26 June 2015

வீட்டின் தலைவன் ஒரு பெண்

அதிர்ச்சியடைய வைக்கும்படி 50,000 பெண்கள் வடக்கில் ஏக குடும்ப பராமரிப்பாளர்களாக மாறியுள்ளனர்
போர் முடிந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர், நாட்டின் வட பகுதியில் அதிர்ச்சி தரும் வகையில் பெண்கள் தலைமையேற்று பராமரிக்கும் வீட்டுடமைகளின் எண்ணிக்கை 50,000 என ஸ்ரீலங்கா மதிப்பிட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்தைய ஆய்வு, வடக்கிலுள்ள பெண்களுக்கும் மற்றும் தெற்கிலுள்ள பெண்களுக்கும் இடையில் பாரிய பொருளாதார இடைவெளிகள் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சமூகத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்களால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி முந்தைய மோதல் வலயத்தில் பெண்கள் தலைமையேற்று பராமரிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 40,000 க்கும் 60,000 க்கும் இடையில் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
2010ல் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பெண்கள் அபிவிருத்தி மையத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்கள் வட பிராந்தியத்தில் அண்ணளவாக 40,000 வரை இருக்கும் என்று சொல்லப்பட்டது - இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 20,000 குடும்பங்கள் உள்ளன. “ஆண்கள் குடும்பத் தலைவர்களாக இருப்பதை மூன்று காரணிகள் குறைத்துள்ளன: போர், காணமற் போனமை அல்லது இராணுவத்தினால் கைது செய்து வைத்திருத்தல்” என்று அந்த மையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் அந்த ஆய்வறிக்கை வெளியான உடனே தெரிவித்திருந்தார்.
அதேவேளை தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த யுத்த விதவைகள் கிட்டத்தட்ட 90,000 பேர் வரை உள்ளார்கள், அவர்களில் அநேகர் குடும்பத்தை பராமரிப்பவர்களாகவும் உள்ளனர், இந்த புதிய பாத்திரத்தை போரினால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு மாகாணங்களிலும் பெரும்பான்மையாக வாழும் பழமைவாத தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களே வகித்து வருகிறார்கள்.
சமூகத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள் கூறுவது, இந்தப் பெண்கள் தாங்கள் சுமக்கும் பல்வேறு பொருளாதார பொறுப்பகளைத் தவிர, தங்கள் குடும்பத்துக்கு உதவுவதற்கான தொழில் திறனையோ பொருளாதார வளங்களையோ பெற்றிருக்காதது, அவர்கள் வருமானம் ஈட்டும் திறனை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி அவர்களை சுரண்டலுக்கு ஆளாகும் நிலைக்கும் தள்ளிவிடுகிறது.
“அவர்கள் எந்த ஒரு கைவேலையையும் கற்றிருக்காததுடன் போதியளவு வருமானம் ஈட்டுவதற்கான அனுபவத்திலும் குறைவு உள்ளவர்களாக உள்ளனர். அவர்களின் தந்தைமார், சகோதரர்கள், கணவன்மார், மற்றும் மகன்மார் போன்றவர்கள் முன்பு இந்த பாத்திரத்தை பூர்த்தி செய்து வந்தார்கள் மற்றும் நீடித்த வன்முறைக்கு பின்னால் அவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் கடினமான ஒன்று,” எனக் குறிப்பிட்டார் விழுது என்கிற வடக்கை தளமாக கொண்டியங்கும் மனித வள அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளரான சாந்தி சச்சிதானந்தம்.
ஆனால் ஆச்சரியம் தரும் காரணி என்னவென்றால் ஒருகாலத்தில் அவர்களின் ஆண்களில் தங்கியிருந்த இந்தப் பெண்கள், உடனடியாக வெறுமே தங்கள் சொந்தக் குடும்பத்தை பராமரிப்பவர்களாக மாற்றம் பெற்றது மட்டுமன்றி அவர்களது தூரத்து உறவான குடும்பங்களைக் கூட கவனிக்க வேண்டி உள்ள நிலமைதான்.
சிவானியின் தெரிவு
“நான் ஒரு கூலியாளாக ஒருபோதும் வேலை செய்தது கிடையாது. நான் காலை வேnorth women-1ளைகளில் சீமேந்தை கலவை செய்கிறேன் மற்றும் மாலை வேளைகளில் செங்கற்களை சுமந்து எனது கிராமத்தில் நடக்கும் கட்டிட வேலைகளுக்கு உதவுகிறேன்,” எனச் சொன்னார் 40 வயதான, நான்கு பிள்ளைகளின் தாயான சிவானி துரையப்பா. “ நான் இதைச் செய்தே ஆகவேண்டும் ஏனெனில் எனது குடும்பத்துக்கு பணம்; தேவையாக உள்ளது” என்று அவர் உறுதியுடன் சொன்னார்.
வாழ்க்கை அமைதியாகவும் மற்றும் சௌகரியமாகவும் இருந்த ஒரு காலத்தை சிவானி நினைவு படுத்தினார். குடும்பத்துக்குச் சொந்தமாக வெங்காயம் மற்றும் புகையிலைத் தோட்டங்களுடன் இரண்டு சிறிய படகுகளும் இருந்தன. போர் அவர்களை விழுங்குவதற்கு முன்பு அவளது சகோதரனும் கணவனும் அப்போது வீட்டில் இருந்தார்கள்.” விரைவில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டது, எனவே அந்த படகுகள் சிதைந்து போயின. இராணுவம் பயிர்ச்செய்கை நடத்த எங்களை அனுமதிக்கவில்லை அதனால் அந்த நிலமும் கைவிடப்பட்டது” அவர் அதை நினைவு படுத்தினார். யுத்தத்தின் சாட்டையடியின் விளைவாக சகோதரன் மற்றும் கணவன் ஆகிய இருவரையும் இழந்த சிவானி, இப்போது மீண்டும் வயலுக்குத் திரும்பியுள்ளார், மற்றும் அவரது சகோதரி அந்த சிறிய படகுகளில் ஒன்றை வாவியில் மீன்பிடிக்க பயன்படுத்துகிறாள்.
நிசங்காவின் போராட்டம்
24 வயதான நிசங்காவுக்கு கூட தினசரி போராட்டம்தான். போர் முடிவடைந்த சமயத்தில் அவள் பெற்ற குழந்தைக்கு இப்போது ஐந்து வயது. திருமணம் முடித்த உடனேயே அவளது கணவன் அவளைக் கைவிட்டுச் சென்றுவிட்டான்.
பொறுப்புக்களின் சுமைகளினால் அல்லாடினாலும், இந்த ஒற்றைத் தாய், தன்னை பெற்றெடுத்த தாய், இளைய சகோதரிகள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரைக் கவனிக்க வேண்டியுள்ளது. “நான் ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். நான் எந்த கைவேலையையும் கற்கவில்லை மற்றும் ஓரளவே வாசிக்க முடியும். நான் வயல்களில் வேலை செய்தும் கட்டிட வேலைகளுக்கு உதவி செய்தும் வருகிறேன்” என்று சொல்லும் நிசங்கா வீட்டில் அடுப்பு எரியவேண்டும் என்பதற்காக  இரண்டு பகுதிநேர வேலைகளை செய்யவேண்டிய தேவையை  வலியுறுத்தினாள்.
தங்கள் சொந்த தொழில் திறன் பற்றாக்குறை மற்றும் பழமையான கலாச்சாரம் என்பனவற்றால் கட்டுப்படுத்தப் பட்டுள்ள இவர்கள், ஒரு ஆணின் உலகம் என்று சொல்லப் படுவதற்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள மிகவும் சிரமப் படுகிறார்கள், அது அவர்களது கடும் உழைப்பை சுரண்டுவதற்கு இடமளிக்கிறது.
சிவச்சந்திரன் சொல்வதின்படி, “பெண்களை வேலைக்கு வைப்பது மலிவானதாக மாறியுள்ளது – ஆண்கள் அதிகளவு நாட்கூலியை கோருவதால். தங்களுக்கு கிடைப்பதை பெண்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அது இந்தப் பிரச்சினையின் மற்றொரு பரிமாணம்.
மற்றவர்களைவிடக் குறைவு
அநேகமாக பெண் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், அவர்களது சக ஆண் தொழிலாளர்களை விட அது 50 விகிதம் குறைவானதாகும். மயில்லயிப்பல் தங்கவேலு அப்படியான ஒரு பெண், அவர் தனது இரண்டு பிள்ளைகள், பெற்றோர் மற்றும் மூன்று சகோதரிகளுக்கு கட்டிட தளத்தில் வேலை செய்வது மூலம் உதவி வருகிறார். “எனது கணவர் காணாமற் போய்விட்டார்” என்றார் யாழ்ப்பாண வாசியான 31 வயதுள்ள அந்தப் பெண். “எனது சகோதரிகள் பாடசாலையில் படிக்கிறார்கள். எனது மூத்த பிள்ளையும் படிக்கிறது. எனது பெற்றோர்களுக்கு வேலை செய்ய முடியாது” அவளது நாளாந்த வருமானம் துச்சமான 1.25 அமெரிக்க டொலர்களாகும் அதே வேலைக்கு ஒரு ஆண் சம்பாதிப்பதில் பாதியளவு ஆகும்.
“பெண்கள் மலிவான விலையில் வேலைக்கு கிடைப்பதால் அவர்கள் விரும்;பப் படுகிறார்கள்,” என விளக்கினார் யாழ்ப்பாணத்திலுள்ள கம்பனை முகாம் வாசிகள் குழுவின் தலைவரான நாகராசா தவசெல்வம், அவர் மேலும் சொல்கையில் சில குடும்பங்களில் இப்போது ஆண்கள் பொருளாதார உதவிகளுக்கு பெண்களில் தங்கியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். அப்படியான பல வீட்டுக் கணவன்மாரில் தவசெல்வமும் ஒருவர்.
பெண்கள் குடும்பத் தலைமையாக உள்ளதை ஏற்றுக்கொள்வதை குறைத்துக்காட்டியிருக்கும் மரபுக்கு உள்ள பல காரணங்களில் ஒன்று உழைப்பைக் கடுமையாகச் சுரண்டும் போக்குத்தான் என்று அபிவிருத்திப் பணியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். “ அது பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க உதவும்” என்று சுகுணண் என்கிற முன்னாள் நிவாரணப் பணியாளர் சொன்னார். ஏப்ரலில் ஒரு புதிய மதிப்பீடு காட்டுவது வடக்கிலுள்ள பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை 50,000 ஆக மாறியிருப்பதை, இது குறைத்துக் காட்டும் பிரச்சினை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுக்கு ஒரு அடையாளம்.
“யுத்த விதவைகள் விசேட குழுவை சோந்தவர்கள். பின்னர் இங்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் வறியவர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு உதவிகள் தேவை,” என்றார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரான ரூபவதி கேதீஸ்வரன்.
தற்போது நடைபெறும் திட்டங்கள்
தற்போது நடைபெற்றுவரும் பல திட்டங்கள் உள்ளன, பெருமளவு தொழில் திறனற்ற இந்தப் பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்குதல் அதில் ஒன்று. 31 வயதான கிளிநொச்சியை சோந்த சாவித்திரி பொன்னுசாமி அப்படியான ஒரு பெண், அவர் ஆடை தயாரித்தல் மற்றும் பாய் இழைத்தல் அகியவற்றை பயின்று வருகிறார். “ மிக கடுமையாக உழைத்தாலும் நாங்கள் சம்பாதிப்பது மிகவும் சொற்பம். சாதனங்களைச் சந்தைப்படுத்த எங்களுக்கு முறையான கட்டமைப்பு இல்லை” என அவர் புலம்பினார், அவரது சம்பாத்தியம் அவரது இரண்டு பிள்ளைகளைக் கவனிக்கவே அதிகம் போதுமானதாக இல்லை என அவர் முறையிட்டார்.
இதுவரை யுத்த விதவைகளுக்கு உதவுவதற்கு ஒரு சில திட்டங்கள் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகிறது, விசேடமாக சிறிய வியாபாரங்களை ஆரம்பிக்க உதவுவது போன்றவை அநேக நன்கொடையாளர்கள் தொடர்ந்து உதவி வரும் அதேவேளை இந்தப் பிரச்சினையின் தீவிரத்துக்கு போதிய முன்னுரிமை வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கவில்லை எனக் கலைமகள் தெரிவிக்கிறார்
“யுத்தம் மிகவும் கடுமையாக இருந்தது, ஆனால் இந்தப் பொருளாதாரச் சுமைகள்north women-2அதையும் விடக் கடினமாக உள்ளன” என்றார் கலைமகள் பொன்னம்பலம் என்கிற 38 வயதான தாய், அவர் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். பலரும் அவரை கணிசமான வருமானம் பெறும் ஒரு சமர்த்தான பெண் எனக் குறிப்பிடுகிறார்கள் ஆனால் ஏழு வயிற்றுக்கு உணவளிக்க வேண்டிய தேவை கலைமகளுக்கு உள்ளது. “ அது அத்தனை சுலபமல்ல, இன்னும் அரசாங்க உதவி எதுவும் கிடைக்கவில்லை” என்றார் அவர்.
இதற்கிடையில் கிளிநொச்சியில் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு உதவுவதற்கு ஒரு தேசிய மையம் அமைக்கப்பட உள்ளது. அமெரிக்க டொலர் 260 வரையான குறைந்த வட்டிக் கடன்கள் மற்றும் சிறிய வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான ஏனைய உதவிகள் என்பனவற்றை அது வழங்கவுள்ளது. இந்த புதிய முயற்சிகளைத் தவிர, புதிய ஆய்வு உள்நாட்டு யுத்தத்தக்குப் பின்னான பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு இடையூறுகள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள பெண்களுக்கு இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பனவற்றை கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஸ்ரீலங்காவில் பெண்கள் வேலையில்லாதிருக்கும் விகிதம் 6.6 விகிதமாகும்
யாழ்ப்பாணத்திலுள்ள பருத்தித்துறை அபிவிவிருத்தி நிலையத் தலைவரான ஆய்வாளர் கலாநிதி. முத்துக்குமாரன் சர்வானந்தன் தெரிவிப்பதின்படி, வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பெண்கள் வேலையில்லா விகிதம் மிகவும் அதிகம். அது யாழ்ப்பாணத்தில் 10.9 விகிதமாகவும், கிளிநொச்சியில் 29.4 விகிதமாகவும், மன்னாரில் 21.6 விகிதமாகவும் முல்லைத்தீவில் 20.5 விகிதமாகவும் மற்றும் வவுனியாவில் 9.0 விகிதமாகவும் உள்ளது.
புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவிக்கையில் “நீண்ட கால யுத்தத்தினால் பாரிய பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளது. அதற்கு தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வேலைகள் அவசியம்” என்றார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி- தேனீ இணையம் 


No comments:

Post a Comment