06 November 2015

கூட்டமைப்பின் அறிவிப்பில் திருப்தியில்லை : அரசியல் கைதிகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்த்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலை என்ற விளம்பரம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதியில் இருந்து 6 நாட்களாக இந்த போராட்டம் இடம்பெற்றபோது உறுதிமொழியை வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தது. இந்தநிலையில் இன்று 32 பேர் எதிர்வரும் 9ஆம் திகதியும் 30 பேர், 20 ஆம் திகதியும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் இணங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அறிவித்துள்ளார்.

எனினும் இதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், விரைவில் தாம் தமது விடுதலையை கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மேல் நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள 169பேர் மற்றும் தண்டனை பெற்றுள்ள 48பேர் தொடர்பில் உரியத்தீர்வை பெற்றுக் கொடுப்பதாக தம்மிடம் உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டே தாம் உண்ணாவிரததத்தை கைவிட்டதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். எனவே முன்கூட்டிய திட்டமிடப்பட்ட ஒழுங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என்று சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடக்கோரி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட உறுதிமொழிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது அது மீறப்பட்டுள்ளது என்பதை அரசியல் கைதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதற்கிடையில் தமக்கு கிடைத்த தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பொதுமன்னிப்பு என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடமோ அல்லது பிரதம மந்திரியிடமோ நேரடியாக கேட்கவில்லை என்றும் தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய அறிவிப்பினால் ஏமாற்றமடைந்துள்ள தாம், தமது விடுதலையை நோக்கிய பயணத்துக்காக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.
 
 நன்றி- உதயன்

No comments:

Post a Comment