04 November 2015

குமார் குணரட்ணம் கைது

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் ருவன்வெல்ல, அங்குரு வெல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கேகாலை பொலிஸார் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் முன்னெடுத்த நடவடிக்கை ஒன்றின் போது அவரின் தாயாரின் வீட்டில் வைத்து அவரை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தி யட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
 
குமார் குணரட்ணம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தேடப்படுபவர் எனவும் அவரை அந்த திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்ஷான் டீ சொய்ஸா குறிப்பிடுகையில் குமார் குணரட்னத்தை கேகாலையில் கைதுச் செய்துள்ளதாக பொலிஸார் எமக்கு அறிவித்துள்ளனர். இந் நிலையில் அவர் தொடர்பில் என்ன நடவடிக்கையினை எடுப்பது என்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்தார்.
 
அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரத்னம் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டுக்குள் இருந்து இருந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கும் நிலையில் அவரின் விசா கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி அன்றில் இருந்து இன்று வரை குமார் குணரட்னம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தியதன் பின்னர், அவரது பிரஜாவுரிமையுள்ள நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
 
1980 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடாக அரசியலில் பிரவேசித்த குமார் குணரட்னம் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.
 
இதனையடுத்து கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
 
பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியான 2015 ஜனவரி முதலாம் திகதி எந்த சட்ட சிக்கல்களும் இன்றி இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்காக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
 
இதேவேளை தேர்தலின் பின்னர் குமார் குணரட்னம் என்பவர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருப்பதாக, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வேளை, அவரை நாட்டில் இருந்து வெ ளியேேற்றக் கூடாது என, முன்னிலை சோசலிசக் கட்சியால் அடிப்படை உரிமை மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
எனினும் அந்த மனுவை ஆராய்ந்த பிரதம நீதியரசர் ஸ்ரீ பவன் தலமையிலான பிரியசாத் டெப், ஈவா வணசுந்தர ஆகிய மூவர் கொண்ட நீதியர்சர்கள் குழு 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியும் என குறிப்பிட்டது.
 
இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமார் குணரட்னம் நேற்று கைது செய்யப்பட்டு -ள்ளதோடு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment