28 August 2014

பெரும்பான்மை என்பது சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதல்ல. அது ஜனநாயகமும் அல்ல

இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் வெளிநாட்டு மோகத்தை கைவிட்டு உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வைத்து த.தே.கூ பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை நியாயமில்லாத விடயமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

த.தே.கூ இந்தியா சென்று இந்திய பிரதமரை சந்தித்தமை தொடர்பாக ஹசன் அலி தெரிவிக்கையில் தீர்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாடு செல்ல வேண்டாமென கூறும் அமைச்சர் திஸ்ஸ விதாரண அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தலைவராக இருந்தபோது இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக 100 இற்கு மேற்பட்ட தடவைகள் கூடி தயாரித்த இறுதி அறிக்கைக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது.

இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவுக்கு இடமில்லாதபோது அவர் இவ்வாறு கூறுவதில் என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினால்தான் கிழக்கில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடிந்தது. தமிழ், முஸ்லீம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை என்பது சிறுபான்மையினரை அடக்கி ஆள்வதல்ல. இனங்களுக்கிடையில் சுமூகமான உறவு காணப்படும் போது அதனை இல்லாமல் செய்பவர்களுக்கு எதிராகவே பெரும்பான்மை பலம் பாவிக்க வேண்டும்.

பெரும்பான்மை சிறுபான்மையை நசுக்குவதல்ல. இது ஜனநாயகமும் அல்ல. பிழையான அணுகுமுறையினால் நாளுக்கு நாள் நிலைமை கட்டுமீறிச் செல்கின்றது. இதனால் புது புது அமைப்புக்களும் மத விவகாரம் தொடர்பாக பிரச்சனைகளும் உருவாக்கின்றன. சுமூகங்களை கூறுபோட்டுக் குளிர்காய எண்ணுபவர்களுக்கு அதனாலேயே ஆபத்து ஏற்படும். இது முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கு ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment