25 August 2014

கிணறுகளில் எண்ணெய் கசிவு 800 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

வலிகாமம் தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சுன்னாகத்தில் இயங்குகின்ற இலங்கை மின்சாரசபையின் சுன்னாகம் மின்சார நிலைய மின்பிறப்பாக்கியில் இருந்து நிலத்தில் விடப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்திற்குள் ஊற்று நீருடன் கலந்து சுன்னாகம் பிரதேசத்தின் பெரும் பகுதிகளில் கிட்டத்தட்ட 800 குடும்பங்களின் கிணறுகளில் நீருடன் கலந்திருக்கின்றதால் அப்பிரதேச மக்கள் அக்கிணறுகளிலிருந்து பெறப்படும் தண்ணீரை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்லது விவசாயம் செய்வதற்கோ முடியாத நிலையில் உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் மேற்படி விடயம் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் அப்பிரதேசத்திற்கு சென்று இதனை நேரில் பார்த்ததாகவும் அப்பகுதி கிணறுகளில் எண்ணெய் கசிவு இருப்பதையும் உறுதி செய்துள்ளனர். இதனால் 700 தொடக்கம் 800 குடும்பங்கள் வரையிலானவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் இந்த கழிவு எண்ணெய் கசிவானது சுன்னாகம் மாத்திரமன்றி பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக்கொண்டே வருகின்றது. ஆகவே இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் முதற்கட்டமாக மக்களின் உடனடித் தேவையினை நிவர்;த்தி செய்யும் முகமாக வட மாகாணசபை தண்ணீர் பவுசரை வழங்கியிருக்கிறது. அடுத்த கட்டமாக மின்சார சபைக்கு எதிராக வழக்குத் தொடரவும் ஆலோசித்து வருகிறது என்றார்.
 
இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்குடனேயே சனிக்கிழமை அப்பிரதேசத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் பார்த்ததாகவும் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையோ அல்லது சன்னாகம் மின்சார நிலையமோ வடக்கு மாகாணசபையின் அதிகாரத்திற்கு உட்படாதவையாகும். ஆகவே வடக்கு மாகாணசபை மத்திய அமைச்சருடனோ, ஜனாதிபதியுடனோ  தொடர்பு கொண்டுதான் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment