08 December 2015

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மாட்டோம்

யாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (08-12-2015) ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். தங்கள் முடிவு தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'காணாமற்போனோரை கண்டறிவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 2013ஆம் ஆண்டு மகஸ்வெல் பரணகம தலைமையில் மேற்படி ஆணைக்குழுவை உருவாக்கினார். வேறுவழியின்றி காணாமற்போன எமது உறவுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆணைக்குழுவின் முன் நாங்கள் சாட்சியமளித்திருந்தோம். தற்போது 2015ஆம் ஆண்டு முடிவடைகின்ற நிலையில், ஆணைக்குழு எங்களுக்கு நீதி வழங்க ஒரு அங்குல நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பல தரப்பினரும் இந்த ஆணைக்குழு சீரமைக்கப்படவேண்டும் என்ற பரிந்துரைகளை வழங்கியிருந்த போதும், இலங்கை அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நாங்கள் உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்கள், தேடல்கள் வேதனைகள், ஆதங்கங்களை புரிந்துகொள்ளும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அரசும் எங்கள் குரல்களுக்குச் செவிமடுக்கவில்லை. கவனயீர்ப்பு போராட்;டங்கள் செய்தோம், ஆணைக்குழுவுக்கு எங்கள் பரிந்துரைகளை வழங்கினோம், மாற்றங்களை கோரினோம். ஆனால், எதுவும் நடைமுறைக்கு வரவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment