06 November 2015

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுதலை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் படிப்படியாக விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று மாலை கூட்டமைப்பு நடத்திய சந்திப்புகளின்போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் நேற்று உறுதியளித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 30 தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படுவர் எனவும், குற்றவாளிகளாக, தண்டனை வழங்கப்பட்ட 48 கைதிகள் தவிர்ந்த ஏனையோரின் விடுதலை தொடர்பில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் தம்மிடம் தெரிவித்தார் என்று சம்பந்தன் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் குற்றவாளிகள் என்று தண்டனை வழங்கப்பட்ட 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் விரைவில் முடிவைத் தருவதாக ஜனாதிபதி நேற்று தம்மிடம் உறுதியளித்துள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார். 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகளின்றி உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு நேற்றுக் காலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி தமிழ் அரசியல் கைதிகளைப் படிப்படியாக விடுதலை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment