02 November 2015

கிழக்கிலும் ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையில் உயர் டிப்ளோமா மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்திலும் மாணவர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடந்துள்ளன.

இந்த ஆர்பாட்ட பேரணிகளில் உயர் கணக்கியல் டிப்ளோமா சான்றிதழுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்களினால் வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உயர் தேசிய கணக்கியல் கற்கைநெறி மாணவர்ளினாலும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினாலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. திருகோணமலை நகரிலும் மட்டக்களப்பு தாழங்குடாவிலும் நடைபெற்றன.

இந்த மாணவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டமொன்று வந்தாறுமுலை வளாகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

கணக்கியல் உயர் டிப்ளோமா சான்றிதழ் ஏற்கனவே பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட அரச தொழில் வாய்ப்புகளில் பட்டதாரி சான்றிதழுக்கு சமமாக கருதப்பட்டு வந்த போதிலும் அண்மைக் காலங்களில் அது மறுக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு எதிராகவும் தமது டிப்ளோமா சான்றிதழுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் கடந்த வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் மாணவர்களின் ஆர்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

இந்த பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளும் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.

நன்றி- பி.பி.சி

No comments:

Post a Comment