
பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு காத்திரமான விடயங்களை முன்வைக்க வேண்டும்- முன்னாள் நீதியரசர்
அரசுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழர் தரப்பு விடயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் குறித்த காலப் பகுதிக்குள் பேச்சை நிறைவுசெய்யும் விதத்தில் திட்டமிட வேண்டும். என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அரசாங்கங்கள் பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால், பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.
1921 ஆம் ஆண்டுதான் உள்ளூர் வாசிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினார்கள். அதுவரை இன ரீதியான தனி அலகுகள் தான் இருந்தன. இனக் குழுமங்களின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் ஆங்கிலேயர்கள் இன அடிப்படையில் வைத்திருந்தார்கள். 1917 ஆம் ஆண்டு பிரதேச முறைப்படி அது அமைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை அப்போது சபாபதி தலைமையிலான யாழ்ப்பாண சங்கம் எதிர்த்தது. பிரதேச ரீதியில் இருந்தால் பெரும்பான்மை இனத்தவர்கள் கூடுதல் பலம் பெற்று விடுவார்கள். சிறுபான்மை இனத்தவர்களைக் கணக்கிலெடுக்க மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். ஆனால் தமிழர்களுக்குக் கொழும்பில் ஓர் ஆசனம் தருவோம் என்று பெரும்பான்மையினத்தவர்கள் நம்பிக்கையளித்தார்கள்.
எனினும் 1921 இல் தேர்தல் வந்தபோது வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்குக் கொழும்பில் சலுகைகள் தேவையில்லை என்றார்கள். தமிழர்கள் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இனம் என்பதால் கொழும்பில் அவசியம் இல்லை என்றார்கள். ஆக, வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் என்பதை அன்றே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரதேசத்தில் தனிப்பட்ட மொழி, கலாசாரம், சீதோஷ்ண நிலை வேறாக இருப்பின் சுயமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது உலக உரித்தாவணங்கள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் பேசும் மக்கள் இந்த உரித்தை இழந்துவிடக்கூடாது. அரசாங்கமும் இதனை உணர்ந்து பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். தமிழர் தரப்பும் வெறுமனே பேச்சில் கலந்துகொள்ளாமல் காத்திரமான விடயங்களை முன்வைத்து இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வொன்றை எட்டும் வகையில் செயற்பட வேண்டும். என்றார்
No comments:
Post a Comment