரண மனிதர்களுக்கு எந்த முகமும் கிடையாது. அன்பான வார்த்தைகள், இன்முகம் என்பன அருகிப்போயின.
சேவை என்பதைவிட சாதாரண மனிதர்கள் தங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்ற மனோபாவமே காணப்படுகிறது. இத்தனைக்கும் சாதாரண மக்களின் வரிப்பணத்திலேயே இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
பொலிஸ் நிலையம், நீதித்துறை என்பனவும் அவ்வாறுதான்.
ஒரு சமூக பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. வாழ்க்கை மிகவும் கெடுபிடியானதாக மாறிவிட்டது.
இயக்கங்களில் இருந்தவர்கள் புலிகள் உட்பட கேவலமானவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. பெண்பிள்ளைகளாக இருந்தால் அது மிகவும் அவலமானது.
கடந்துவந்த முப்பது வருடங்களில் தமது வாழ்வை துறந்தவர்கள் இளமை காலத்தை தொலைத்தவர்கள் தோல்வியடைந்தவர்களாகவும் வக்கில்லாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள.;.
ஆனால் இக்காலகட்டத்தில் நெற்றியில் பட்டையும் சந்தனமுமாக தமது கல்வியை, தொழில் வாய்ப்பை பெற்றவர்கள் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் இந்த இயக்கங்களில் இருந்தவர்களால்த்தான் சமூகத்துக்கு பிரச்சினை என்கிறார்கள். இவர்கள் நீதிவான்களாகவும் சட்டத்தரணிகளாகவும் ஏனைய அரச அதிகாரிகளாகவும் இருக்கலாம். பொலிசும் அவ்வாறுதான்.
எமது சமூகத்தில் நிலவும் முரண்நிலை என்னவென்றால் ஒருபக்கம் இந்த மேட்டுக்குடி மனோபவம் கொண்டவர்கள் கடுமையான தேசியவாதம் எண்ணம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
மறுபுறம் மத்திய அரசாங்கத்தின் கீழ் தமக்குள்ள அதிகாரங்களை அகங்காரத்துடன் பிரயோகிப்பார்கள்.
சமூகத்தில் விடுதலை என்று தவறாகவோ சரியாகவோ வழிநடத்தப்பட்டவர்களுக்கு, சாதாரண குடும்பங்களின் பிள்ளைகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது.
தமது அதிகாரத்துக்காக கூழைகும்பிடு போடுவதும் மறுபுறம் கடுமையான தேசியவாத நிலைப்பாட்டை மேற்கொள்வதும் என்ற போலித்தனம் இவர்களிடம் காணப்படுகிறது.
இயக்கங்களில் இருந்தவர்கள் கேள்விக்குட்படுத்த முடியாத புனிதர்கள் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகவும் இணைந்திருக்கலாம். மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றிய உணர்வுகள் ஆயுதங்கள் கோலோச்சிய நிலையில் நசித்து அழிந்திருக்கலாம். இந்த வன்முறை மனோபாவமே இன்றைய சமூகத்தின் கெடுபிடியான தன்மைக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் பெருவாரியான இளைஞர்களும் யுவதிகளும் அப்பளுக்கற்ற எண்ணங்களுடன்தான் போராட புறப்பட்டவர்கள்.
ஆனால் இந்தப் போராட்டத்துக்குரிய சித்தாங்களை உருவாக்கிய, போதையூட்டிய கனவான்கள் தான் கறைபடியாத கையினர் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்கள் இன்று முகமற்றவர்களாகத்தான் வாழ்கிறார்கள்.
ஏனோ தவிர்க்கமுடியாமல் நீதிமன்றம், ஆயுதப்படை, சிறைச்சாலை என்பனவெல்லாம் ஆளும் வர்க்கத்தின் கைக்கருவிகளே என்ற கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள் அடிக்கடி மனதில் தோன்றி மறைகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ_ம் ஏங்கல்ஸ_ம் குறிப்பிட்ட வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. முதலாளித்துவம் கவிஞனையும், விஞ்ஞானியையும், எழுத்தாளனையும் இன்ன பிறரையும் தனது கூலி அடிமையாக்கியுள்ளது என்ற வார்த்தைகள் இன்றளவும் உண்மையாகத்தான் உள்ளது.
பங்கு மார்க்கெட் வியாபாரிகளும்,; புலம்பெயாந்து சென்ற நாடுகளில்வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுடைய குடும்பங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின ஜாம்பவான்களும் வசதியான வாழக்கை ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.
யுத்தத்தில் உற்ற சுற்றத்தை இழந்த குடும்பங்கள் இந்த பாழாய்போன இயக்கங்களுக்கு போன இளைஞர்களும், யுவதிகளும் நடைப்பிணங்களான வாழ்க்கையொன்றை அனுபவிக்கிறார்கள்.
விதவைகள், ஊனமுற்றோர், அநாதைகளானோர் இந்த சமூக அமைப்பினால் வஞ்சிக்கப்பட்டோரென ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரச வரப்பிரசாதங்கள் கூட கிராம மட்டத்திலுள்ள கீழ்நிலை அதிகார வர்க்கத்திலிருந்து மேல் நிலை வரை தமக்கும் தமக்குத் தெரிந்தவர்களுக்குமிடையே பங்கு போட்டுக்கொள்ளும் நிலைதான் காணப்படுகிறது.
பெரும் யுத்தகாலத்தில் எந்த சமூக அக்கறையுமின்றி சுரணையற்று வாழ்ந்தவர்கள் சிவநெறிச் செம்மல்களாகவும் ,கனவான்களாகவும் சமூகத்தில் உலா வருகிறார்கள். மணிவிழாக்கள் வேறு.
புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வரும் பணத்தை தண்ணீராய் செலவழித்து உழைப்பின் மகிமை தெரியாத ஒரு சுகவாசிக் கூட்டம் உருவாகியது.
இராணுவம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதும் எங்கெங்கு காணினும் சாரயக் கடைகளும், இரவு விடுதிகளும், பெண்கள் மீதான வன்முறைகள் மக்கள் விரோத செயல்களை அதிகரித்துள்ளன.
கிரீஸ் பூதம் தொடக்கம் காணிப்பதிவு வரை மக்கள் மத்தியில் பீதியும் சந்தேகமும் வலுவடைந்து வருகிறது.
விரக்தியடைந்த, இல்லாதவர்கள் என்ற மனிதப் பட்டாளம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக இருந்தாலும் நேர்த்தியான உள்ளக கட்டமைப்பு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சமூக பாதுகாப்பு என்பன அங்கு காணப்படுகின்றது. ஸ்கன்டிநேவிய நாடுகளில் மிக அதிகமாகவே காணப்படுகின்றது.
எமது சமூகத்தில் தெரியும் இந்த குணங்குறிகள் இந்த சமூகத்தை பிடித்த நோயின் அறிகுறிகளாகும்.
ஒரு பண்பாட்டு எழுச்சியொன்று தேவைப்படுகிறது. சுரண்டல், தீண்டாமை, பால் ரீதியான ஒடுக்குமுறை இவை எல்லாவற்றையும் ஒழித்த மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் ஒரு உயரிய கலாச்சார சூழல் தேவைப்படுகிறது.
ஐரோப்பாவில் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன்கூட வீதியில் புன்னகைத்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அலுவலகங்களில், வங்கிகளில், பாடசாலையில் அரச நிர்வாக கட்டமைப்புக்களில் ஒரு இங்கிதம் இருக்கிறது.
எமது முகங்கள் இறுகிப்போய் கிடக்கின்றன. எமது வார்த்தைகள் மிகவும் உஷ்ணமானவையாக இருக்கின்றன.
எமது வாழ்வு ஜனநாயகமயப்படுத்தப்பட வேண்டும். மனித உரிமைகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். எமது சுற்றாடல் ஈவிரக்கமற்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வாழ தகுதியற்றதாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
யாழ்ப்பாணம் கச்சேரி பழைய பூங்காவிலிருந்து வட திசை நோக்கி ஆயிரக்கணக்கான வெளவால்கள் மாலை நேரங்களில் பறந்து செல்லும். கொடிய யுத்தகாலத்தில் கூட வெளவால்கள் அவ்வாறு பறந்து செல்லும்.
இப்போதெல்லாம் வெளவால்கள் வடதிசை நோக்கி பறக்கும் செக்கலான அந்த மாலைப் பொழுதுகளை இழந்து விட்டோம். பல மானிட நெஞ்சங்களையும் இழந்து விட்டோம்.
இயற்கை அழக்கபட்டு வருவதன் குறியீடே இது.
எமது வாழ்க்கையும் அப்படித்தான்.
இயற்கையும், மனிதன் இன்புற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்று தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது.
தி. ஸ்ரீதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
No comments:
Post a Comment