16 August 2014

10 வருடத்துக்கு காணி ஒன்றை வைத்திருந்த காரணத்தைக்கொண்டு அதை உரித்துகோர முடியாது

இலங்கையில் தனியார் காணியை, 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தடைகளும் இன்றி வைத்திருந்த காரணத்தைக் காட்டி, அதனைச் சொந்தமாக்கிக் கொள்ள இருக்கின்ற சட்ட ஏற்பாடு, வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் யுத்த காலத்துக்கு பொருந்தாது என்றும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியவர்கள், அவர்களின் காணி உரிமையை மீளப் பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருமாறு பரிந்துரை செய்யுமாறு தெரிவித்த எல்எல்ஆர்சி ஆணைக்குழு பரிந்துரைக்கமைய புதிய சட்ட மசோத தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இலங்கையில் காணி உள்ளிட்ட அசையாச் சொத்துக்களை 10 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக தடையின்றி வைத்திருந்ததன் மூலம் அந்தச் சொத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ஆட்சியுரிமையை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் செல்லுபடியற்றதாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது காணி உள்ளிட்ட அசையாச் சொத்துக்களை மீளவும் பெற்றுக்கொள்ளும் வகையில் காணிச் சட்டத்தில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்து இருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் இலங்கையரும் தமது சொத்துரிமைகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதன்மூலம் தமது சொத்துக்களை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார் ஹக்கீம்
 
யுத்தத்தினால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இடம்பெயரச் செய்யப்பட்டவர்களின் காணிகளை ஆட்சியுரிமை அடிப்படையில் வேறு நபர்கள் சொந்தமாக்கிக் கொண்டிருப்பதை செல்லுபடியற்றதாக்குவதற்கே இந்தச் சட்டத்திருத்தம் தேவைப்படுவதாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
1983-ம் ஆண்டு மே முதலாம் திகதி தொடக்கம் 2009-ம் ஆண்டு மே 18-ம் திகதி வரையான காலப்பகுதிக்கும் மட்டும் பொருந்தும் விதத்தில், ஆட்சியுரிமைக் கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.
 
குறிப்பிட்டக் காலப்பகுதிக்குள் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது அசையாச் சொத்துக்கான உரிமையை பாதுகாப்பதற்கு இயலாதவராக இருந்து வெளியேறியவர்களுக்கே புதிய சட்டத் திருத்தம் ஏற்புடையதாகின்றது.
 
இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஓராண்டு காலப்பகுதிக்குள் சட்டபூர்வ சொந்தக்காரர்கள் தமது காணிக்கான உரித்தினை நீதிமன்றத்தினூடாக கோர முடியும்.
எனினும் புதிய சட்டம் முதல் 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகுமாக இருந்தால், அதன் பின்னர் போடப்படும் வழக்குகள் நடைமுறையில் எப்படி அமையும் என்பதை நீதிமன்ற வழக்குகளில் தான் தீர்மானிக்கலாம்' என்று வழக்கறிஞர் கே.வி. எஸ். கணேஷராஜன் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெருமளவான மக்கள் குடியிருப்பு காணிகள் ஆயுதப்படைகளின் பாவனைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பதில் கொண்டுவரப்பட்ட தடை தொடர்பான மற்றுமொரு சட்டமூலத்திற்கும் இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இலங்கையில் 100 வீதம் முத்திரைக் கட்டணம் செலுத்தி வெளிநாட்டவர்கள் காணி வாங்கலாம் என்று இருந்த சட்ட ஏற்பாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து, (தொடர்மாடிகளில் 4-ம் மாடி அல்லது அதற்கு மேல் உள்ள குடியிருப்புகளைத் தவிர) வெளிநாட்டவர்களுக்கான காணி விற்பனை இலங்கையில் முழுமையாகத் தடை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment