16 August 2014

தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்

தமிழக மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படையினருக்குமிடையிலான மோதல்கள் தொடர்பாக தமிழக பாராதீய ஜனதா கட்சியின் ஏற்பாட்டில் சென்னையில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
 
மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் மீனவப் பிரதிநிதிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
 
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுவரும் நிலையில், மீனவர்களுக்கான மாற்று வழிகள் குறித்து அதாவது ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வகையில் படகுகளை வாங்கித் தருவது, அதற்கென வலைகளை வாங்குவது, துறைமுகங்கள் அமைப்பது போன்றவை குறித்தும்,  ட்ரால் நெட் எனப்படும் இழுவலைகளைப் பயன்படுத்துவது தொடர்ந்து ஒரு பிரச்சனையாக இருக்கும் நிலையில், ட்ரிப் நெட் எனப்படும் வலி வலை, தூண்டில் போன்றவற்றைப் பயன்படுத்த மீனவர்களை ஊக்குவிப்பது, பயிற்சியளிப்பது ஆகியவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 
ராமதாதபுரத்தில் மூக்கையூர் உள்ளிட்ட இரண்டு இடங்களிலும் தஞ்சாவூரில் ஒரு இடத்திலும் மீன் பிடித் துறைமுகங்களை அமைத்தால், மீனவர்கள் தொடர்ந்து இலங்கையை நோக்கிச் செல்வது தடுக்கப்படும் என்றும் மீனவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
 
கச்சத் தீவு குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். 6 மாவட்ட மீனவர்களும் ஒப்புக்கொள்ளும் வகையில் பத்து அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் இறுதிப்படுத்தப்பட்டன.
 
இலங்கை வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் கூட்டம்
 
இது இவ்வாறிருக்க இலங்கைக் கடற்பரப்பினுள்ளே எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் வவுனியாவில் நேற்று(16-08-2014)- சனியன்று நடைபெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய வருகையைத் தடுப்பதற்காக ஒரு சில மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்துவிட்டு, பின்னர் அவர்களை விடுதலை செய்வதென்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றும் இதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று தெரிவித்துள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து பேச்சுக்களை நடத்தி, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியிருக்கிறது.
 
மேலும், காலம் காலமாக நடைபெற்று வந்தது போன்று நாட்டின் தென்பகுதியில் உள்ள பெரும்பான்மை இன மீனவர்கள் பருவ காலத்தில் வடபகுதிக்கு வந்து தொழில் செய்துவிட்டு உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அவர்களை நிரந்தரமாக வடபகுதியில் குடியிருத்தி முழுமையாகத் தொழில் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது,
 
வடமாகாணத்தில் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ள, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள கடற்றொழிலாளர் இணையம், குறிப்பாக வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக இடம்பெயர்ந்தவர்களாக இன்னும் இருக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது
 
வடபகுதி மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்திற்குப் பதிலாக அரசாங்கம் வலைகளை வழங்கியுள்ளது. விலையேற்றப்பட்டுள்ள எரிபொருளைப் பெறுவதற்கு மீனவர்களிடம் வசதியற்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த மானியத்தை வழங்காமல், அவர்களுக்கு வலைகளை வழங்குவதால் எந்தப் பயனும் கிடையாது என கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
 
இக்கலந்துரையாடலில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும், சர்வதேச கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுமான ஹேர்மன் குமார, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதித் தலைவர் எம்.எம்.ஆலம், மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment