22 December 2015

அன்றைய ஏமாற்றங்களும் இன்றைய நம்பிக்கைகளும்

மைத்திரி வெறுமனே வார்த்தை ஜாலத்துக்கு உரியவரல்லர். தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தை அவர் தொடர்ச்சியாக நடைமுறையில் காண்பித்து வருகிறார். வடக்கில் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சாதகமான நகர்வுகள் போன்றனவெல்லாம் மைத்திரியின் நல்லெண்ண வெளிப்பாடுகளாகும்.
சிறுபான்மையினர் மீதான மென்மைப் போக்குகள் தென்னிலங்கை சிங்கள சமூகத்தின் மத்தியில் அரசின் செல்வாக்கைப் பாதிக்கச் செய்து விடுமென்பதை மைத்திரி ஒரு போதும் பொருட்படுத்தியதில்லை. 
ன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அடிப்படைச் சிந்தாந்தங்களில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. தென்னிலங்கை அரசியலையும் கடந்த காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கங்களையும் உன்னிப்பாக அவதானிக்கக் கூடிய எவருமே இவ்வித்தியாசத்தை தெளிவாகப் புரிந்து கொள்வர்.
இலங்கையின் கடந்த கால ஆட்சித் தலைவர்களை எடுத்து நோக்குவோமானால் யாழ்ப்பாணத்துக்கு கூடுதல் விஜயங்களை மேற்கொண்ட ஒருவராக மஹிந்த ராஜபக்ஷவையே குறிப்பிட முடியும்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயங்களை இரு பிரதான நோக்கங்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ வகுத்திருந்தார்.
அவரது பிரதானமான நோக்கம் சர்வதேசத்துக்கு போலியான காட்சிகளைக் காண்பிப்பதாக இருந்தது.
தனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், சிறுபான்மை இனங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டை மறுதலிக்கும் விதத்தில் போலியான தோற்றங்களை அவர் உலகத்துக்குக் காட்சிப்படுத்தி வந்தார்.
வடகுதி விஜயங்களின் போது அரசாங்க ஊடகங்களையும் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அவர் தவறவில்லை. சரியாகக் கூறுவதானால் அரசாங்க ஊடகங்களைக் கைப்பொம்மையாகப் பயன்படுத்தி உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் மாயைத் தோற்றத்தை அவர் காண்பித்தார்.
வடபகுதி விஜயங்களின் போது பொதுமக்களுடனான சந்திப்புகளிலெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ கையாண்ட விதங்களையெல்லாம் தென்னிலங்கை பெரும்பான்மை சமூகம் எவ்விதம் எடுத்துக் கொண்டதோ தெரியவில்லை. யாழ் மேடைகளில் மஹிந்த ராஜபக்ஷ கொச்சைத் தமிழில் உரையாடியதை சிங்கள சமூகம் வியப்புடன் நோக்கியிருக்கக் கூடும்.
தமிழ் மொழியில் அவர் பாண்டித்தியம் பெற்றவரென்றோ அல்லது சிறுபான்மை இனங்களையும் அவர்களது மொழியையும் சரிநிகராக மதித்துப் பேணும் பண்பு கொண்டவரென்றோ தென்னிலங்கை சமூகம் அவ்வேளையில் நினைத்திருக்கக் கூடும்.
ஒன்றிரண்டு தமிழ் வாசகங்களை சிங்களத்தில் உச்சரிப்புத் தவறாமல் எழுதி வைத்துக் கொண்டு அவர் மேடையில் கம்பீரமாக முழங்கியிருக்கிறார்.
“நான் உங்கள் நண்பன்” என்று அவர் அடிக்கடி கொச்சைத் தமிழில் கூறுவதுண்டு.
“நாம் அனைவரும் ஒரே இனம்” என்றும் அவர் கூறுவார்.
இலங்கையில் பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமும் சரிநிகராகவே நடத்தப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷவின் அன்றைய உரையைக் கேட்ட பின்னர் சிங்கள மக்கள் நம்பியிருக்கக்கூடும்.
