14 November 2015

பாரிஸ் தாக்குதல்: உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் சர்வதேச எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பாரிசில் உள்ள புகழ்பெற்ற கலையரங்கு, உணவு விடுதிகள் உள்ளிட்ட 6 பொது இடங்களில் தீவரவாதிகள் உள்ளிட்டு கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதுடன் வெடிகுண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

புகழ்பெற்ற கலையரங்கான பட்டகிலானில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அங்கு மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள விளையாட்டரங்கில் பிரான்ஸ் – ஜெர்மனி அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் கால்பந்து வீரர்கள் உட்பட அனைவரும் பதற்றமடைந்து மைதானத்தில் குவிந்தனர். குண்டுகள் வெடித்ததை அடுத்து விளையாட்டு அரங்கம் முழுவதையும் பிரான்ஸ் பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

அந்த அரங்கில் கால்பந்து போட்டியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர் ஹொலன்டேயும் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உணவு விடுதிகள், மதுக்கடைகள் என மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஐவர் பிரான்ஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment