30 October 2015

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்; 39 பேர் கைது



இலங்கையில் உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 39 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியைக் கற்கும் இந்த மாணவர்கள், தமது பாடநெறியை கணக்கியல் பட்டதாரி பாடத்திற்கு சமமாக ஏற்றுக்கொள்ளும்படி கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து மாணவிகளும், மாணவ பிக்குமார் இருவரும் அடங்குவர்.

பதாகைகளை ஏந்தியபடி உயர்கல்வி அமைச்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாணவர்களை, காவல்துறையினர் தடுக்க முற்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் மீது தடியடி நடத்திய பொலிஸார், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

அங்கு நிலைமை மேலும் மோசமடைந்ததால், மாணவர்கள் கூடி இருந்த இடத்ததை நோக்கி பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

ஆர்ப்பாட்டத்தை நடத்திய மாணவர்கள் தமது கோரிக்கையை அமைச்சிடம் முன்வைக்கவே வந்தனர் எனவும், காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறுவதைவிட கடத்திச் செல்லப்பட்டார்கள் என்றுக் கூறுவதே சரியான வார்த்தை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ், நகர மண்டபம் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் பெரும் பதற்றம் காணப்பட்டது.

No comments:

Post a Comment