11 December 2015

எல்லை நிர்ணயம் - குழுவுக்கு எதிராக 2000 குற்றச்சாட்டுக்கள்

எல்லை நிர்ணயம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு எதிராக 2000 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போதைய எல்லை நிர்ணய குழுவினராகவும் மிகச் சரியாகவும் தமது செயற்பாடுகளை நிறைவு செய்வது முக்கியமென குறிப்பிட்ட ஜனாதிபதி, இரண்டு வருடங்களில் மீண்டும் திருத்தம் செய்ய நேரிடும் வகையில் செயற்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

எல்லை நிர்ணய குழு நடவடிக்கைகளை இந்த மாதத்தில் முடித்துக் கொண்டு மிக விரைவில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி,கடந்த ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டு செயற்பட்ட  எல்லை நிர்ணய குழு போன்று குற்றச்சாட்டுக்களுக்கு உட்படாமல் தற்போதைய குழு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் செயற்படுவதும் காலதாமதமின்றி விரைவாக நிறைவு செய்வதும் முக்கியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, அரசியல் கட்சிகளின் தேவைக் கேற்ப அன்றி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சிச் சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தலவதுகொட கிரேண்ட்மொனர்ஜி ஹேட்டலில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், அமைச்சர் பைசர் முஸ்தபா உட்பட அமைச்சர்கள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மாவட்டச் செயலாளர்கள், உள்ளூராட்சிச் சபை பிரதிநிதிகளுடன் எல்லை நிர்ணய குழுவின் அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,நமது நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது நோக்கத்திற்காக தேர்தல் முறையை மாற்றும் தீர்மானத்திற்கு இணங்கியுள்ள தருணம் இது. இதன் முதற்கட்டமாக உள்ளூராட்சிச் சபை தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ள கட்சிகள் இணைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் நீண்ட காலமாக கொண்டுள்ள பொதுக் கருத்துக்கள் உள்ளன. இதில் முதலாவது அரசியலமைப்பில் திருத்தம் செய்தமை. அதனையடுத்து இரண்டாவதாக தேர்தல் முறையை மாற்றுவது முக்கியம் என்பதே.

இந்த பொது கருத்தில் நாம் கவனம் செலுத்தாமல் விட முடியாது. எனினும் இது விடயத்தில் நாம் ஒரே நோக்கத்தைக் கொண்டிருத்தல் முக்கியம் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றும் போது நாம் எதிர்பார்த்துள்ள புதிய தேர்தல் முறையில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது இந்த பொது நோக்கமாக வேண்டும்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டு பின் புதிய அரசாங்கம் இது தொடர்பில் செயற்படத் தொடங்கியதும் முன்பிருந்த எல்லை நிர்ணய குழு தமது பொறுப்பை தவறவிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை 2000 முறைப்பாடுகள் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க முன்பிருந்த எல்லை நிர்ணய குழு மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் இப்போதுள்ள குழு மீது சுமத்தப்படாத வகையில் செயற்படுவது மிக முக்கியமாகிறது.

இதனால் இந்த எல்லை நிர்ணய குழுவில் கட்சி பேதம் ஏனைய பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்மானங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.

அதேபோன்று குறைந்த கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டு மிகச் சரியாக வேலையை செய்து முடிப்பதும் அவசியமாகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்ய வழி ஏற்படாதவாறு இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையாளர் உட்பட அனைத்துக் கட்சிகளினும் முழுமையான ஆதரவு இதற்கு அவசியமாகிறது. தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் போது அதன் அங்கத்துவம் அரசியல் கட்சிகளுக்கு தேவையானவாறு அல்லாது மக்களின் பொது கருத்துக்கு இணங்க தேர்தலில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதே முக்கியமாகும்.

அதேவேளை நீண்ட காலமாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வேண்டுகோளாகவும் சில நேரம் குற்றச் சாட்டாகவும் முன்வைக்கப்படும் விடயம்தான் தேர்தல் வேட்பாளர் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு.

100ற்கு 25 வீதம் பெண்களுக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பளிக்கும் வகையில் நாம் முறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட வேண்டியுள்ளது.

எனினும் நான் அறிந்த வகையில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தினால் பெண்களே அவர்களுக்கு வாக்களிக்காத நிலையே உள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி பட்டியலிலோ அல்லது தேசியப் பட்டியலிலோ பெண்கள் இடம்பெறும் வகையில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

எல்லை நிர்ணய கமிட்டியின் செயற்பாடுகள் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் தேர்தல் நடத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கு அனைத்து தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பு மிக அவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நன்றி- தினகரன்

No comments:

Post a Comment