09 December 2015

அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு

அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றும், கொழும்பில் தீர்மானம் எடுப்பதை நிறுத்தி மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
 
அத்துடன், 1988ம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்துவரும் அரசுகள், 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வலது கையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இடது கையால் பறித்தெடுத்துள்ளன எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், வடக்கு மாகாண சபையால் ஆலோசனை பெறுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த மார்ச், ஏப்ரலில் அனுப்பப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் தொடர்பான பிரகடனங்கள் இன்னும் மீளக் கிடைக்கவில்லை என்பதையும் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போது மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில், 

இனப்பிரச்சினைக்கு மாகாண சபைகள் தீர்வாகமாட்டாது என இங்கு குறிப்பிடப்பட்டது. அப்படியானால் தீர்வு எது? முதலில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இதனூடாக அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். 

மாகாண சபை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் தேவையானதல்ல. மாகாண சபையும் அதிகாரங்களும் ஏனைய மாகாணங்களுக்கும் தேவை. கொழும்பில் தீர்வு எடுப்பது நிறுத்தப்பட்டு அந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும். 

1988ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த அரசுகள் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காற்புள்ளி, முற்றுப்புள்ளி என்பவற்றைப் பயன்படுத்தி வலது கையினூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கி, இடது கையால் பறித்தெடுத்துள்ளன. மாகாண சபைகளுக்கென பிரகடனம் உருவாக்கப்பட முடியாதுள்ளதால்தான் இந்த நிலை உள்ளது. 

வடக்கு மாகாண சபை கடந்த மார்ச் மாதம் சுகாதாரத்துக்கான பிரகடனத்தையும், ஏப்ரலில் கல்விக்கான பிரகடனத்தையும் உருவாக்கி ஆலோசனைக்காக அதை ஆளுநரிடம் அனுப்பியுள்ளது. 

ஆளுநர் இதை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இன்னும் இந்தப் பிரகடனம் (வட மாகாண சபைக்கு) திரும்பக் கிடைக்கவில்லை என்றார்

No comments:

Post a Comment