27 August 2014

த.தே.கூட்டமைப்பின் புலுடா அரசியலுக்கு மாற்றான அற அரசியலுக்கான வரலாற்று அவசியம்

டெல்லிக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் இந்திய நடுவண் அரசினால் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் தமிழ் மக்களின் சமத்துவம்-நீதி-கண்ணியம்-சுயமரியாதை பேணப்படுவது

இதற்காக இலங்கையின் அரசியல் சகல அரசியல் தரப்பினரும் இணைந்து செயற்படவேண்டும் என்று  இதையொத்த செய்தியை இந்தியா பலதடவை சொல்லியிருக்கிறது.

ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன தேவையென்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருமுகமாக ஒருபோதும் திட்டவட்டமாக சொல்லியதில்லை.

இலங்கையில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக காட்டும் அக்கறை மக்களின் ஜீவாதார நலன்களில் இருப்பதில்லை என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பல்வேறு தரப்பினரிடையேயும் விசனத்தையும் எரிச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் யதார்த்தமான அரசியல் அபிலாசைகள் ஜீவாதார நலன்களில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. இனப்பிரச்சனைக்குத் தீர்வு அதற்கான செயற்பாடுகள் என்பதைவிட மோதல் போக்கை தீவிரப்படுத்தி தங்கள் பங்கிற்கு உருப்படியாக ஒன்றும் நிகழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காக அல்லாமல் புலம்பெயர் தமிழர்களின் ஒரு சிறிய வீதத்தினரான அதிதீவிரவாதப் பிரிவினரை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் செய்கிறார்கள்.
இந்தசக்திகள் ஒரு பல்லினப்பாங்கான வாழ்வு இலங்கையில் ஸ்தாபிக்கப்படுவதை பற்றிய பிரக்ஞையோ அக்கறையோ கொண்டதல்ல.

இங்கு தமிழ் மக்கள் வாழவேண்டும் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள்-த.தே கூ மனசாரவிரும்பவதாகவும் தெரியவில்லை.

ஆரம்பத்திலிருந்தே அவர்கள் 13 வது திருத்தச்சட்டம் தொடர்பாக அக்கறைக் காட்டவில்லை. அதுவொரு தீண்டத்தகாத சொற்பிரயோகமாகத்தான் கால்நூற்றாண்டுகளாக இவர்களால் பார்க்கப்பட்டது. முற்றாக அதற்கெதிராகவே இழிவாக பேசியும் எழுதியும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி இடையறாது பேசிவந்தவர்களும் இருக்கிறார்கள்.

13வது ஆதரித்ததற்காக தலைவர் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றியோ சந்திரிகாவின் சமஷ்டி முறையிலான தீர்வுக்கான வரைபுகளில் பங்களிப்பு செய்ததற்காக கல்வியாளர் நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டது பற்றியோ இதுபோன்ற அளவுகணக்கற்ற சம்பவங்களிலோ இவர்கள் எந்தகுற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தியதுமில்லை. குரல் எழுப்பியதும் இல்லை.

இவர்களது சந்தர்ப்பவாதமும் ஆரவாரமும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் இல்லாமல் செய்யும் நிலைநோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.

அண்மைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மாகாணச் செயலாளாரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட இல்லையென்றளவில் முடிந்திருக்கிறது.

தற்போது இவர்கள் புலம் பெயர் தமிழர்களை மற்றும் சர்வதேச சமூகத்தைக் காட்டி வெருட்ட முற்படுவதால் அரசு தவிர தெற்கின் ஜனநாயக முற்போக்கு சத்திகளிடையேயும் இவர்கள் தொடர்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்விற்கு ஆதரவான தெற்கின் ஜனநாயக சக்திகளைக்கூட இவர்களின் செயற்பாடுகள் தடுமாற வைத்துள்ளன.

“கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”என்ற கதைதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவர்களை மாத்திரம் குறைகூறிப் பயனில்லை.  இவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவந்து தமது தலைவிதியை எழுதச்செய்த தமிழ் மக்களையும் தான் சொல்லவேண்டும் .

இவர்களின் பொய்சூழ் - உணாச்சியூட்டும் -போதை-மோசடி அரசியலுக்கு எதிராக தமிழ்மக்கள் மத்தியில் சுடர் விடும் அறிவுடன் கூடிய புதிய அரசியல் பண்பாடு உருவாக்கப்படுவதற்கான வரலாற்றுஅவசியம் எழுந்துள்ளது.

மானசீகமாக சமூகத்தை நேசிப்பவர்கள் -வரலாறு சமூகமுரண்பாடுகளை அநீதிகளை உணர்ந்தவர்கள் - அர்ப்பணம் - எளிமை - துணிச்சல் கொண்டவர்கள் முன்வரவேண்டு ம். காலம் கடந்துகொண்டிருக்கிறது.

சுகு-ஸ்ரீதரன்

No comments:

Post a Comment