ஆனாலும் தமிழ் சமூகத்தையோ அல்லது சர்வதேசத்தையோ இவ்வாறெல்லாம் ஏமாற்றுவது இலகுவான காரியமல்ல என்பதை இவ்வருடத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டியிருந்தன.
கல்வித் தடத்தில் கால்பதித்து வந்த வடபகுதித் தமிழர்கள் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் அறிவுத்திறனும் ஆற்றலும் மிகுத்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது. அவர்களது முகவெளிப்பாடுகளை வைத்துக் கொண்டு உள்ளத்தை மதிப்பிட்டுக் கொள்வது தவறு.
அறிவார்ந்த மக்களின் பொதுவான நடத்தைக் கோலமும் அதுதான். அவர்கள் அனைத்தையும் நன்கு செவிமடுப்பார்கள். ஒப்புக் கொள்ளாத விடயங்களுக்காக ஆர்ப்பரிக்க மாட்டார்கள். தவறான விடயங்களை பக்குவமாக ஒதுக்கி வைத்து விடுவர். தருணம் வரும் போது மனத்தில் உள்ளதை வெளிப்படுத்துவர். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் அவ்வாறுதான் தீர்ப்பை எழுதினர்.
வடபகுதி மக்களின் மன எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது முன்னைய ஜனாதிபதியின் பெரும் தவறு.
தமிழில் பேசினால் வடபகுதி மக்கள் புளகாங்கிதம் அடைவரென்று அவர் நினைத்திருக்கக் கூடும். தமிழ் மக்களை சமமாக மதிப்பதாக மேடையில் கூறுவதை அங்குள்ள மக்கள் நம்பக் கூடுமென அவர் எண்ணியிருக்கலாம். ஆனாலும் வடபகுதி மக்கள் மிகுந்த புத்திசாலிகள் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு தெளிவாகவே புலப்படுத்தியது.
உண்மையைக் கூறுவதானால் முப்பது வருடகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ, யுத்தம் முடிந்ததற்கான பலாபலன்களை அம்மக்களுக்கு வழங்கியிருக்கவில்லை.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், நாட்டில் இனங்களுக்கிடையே சமாதானம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேடைகளில் முழங்கினாரே தவிர யுத்தத்தினால் நலிவுற்ற தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கடுகளவேனும் முன்னேற்றகரமான நகர்வுகளை மேற்கொண்டதில்லை.
யுத்த காலத்தின் போது படையினரால் சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பதில் அவர் உருப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
யுத்தத்தினால் சேதமடைந்த பல்லாயிரக்கணக்கான வீடுகளை உலக நாடுகளின் உதவியுடன் மீண்டும் நிர்மாணித்துக் கொடுத்திருக்க முடியும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கென விசேட வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்க முடியும். அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருக்க முடியும்.
அனைத்துக்கும் மேலாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சியையாவது மேற்கொண்டிருக்க முடியும். நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் பெரும்பான்மைப் பலத்தை மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார்.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட காலப்பகுதியில் தமிழினத்தை மாத்திரமன்றி சர்வதேசத்தையும் ஏமாற்றும் காரியங்களே நடந்தேறி வந்துள்ளன.
இவ்வாறான கடந்த கால அரசியல் வரலாற்றை நோக்குகின்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் மாறுபட்ட காட்சிகளையே எமக்குத் தருகிறது.
மைத்திரி நேற்றுமுன்தினம் வடபகுதிக்கு மேற்கொண்ட விஜயத்துக்கு முன்பாக நாம் இன்னொன்றை விரிவாக மீட்டுப் பார்ப்பது இங்கு மிகவும் பொருத்தமாகும்.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்து கொண்ட மைத்திரிபால சிறிசேன, தனது அரசியல் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் சிறுபான்மை இனங்கள் மீதான நல்லொண்ணத்தையே வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.
சிறுபான்மை மக்கள் மீதான நல்லெண்ண வெளிப்பாடானது சிங்கள சமூகத்தினர் மத்தியில் தன் மீதான மனக்கசப்பை ஏற்படுத்தக் கூடுமென்பதை மைத்திரிபால சிறிசேன பொருட்படுத்தியிருக்கவில்லை.
யுத்த காலத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில் பலவற்றை மீண்டும் ஒப்படைப்பதில் அவர் காண்பித்த அக்கறையை தென்னிலங்கை இனவாத சக்திகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டன. படை முகாம்களுக்குரிய காணிகளை வடபகுதித் தமிழர்களுக்கு அரசாங்கம் தாரை வார்ப்பதாக தென்னிலங்கை இனவாதிகள் பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரி அதனையெல்லாம் பொருட்படுத்தியதில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய செயற்பாடுகளுடன் நோக்கும் போது மைத்திரியின் நடத்தைகளும் வெளிப்பாடுகளும் வேறுபட்டவையாகவே புலப்படுகின்றன.
சிறுபான்மையினருக்கு விரோதமான கொள்கையை தென்னிலங்கையில் முன்வைத்து பெரும்பான்மை மக்களின் ஆதரவை வசீகரிப்பதில் மாத்திரமே கவனம் செலுத்தி வந்த முன்னைய ஆட்சித் தலைவரின் செயற்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நடவடிக்கைகளையே மைத்திரி முன்னெடுத்தார்.
சுருங்கக் கூறுவதாயின் சிறுபான்மை மக்கள் மீதான மென்மையான அணுகுமுறைகளால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து விடக்கூடிய சாத்தியத்தை மைத்திரி எப்போதும் அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையான நகர்வுகளும் மைத்திரியின் கோட்பாடுகளை தெளிவாகக் காட்டுகின்றன.
அரசாங்க நத்தார் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொண்டுள்ளார். மக்களின் துன்பங்களைப் புரிந்து கொண்ட விதம் அவரது உரையில் வெளிப்பட்டது.அகதிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்தில் தீர்வு காணப்படுமென மைத்திரி அங்கு தெரிவித்துள்ளார்.
இனங்களையும் மதங்களையும் ஒரே குடைக்குள் இணைக்கும் தனது விருப்பத்தை மைத்திரி தனது உரையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“நத்தார் கூறுகின்ற சமாதானத்தைப் பகிர்ந்து வாழ்வோம் அனைவர் மீதும் அன்பும் இரக்கமும் செலுத்தும் போதே மனிதாபிமானம் பிறக்கிறது. வடக்குக்கு வந்து இங்குள்ள மக்களுடன் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
அனைத்து மதங்களின் தரிசனம் அமைதியும் சமாதானமும் நல்லிணக்கமும்தான்”
வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரி நேற்றுமுன்தினம் கூறிய வார்த்தைகள் இவை.
“வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் சமமான சமாதானத்துடன் வாழ்வதை வலியுறுத்தும் வகையிலேயே யாழ்ப்பாணத்தில் நத்தார் விழா கொண்டாடப்படுகிறது.
வடக்கு, தெற்கு மக்கள் இணைந்து வாழ்வதற்கு நிரந்த சமாதானம் முக்கியமாகிறது. அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டின் சமாதானத்துக்காக புதிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
அரசின் சமாதான நடவடிக்கைகளை நாட்டின் புத்திஜீவிகள் உட்பட பொதுமக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சமாதானத்துக்காக இணைந்துள்ளனர். எனினும் இந்த செயற்றிட்டங்களைப் புரிந்து கொள்ளாத சிறு பிரிவினரும் உள்ளனர். அவர்களை நாம் அடிப்படைவாதிகளாகவே கருதுகின்றோம்”
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய ஆட்சியில் கூறப்பட்டதைப் போன்று இவை வெறும் வார்த்தை ஜாலங்களென ஒதுக்கிவிட முடியாதிருக்கிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பில் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்வாங்கப்பட்டுள்ளதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
சிறுபான்மையினரான தமிழ் மக்களின் பிரச்சினையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளை அரசு ஏற்கனவே கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே யாழ்ப்பாண விஜயத்தின் போது ஜனாதிபதி ஆற்றிய உரையும் முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment