19 August 2014

சப்ரகமுவ பல்கலைகழக தமிழ் மாணவனை விடுவிக்க கோரி போராட்டம்

சப்ரகமுவ பல்கலைகழக தமிழ் மாணவர்கள் இருவர் கடந்த 09ம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து பல்கலைகழக மாணவர் தலைவர் ரசிந்து ஜயசிங்க  மனித உரிமைகள் ஆணைக்குமுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தமிழ் மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் சகல பல்கலைகழக மாணவர்களையும் அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க கொழும்பில் சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பல்கலைகழக மாணவர் தலைவர் ரசிந்து ஜயசிங்கவும் கலந்து கொண்டார்.

நஜித் இந்திக்க  இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் சப்ரகமுவ பல்கலைகழகத்தில் இடம்பெறும் சம்பவங்களானது அரசியல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இடம்பெறுவதாகவே நாம் கருதுகின்றோம். காரணம் கடந்த 03-08-2014 அன்று பல்கலைகழகத்தில் தாக்குதலுக்குள்ளான மாணவன் தொடர்பாக முன்னுக்கு பின் முரணான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையோகும். இந்த விடயங்களை பார்க்கும் போது அரசியல் நோக்கத்திற்காக மாணவனை தாக்கிவிட்டு பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து அச் சம்பவத்தை மறைக்குமுகமாக மாணவனை கைது செய்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

மாணவர் தலைவர் ரசிந்து ஜயசிங்க இங்கு தெரிவிக்கையில் பல்கலைகழக யோகநாதன் நிரோஜன்- நெடுங்கேணி, வவுனியா( இரண்டாம் வருடம்)   தமிழ் மாணவன் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டார் என்றும் சுமூகமான சூழலுக்கு பங்கம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மாணவரை கைது செய்ததுடன் ஏனைய இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று மாணவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.
 
எதிர்வரும் நாட்களில் இந்த மாணவனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் சகல பல்கலைகழக மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment