11 July 2015

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும்

நாபா எனக்கு ஒரு வினோதம் என்றால் வடக்கு கிழக்கு மாகாணசபை எனக்கோர் மனத்தாக்கம். இன்று தம் அரசியல் லாபங்களுக்கா பலரும் பலவிதமாக விமர்சிப்பது போல, இந்தியாவால் தங்க தாம்பாளத்தில் வைத்து ஈ பி ஆர் எல் எப் வசம் அது தரப்படவில்லை.
பல முன்னணி தோழர்களை பலிகொடுத்து எத்தனையோ பழிகளை சுமந்து அமைதிப்படை முகாம்களில் முடங்கி எம் மக்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை நனவாக்க அந்த சபையின் உருவாக்கத்திற்கு ஈ பி ஆர் எல் எப் முகம்கொடுத்த துன்பங்களை பலர் அறியமாட்டார்கள். அதனால் வடக்கு கிழக்கு மாகாண சபையின் உருவாக்கம் அதற்கு ஏற்பட்ட இடையூறு என்பன பற்றி பதிவு செய்கிறேன். 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பொது வாழ்க்கைக்கு திரும்ப விரும்பியவர்களை புலிகள் விடவில்லை. தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறானவர்கள் என சந்தேகித்து மீண்டும் தாக்குதலை தொடுத்தனர். வேறு வழி இன்றித்தான் இந்திய அமைதிப்படையிடம் பாதுகாப்பு தேடவேண்டிய நிலை ஈ பி ஆர் எல் எப் தோழர்களுக்கு ஏற்பட்டது.
அவ்வாறு அமைதிப்படை முகாம்களில் இருந்தவர்களை புலிகள் யார் பொது மக்கள் யார் என அடையாளம் காட்ட உதவும்படி அமைதிப்படை அதிகாரிகள் கேட்க பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் தான் ரட்ணம் முதல் முதலாக துறைநீலாவணை முகாமில் அமைதிப்படை சீருடை அணிந்து செயல்பட வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது.
இந்தியாவால் தமக்கு வழங்கப்பட்ட எல்லா சந்தர்பங்களையும் தவற விட்டது மட்டுமல்ல ஒப்பந்தத்தின் பின் உறவுகளுடன் மீண்டும் இணைந்து வாழ நினைத்த தோழர்களையும் தேடியழிக்கும் செயலையும் புலிகள் தொடர்ந்தனர்.
இடைக்கால நிர்வாகத்தில் மட்டுமல்ல இந்த மண்ணிலும் மற்ற இயக்கங்கள் இருக்க கூடாது என்ற புலிகளின் முடிவு மற்றவர்களையும் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தூண்டியது. முதலில் புலிகளின் ஊடுருவலை தடுக்கவே தோழர்கள் அமைதிப்படைக்கு உதவினர்.
இந்த நேரத்தில் தான் நாபா திருமலை சீனன்குடா முகாமில் வைத்து வரதனை கொழும்பு அனுப்பி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் எமக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் பற்றிய தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து முன்னெடுக்க முடிவெடுத்தார். அந்தப்பணியை வரதன் திறம்பட செய்தார்.
ஆரம்பத்தில் அபு யூசுப் ஏற்பாடு செய்த பத்தரமுல்லை வீட்டில் தங்கிய வரதன், அரச இலிகிதர் சேவை சங்கத்தின் தலைவர் குணசேன மகாநாமவை சந்ததித்த வேளை கொழும்பு வந்து செல்லும் போக்குவரத்து சிரமத்தை தெரிவித்தார். மகாநாம எந்தவித தயக்கமும் இன்றி அந்த கட்டிடத்தின் மாடியில் தங்கலாம் என கூறினார்.
ஒட்டகம் கூடாரத்துள் நுழைந்தது போல முதலில் வரதன் மட்டும் தங்கிய அந்த மாடி முழுவதும் தோழர்களால் நிறைந்தது. ஈபி ஆர் எல் எப் மீளுருவாக்கம் பெற உதவிய குணசேன மகாநாம இன்று உயிருடன் இல்லை.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்ற இடதுசாரி கட்சிகளுடன் வரதன் கலந்துரையாடல் மேற்கொண்டார். கம்யூனிஸ் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சமசமாஜ கட்சி தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா , தத்துவாசிரியர் ஹெக்டர் அபேவார்த்தன, நவ சமாஜ கட்சி தலைவர் வாசுதேவ நாணயகார, விக்ரமபாகு கருணாரத்ன, சிறிலங்கா மக்கள் கட்சி தலைவர் விஜயகுமார ரணதுங்க உட்பட எச் என் பெர்னாண்டோ போன்ற பல தொழிற்சங்க வாதிகளுடனான சந்திப்புகளை அவர் மேற்கொண்டார்.
ஆரம்பத்தில் வரதனை ஆயுதபோராட்ட இயக்க உறுப்பினராகவே பார்த்த அவர்கள் கலந்துரையாடல் முடிவில் அவரின் அரசியல் அறிவு கண்டு தம் பார்வையை மாற்றிக்கொண்டனர். அதன் விளைவு தான் ஐக்கிய சோசலிச கூட்டில் (USA) எஸ் எல் எம் பி (SLMP), சி பி (CP), எல் எஸ் எஸ் பி (LSSP) யுடன் முதலில் ஈ பி (EPRLF) யும் இணைக்கப்பட்டது. பின்புதான் எஸ் ஆர் என அழைக்கப்பட்ட சிவராமின் (பின்னாளில் தராகி ) முன்னெடுப்பில் புளட் (PLOTE) இணைந்தது.
ஈழப்போராட்டத்தின் இடையில் ஏற்பட்ட பேரிளப்பான இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை போலவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்று நடைமுறைப்படுத்த நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்த மனிதநேயன் விஜயகுமாரணதுங்கவும் படுகொலை செய்யப்பட்டார்.
எம் மக்களின் நியாயமான கோரிக்கைகள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்க்கான முன்னெடுப்புகள் மேற்கொண்ட இரு பெரும் தலைவர்களை இழந்த கோபம் விஜய் மரண அஞ்சலி கூட்டத்தில் பேசிய வரதனின் பேச்சில் சுதந்திர சதுக்கத்தை அதிரவைத்தது.
சோகத்தை விடுத்து அநீதிக்கு எதிராக அனைவரையும் அணிதிரள அவர் விடுத்த அழைப்பின் நேரடி ஒளிபரப்பு அனைவர் வீடுகளுக்கும் ரூபவாகினி தொலைகாட்சி மூலம் சென்றடைந்தது. இந்த இடத்தில் நாபாவின் தீர்க்கதரிசனம் தான் என் நினைவில். திறமைகளை அடையாளம் கண்ட நாபாவை வீழ்த்தி விட்டு புலிகள் தாமும் மாண்டு மடிந்து விட்டார்கள்.
நாபாவின் அடுத்த நடவடிக்கை வடக்கு கிழக்கில் அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. அதற்கு அவரின் தெரிவுகள் அம்பாறையில் ரட்ணம், மட்டக்களப்பில் கிருபா, திருமலையில் ஜோர்ஜ், வவுனியாவில் வெற்றி, மன்னார் முல்லைத்தீவில் ரொபின், ஏ ஜி ஏ, யாழில் முகுந்தன். தம் உயிரை புலிகளின் துப்பாக்கிகளுக்கு பணயம் வைத்தே இவர்கள் அங்கு செயல்பட்டனர்.
இவர்களின் இணைப்பாளராக வரதன் செயல்பட்டார் . அப்போது மிகுந்த நிதி நெருக்கடி. நிதி பிரச்சனையை தீர்க்க வரதன் செய்த ஏற்பாடுதான் புதிய கண்ணோட்ட பத்திரிகை வெளியீடு. மக்களுக்கு உண்மை நிலைமையை கூறுவதன் மூலம் விழிப்புணர்வும் அதனால் கிடைக்கும் அவர்களின் பங்களிப்பு மூலம் போராளிகள் உணவு தேவைக்கும் வழிசமைத்தார்.
வரதன் எழுத களுபோவில உபாலி குரேயின் பதிப்பகத்தில் சிங்கள பெண் தோழர் கம்பியூட்டரில் பதிவு செய்துதர அமீன் (சிவகுமார்) அதை பத்திரிகைக்கு வடிவமைக்க பொலரஸ்கமுவ அச்சகத்தில் ராஜா, ரி என் பெரேரா (இவர்கள் பின் நாளில் ஜே வி பி யால் கொல்லப்பட்டனர்) அச்சிட அதை ஆரம்பத்தில் கிழக்கிற்கு கொண்டு செல்ல ஆதம்பாவா உதவி செய்ததால் (பின்னாளில் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரானவர் ) புதிய கண்ணோட்டம் பலர் கண்களை திறந்தது.
பல அரசியல் பிரமுகர்களை சந்தித்த வரதன் இந்திய தூதுவருடன் ஏற்படுத்திய தொடர்புதான் மிக முக்கியமானது. வரதனை திம்பு பேச்சுவர்த்தையில் கலந்து கொண்டவர் என்பதை அறிந்திருந்த தூதுவர் ஜே என் டிக்சிட் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்துள் வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்படவேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்தினார்.
அப்போது வரதன் தனது அரசியல் ஆசானான அமிர்தலிங்கத்தை மற்ற இயக்க தலைவர்களுடன் ஹோட்டல் தப்ரபேனில் சந்தித்து அவர்களை தேர்தலில் போட்டியிடுமாறும் தாம் பின் புலத்தில் முழு ஆதரவும் தருவதாகவும் கூற அவரும் சம்மதித்தார். ஆனால் அடுத்த சந்திப்பில் கட்சி முடிவுப்படி தாம் போட்டியிட விரும்பவில்லை என கூறிவிட்டார்.
மன உளைச்சலுடன் திரும்பிய வரதன் அன்று மதிய உணவுக்கு பின் மேல் மாடியில் நிலத்தில் படுத்திருந்து முகட்டை பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தவர் திடீரென என்னிடம் ராம் நாங்கள் தேர்தல் கேட்போம் என்றவர் நாபாவின் அபிப்பிராயம் அறிய என்னை சென்னைக்கு அனுப்பினார்.
நாபாவின் நோபுரப்ளம் என்ற பதிலுடன் வந்த என்னிடம் அரசியல் கட்சி பதிவு செய்யும் கால எல்லை நாளையுடன் முடிவதாக டிக்சிட் கூறியதை சொன்னார். இருவரும் அவசரமாக ஹெக்டர் அபேவர்த்தன வீட்டுக்கு சென்றோம். காலை உணவு உண்ண தயாரான அவர் எங்கள் அவசரத்தை பார்த்து எழுந்துவந்து தனது காரியாலய அறையில் தன் கையாலேயே தேர்தல் ஆணையாளருக்கு எமது கட்சி பதிவு விண்ணப்ப கடிதத்தை தட்டச்சு செய்தது தந்தார்.
இருவரும் தேர்தல் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வாவை சந்திக்க சென்றபோது ஆயுத குழுவினர் எனும் தோரணையில் எம்மை அவர் அலட்சியமாக பார்த்தார். வரதனை அறிமுகம் செய்தபோது அவர் ஒரு பட்டதாரி, முன்பு யாழ் பல்கலைகழக உதவி விரிவுரையாளர் என நான் கூற அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது.
சிறிது நேர உரையாடலின் பின் எமது கடிதத்தை வாங்கியவர் தனது உதவியாளர் மூலம் விண்ணப்ப படிவங்களை தருவித்து கட்சி பதிவிற்கு வேண்டிய ஆவண விபரம் தந்து எம்மை மலர்ந்த முகத்துடன் வழியனுப்பினார்.
வரதன் ஈ பி ஆர் எல் எப் தற்காலிக செயலாளர் நாயகமாக செயல்படும் நாபாவின் அனுமதி கடிதத்துடன் சகல ஆவணங்களும் பாரப்படுத்தப்பட்டு கட்சியின் சின்னாமாக வரதன் பூ சின்னத்தை தெரிவு செய்ய அதன் பின் கட்சி பதிவு ஏற்கப்பட்டதற்கான அறிவிப்பு வந்தது.
ஈழ விடுதலை போராட்டத்தில் முதன் முதலாக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட இயக்கம் ஈ பி ஆர் எல் எப் ஆகும். அதன் முன் முயற்சி வரதனைத்தான் சேரும். இங்கும் பொருத்தமானவரை தெரிவு செய்யும் நாபாவின் ஆளுமை வென்றது.
தேர்தல் அறிவிக்கப்பட புலிகளுக்கு பயந்து எந்த பொதுமகனும் போட்டியிட முன்வரவில்லை. ஆனால் புலிகளின் சதிவலைக்கு பின்புலமாக செயல்பட்டு தேர்தலை குழப்ப வடக்கில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் வடக்கில் மட்டும் போட்டியின்றி தெரிவாகும் சூழல் உருவாக்கப்பட்டது.
போட்டியிட ஈபி, டெலோ, ஈ என் டி எல் எப் சம்மதித்த போதும் கடைசியில் டெலோ ஒதுங்கிகொண்டது. யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு உறுப்பினர்களாக ஈ பி ஆர் எல் எப் மற்றும் ஈ என் டி எல் எப் போராளிகளே போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கில் நிலைமை வேறு விதமாக இருந்தது. திருமலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஜவாட் மரிக்கார் தெரிவித்த ஆட்சேபனையால் யு என் பி விண்ணப்பம் நிராகரிக்கப்பட முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து ஈபி யுடன் பூ சின்னத்தில் ஈஎன்டி யும் போட்டியிட்டன. மட்டக்களப்பு, அம்பாறையில் எம்மை எதிர்த்து முஸ்லிம் காங்கிரசும், யுஎன்பி யும் போட்டியிட்டன. கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ம், யுஎன்பி 1 ம் பெற மிகுதி பூ சின்னத்தில் போட்டியிட்ட எமது கூட்டின் வசமானது.
தேர்தல் நடந்த தினம் சுவாரசியமானது. நவம்பர் 19 . அது அன்னை இந்திரா காந்தியின் பிறந்த தினம் மட்டுமல்ல தோழர் நாபாவின் பிறந்த தினமும் ஆகும். அந்த தின தெரிவின் பின்புலத்தில் வரதன் செயல்பட்டது பலருக்கு தெரியாது.
கட்சி முகம்கொடுத்த முதல் கேள்வி மாகாண சபையை எங்கு அமைப்பது என்பதே. நாபாவின் பதில் திருமலை. ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன வரதனிடம் திருமலை தவிர வேறுங்கும் அமைத்தால் தமிழ் ஆளுனரை தருவேன் என பேரம் பேசினார். வரதன் பேரத்துக்கே இடமில்லை என உறுதியுடன் கூறிவிட்டார். இளைப்பாறிய ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் நளின் செனிவரட்ன ஆளுநராக திருமலை வந்தார்.
1988 டிசம்பர் 5 ம் திகதி திருமலை நகரமண்டபத்தில் முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை கூடியது. முதல் 3 மாதங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சபைக்கு வரவில்லை. தாம் மாணசபை நடவடிக்கையை அவதானித்து திருப்பதி ஏற்பட்டால் வருவதாக அறிக்கைவிட்டனர். அதனால் பேரவை தலைவர் மற்றும் பிரதி தலைவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
யுஎன்பி யில் அம்பாறையில் வென்ற சிங்களவர் பாராளுமன்றம் சென்றதால் மசூர் மௌலானா சபைக்கு வந்தார். தனது ஆரம்ப அரசியலை தந்தை செல்வாவுடன் ஆரம்பித்து தமிழரசு கட்சி சார்பாக செனட்டராக இருந்தவர் மாகாண சபைக்கு யுஎன்பி உறுப்பினராக வந்தார்.
நாபாவின் ஆலோசனைப்படி மந்திரிசபை அமைந்தது. வரதன் முதலமைச்சர், கிழக்கின் பிரதிநிதியாக கிருபா நிதியமைச்சர், ஈஎன்டிஎல்எப் கணேசமூர்த்தி புனர்வாழ்வு அமைச்சர், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அபு யூசுப் போக்குவரத்து அமைச்சர் வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களின் பிரதி நிதியாக முதலில் தயான் ஜயதிலகவும் பின் அவர் பதவி விலகியதால் ஜோ செனிவரத்தின இளைஞர் விவகார அமைச்சராகவும் மூவின பிரதிநிதிகளையும் கொண்ட அமைச்சரவை அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்த நேரத்தில் சந்திரகாசன், லக்சுமி நாகநாதன் போன்றோருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் நீர்பாசன திணைக்கள உயரதிகாரி கலாநிதி விக்னேஸ்வரன், வரதனுடன் தொடர்புகொண்டு தன்பங்களிப்பை தரும் விருப்பத்தை தெரிவித்தார். நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட முதல்தர நிர்வாகசேவை அதிகாரிகளை மாகாண சபையில் பங்கெடுக்க தூண்டியவர் அவரே.
அன்று புலிகளின் துப்பாக்கிகள் அவர்களை குறிவைத்த போதும் தமிழர்களுக்கு அதுவரை கிடைத்ததில் அதிகாரம் கூடியதாக அமைந்த அந்த சபையை முழுமைப்படுத்த அவர்கள் பட்ட சிரமம் முகம்கொடுத்த அபாயம் பலர் அறியாதது. தம் குடும்பங்களை பிரிந்து அறைகளில் தங்கி கடமையே கண்ணாக செயல்பட்ட அவர்களின் சேவையை நீடிக்க புலிகளும் பிரேமதாசவும் அவரின் பின்புலத்தில் இயங்கியவர்களும் அனுமதித்திருந்தால் அது முழுமை பெற்றிருக்கும். முள்ளிவாய்க்கால் வரை மக்கள் போயிருக்கவேண்டிய நிலையும் நிச்சயம் வந்திராது.
எந்த ஒரு தலையீடும் இன்றி செயல்பட்ட செயலாளர்கள் தம் பட்டறியை கொண்டு மாகாண நிரலில் இருந்ததை முழுமையாக செயல்படுத்த தொடங்கினார்கள். இரண்டு மாகாணங்களிலும் இருந்த அனைத்து பாடசாலைகள், வைத்திய சாலைகள், விவசாய காணி விடயங்கள் உட்பட மாகாண நிரலுக்குட்பட்ட அனைத்து விடயங்களும் மாகாண அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்பட்டன.
வடக்கு கிழக்கு மாகாண டி ஐ ஜி யாக ஆனந்தராஜா முதல்வரின் கீழ் கடமைகளை பொறுப்பேற்றார். புதிதாக பொலிஸ் சேவையில் தமிழ்பேசும் இளையோர் இணைந்தனர். அவர்களுக்கான பயிற்சிகளை சிறீலங்கா அரசின் வேண்டுகோளின் படி இந்தியா ஏற்பாடு செய்தது. அதற்கான ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சு வழங்கியது.
அப்போது நடந்த ஒரு சுவாரசியமான விவாதம் பற்றி பதிய வேண்டும். முதல்வரின் கீழ் பொலிஸ் அதிகாரம் இருந்ததால் புதிதாக பயிற்சிபெற்று வருபவர்களுக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு ஆயுதங்கள் தொடர்பாக பேசுவதற்கு முதல்வருடன் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்றிருந்தேன். பாதுகாப்பு செயலாளர் சேபால ஆட்டிக்கல எடுத்த எடுப்பில் ரிவோல்வர் மற்றும் எஸ் எம் ஜி தான் தரமுடியும் என்றார்.
முதல்வர் ஏ கே 47 வைத்திருக்கும் புலிகளிடம் எங்கள் பொலிசாரை பலிகொடுக்க போகிறீர்களா எனக்கேட்க அவரும் விடாமல் ஏ கே 47 தந்தால் உங்கள் பொலிஸ் எங்கள் ராணுவத்தை தாக்காத என கேட்டார். முதல்வர் அவரிடம் அவ்வாறான சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்தினால் நாம் அதைத்தானே செய்ய முடியும் என்றார். இறுதியில் பிஸ்டல், ஜி 3 ஆயுதங்கள் தரப்பட்டது.
பொதுப்பட்டியலில் இருந்த விடயங்கள் தான் சிதம்பர சக்கரம் போல சற்று குழப்பமாக இருந்தது. ஜே ஆர் வகுத்த சூத்திரம் அது. மத்திய அரசுக்கா ? மாகாண அரசுக்கா ? என தெளிவற்ற பட்டியல். இந்த இடத்தில் புலிகள் விட்ட தவறை குறிப்பிட வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்பதாக சுதுமலையில் கூறிய பிரபாகரன் பின் 5 அம்சகோரிக்கை வைத்து திலீபன் உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்தபின் கிடைத்த இடைக்கால நிர்வாக சபை தலைவர் பதவியில் இழுபறிப்பட்டு, பொதுமன்னிப்பு காலத்தில் கடலில் ஆயுதங்களுடன் பிடிபட்ட குமரப்பா புலேந்திரன் உட்பட பலரை சயனைட் கடிக்கவைத்து பலிகொடுத்து, வலிந்து சண்டையை தொடங்கினார்
ஆரம்பத்தில் புலிகள் எல்லை கிராம அப்பாவி சிங்களவரை கொன்றொழிக்க, அப்போது மூண்ட அமைதிப்படை புலி மோதலை தனக்கு சாதகமாக்கிய ஜேஆர் 13 வது திருத்த சட்டத்தை தமிழர் தரப்பின் ஆலோசனை எதுவும் பெறப்படாமல் அவசர அவசரமாக நிறைவேற்றி அதில் வகுத்த சூத்திரம் தான் பொதுப்பட்டியல் எனும் மத்திய அரசுக்கா ? மாகாண அரசுக்கா ? என தெளிவற்ற பட்டியல்.
திருமலை நகரசபை கட்டிடத்திலேயே பேரவை அமர்வுகளும் செயலகமும் செயல்பட்டது. மாதாந்த கூட்டங்களிற்கு வரும் உறுப்பினர்கள் பட்ட அவஸ்த்தைகள் கொஞ்சமல்ல. இன்றுபோல் காப்பற் வீதிகளில் சொகுசு வாகனங்களில் பயணிக்க முடியாத காலம். புலிகளின் கண்ணிவெடி அல்லது சினைப்பர், ஆர் பி ஜி ஆளுமை செலுத்திய காலம்.
அதனால் வடக்கு கிழக்கின் திருமலை தவிர்ந்த 7 மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்திய ஹெலிகளில் தான் அமர்வுகளுக்கு வருவார்கள், திரும்பி செல்வார்கள். சில சமங்களில் இந்திய அமதிப்படைக்கான உணவு விநியோக ஹெலிகளில் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுடன் இந்தியாவில் இருந்து உணவுக்காக கொண்டு வரும் செம்மறியாடுகளும் பயணித்து இடையில் உள்ள முகாம்களுக்கு விநியோகிக்க பட்டபின் ஆட்டுப்புளுக்ககை, மூத்திர நாத்தத்துடன் அவர்கள் திருமலை வந்தடைவர்.
பேரவை கூடும் தினத்தன்று பேரவை செயலாளர் வானத்தை பார்த்தபடி பரபரப்பாக இருப்பார். ஹெலி திருமலை மெக்கெய்சர் மைதானத்தில் இறங்கி உறுப்பினர்கள் தலைகள் தெரியும் வரை அவர் நிலை அதுதான். குறிபிட்ட அளவு (ஞரழசரஅ) உறுப்பினர்கள் இல்லை என்றால் சபையை நடத்த முடியாது என்பதே அதற்க்கான காரணம்.
இவ்வளவு சிரமத்தின் மத்தியிலும் குறிப்பிட்டு காலத்துள் உறுப்பினர்கள் தங்குமிடத்தை சிறப்பாக அமைத்திருந்ததை பார்வையிட்ட அன்றைய பாராளுமன்ற சபாநாயகர் எம் எச் முகமட் செயளாளரை பாராட்டினார். குறைந்த வளங்களுடன் சிறந்த சேவையை செய்த நிர்வாக சேவை முதல்தர செயலார்களை கொண்டிருந்த சபைக்கு முட்டுக்கட்டை போட்டவரின் வருகையும் அதே காலத்தில் நிகழ்ந்தது. (தொடரும் ........)
(ராம்)

No comments:

Post a Comment