08 January 2016

தமிழ் மக்களின் இன்றைய அரசியல் தேவை

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்துவந்து 1949 இல் அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்(தந்தை செல்வா) அவர்கள் உருவாக்கிய அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியினதோ அல்லது 1972 குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ_ம் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியும் இணைந்து  1974 இல் தமிழர் கூட்டணியாகிப் பின் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் பெயர்மாற்றம் பெற்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினதோ அல்லது 2001ல் தமிழர்விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ், ரெலோ, ஈ.பி. ஆர். எல். எப் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினதோ (இன்று அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்பவையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்) அடிப்படைக் கொள்கைகளுக்குத் தமிழ் மக்கள் எதிராக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
எனவே பிரச்சினை இதுவல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அரசியல் கண்ணியத்துடனும் இராஜதந்திரத்துடன் கூடிய செயற்பாட்டுத்திறனுடனும் செயற்படுகின்றதா? என்பதுதான் பிரச்சினை.
தமிழர்கள் எதிர்நோக்குகின்ற போர்க்குற்றவிசாரணை, அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களைக் கண்டறிதல், இராணுவப் பிரசன்னக்குறைப்பு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் விதவைகள் மறுவாழ்வு உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகள் அத்துடன் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் அதாவது அடிமட்டங்களில் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு மார்க்கங்கள்- இவைகள் அனைத்துக்கும் மேலாக இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு - இவற்றிற்கான தீர்வுகளை நோக்கிய வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முதலில் தேவைப்படுவது தமிழ்மக்களுக்கோர் ~ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை| ஆகும். அத்தகைய அரசியல் பொறிமுறையொன்று இலங்கையின் வடக்குகிழக்குத் தமிழ்மக்களுக்குத் திருப்தியான வகையிலே இன்று உள்ளதா எனும் வினாவுக்குரிய விடை, இல்லை என்பதே.
(01)
ஜனநாயகரீதியாக நடைபெறுகின்ற தேர்தல்களிலே வேறுவழியின்றி பாரம்பரியத் தமிழ்க்கட்சி என்ற கோதாவில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கே பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்களித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களையே பெரும்பான்மையாக வெல்லவைக்கின்றார்கள் என்பதால் மட்டுமே தமிழரசுக்கட்சி மேலாண்மை செலுத்தும் இன்றுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களுக்கான ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையாகிவிடப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிப் பதினான்குவருடங்கள் கழிந்தும் - ஸ்ரீ லங்கா ஆயுதப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தம் முடிவுக்கு வந்து ஆறுவருடங்கள் கழிந்தும் உள்ள இன்றைய நிலைமையிலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கென கட்டுக்கோப்பான நிர்வாகக் கட்டமைப்போ வலைப்பின்னலோ இல்லை. குறைந்தபட்சம் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலேதானும் முறையான ஒருங்கிணைப்பு இல்லை. அரசியல் கட்சியாக இதுவரை பதிவு செய்யப்படவும் இல்லை. ~தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு| என்கின்ற பெயர்ப்பலகையை மட்டும் மாட்டிக் கொண்டு தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்துகின்றது. தனக்குள்ள வாக்குவங்கிப் பலத்தை வைத்துக் கொண்டு பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைப்பவர்களைத் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி தமிழ்த் தேசியத் துரோகிகள் என இலகுவாக முத்திரை குத்தியும் விடுகிறது. தமிழர்களின் ஐக்கியத்தை இன்றுள்ள தமிழரசுக் கட்சிதான் குலைத்துக் கொண்டிருக்கிறது.
தந்தை செல்வா காலத்துத் தமிழரசுக்கட்சி இன்றில்லை. தந்தை செல்வா தன் வாழ்நாளில் தனது அரசியல் இலக்கினை அடையாவிட்டாலும் கூட அவரிடம் உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் அர்ப்பணிப்பும் அரசியல் கண்ணியமும் இருந்தன. ஆனால் இன்றுள்ள தமிழரசுக் கட்சித் தலைவர்களிடம் தனி நபர்களின் தேர்தல் வெற்றிகளை மட்டுமே மையப்படுத்திய சிந்தனைகளையும் அத்தனிநபர்களின் பேர், புகழ், பட்டம், பதவி, பணம், விளம்பரம், வாழ்க்கை வசதிகளை நோக்கிய சிந்தனைகளையுமே காண முடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்வைக்குள்ளே தமிழரசுக் கட்சியின் குறுகிய கட்சி அரசியல் தான் நடைபெறுகிறதே தவிர மக்களுக்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. மக்களுக்கான அரசியலுக்கு முதலில் தேவைப்படுவது ஐக்கியம்  ஆகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும் அது இப்போது இல்லை. தமிழரசுக் கட்சியென்பது இன்று தனிநபர்கள் சிலரின் ~கூட்டுவியாபார முகவர்| போலாகி விட்டது. மக்களுக்காகக் கட்சி என்ற நிலைமாறி கட்சிக்காகவே மக்கள் எனும்படியாக மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். ~குறுந்தமிழ்த் தேசியவாத| உரைகளும், ஊடக அறிக்கைகளும் உணர்ச்சியூட்டும் செயற்பாடுகளும் தமிழ்மக்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கவிடாமல் அவர்களைப் போதையூட்டி மூளைச்சலவை செய்து உணர்ச்சிக் கொந்தளிப்பில்  அவர்களைக் கொதிநிலையில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் வாக்குகளை வேட்டையாடுவதற்குத் தமிழரசுக் கட்சிக்குக் கைகொடுக்கின்றன. இந்த நிலைமை மாறும் வரை ஐக்கியம் என்பது பெயரளவில்தான்.
முதலில் தமிழரசுக் கட்சி சுத்திகரிக்கப்படல் வேண்டும். அதற்கான அழுத்தம் மக்களிடமிருந்து தலைவர்கள் எனச் சொல்லப்படுபவர்களை நோக்கி வரவேண்டும். இன்றைய தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியலின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்காதவர்களையும் - அறவழிப் போராட்டமாயினும் சரி ஆயுதப் போராட்டமாயினும் சரி கடந்த காலங்களில் அவற்றில் எந்தப் பங்கும் வகியாது பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் அங்கம் வகித்து தேவையேற்பட்ட போது காட்டியும் கொடுத்து ~இலாபம்| அடைந்தவர்களையும் (அவர்களில் சிலர் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்: இருக்கின்றனர்) – சமூகத்தின் விமோசனத்திற்காக எந்த ஒறுப்பிற்கும் இழப்புக்கும் உட்படாதவர்களையும் - போராட்ட வலியை உணராதவர்களையும் - மக்களின் அவலங்களை வர்த்தக மூலதனமாக்கித் தங்களைப் பொருளாதாரரீதியாக வளர்த்துக் கொண்டவர்களையும் - தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ்ந்து அரசாங்கத்திற்கு ~விசுவாசமான| ஊழியர்களாகப் பணியாற்றி தங்கள் அரச சேவைக் காலத்தில் கூட சமூகத்திற்கு எந்த நன்மையும் புரியாது ~பணி| புரிந்து அதிஉச்ச ஓய்வூதியப் பணத்தையும் பெற்றுக் கொண்டு ஓய்வுபெற்றபின் முகவரி தேடி ~பொழுது போக்கு| அரசியலுக்கு வருபவர்களையும் - பாரம்பரியத் தமிழ்க்கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்குத் தமிழ் மக்களிடையேயுள்ள ~வாக்குவங்கி| யைப் புத்திசாலித்தனமாகப் புரிந்து வைத்துக் கொண்டு தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மட்டுமே கட்சியில் சேரவரும் கொள்கையற்றவர்களையும் - சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைந்ததால் கூலிக்கு மாரடிக்க வந்தவர்களையும் கட்சிக்குள் பெருமளவில் உள்வாங்கிச் சுயநலமிகளின் கூடாரமாகிவிட்டது.
தந்தை செல்வா காலத்திலிருந்தே தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியலில் ஈடுபட்டுப் பலவிதமான இழப்புக்குள்ளானவர்கள் - அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு அரச படைகளிடம் அடியுதை வாங்கியவர்கள் - உரிமைப்போராட்ட அரசியல் ஈடுபாடு காரணமாகச் சிறைவாசம் அனுபவித்தவர்கள் - உரிமைப் போராட்ட அரசியலுக்காகவே தங்கள் வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்தவர்கள் - உரிமைப் போராட்ட அரசியலில் ஈடுபட்டு தங்கள் அரசாங்க வேலைகளையும் ஓய்வூதியங்களையும் இழந்தவர்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்படுகின்ற கலை, இலக்கிய, ஊடக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் - சமூகத்திற்குப் பயன்படக்கூடிய சமூக உணர்வுள்ள கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், அரசியல் அனுபவமும் ஆளுமையும் ஆற்றலும் படைத்தவர்கள் - புரட்சிகர மற்றும் போராட்ட உணர்வுள்ளவர்கள் என்று சமூகத்திலுள்ள பயன்பாடுமிக்கவர்களைத் தேடி கட்சியில் உள்வாங்காது தமிழரசுக் கட்சி வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது. இப்படிப்பட்டவர்களை உள்வாங்கினால் சுயநலநோக்குடன் கட்சிக்குள் புகுந்துள்ள தங்கள் இடம் மற்றும் பதவி எல்லாம் பறி போய்விடுமோ என்ற பயம் பலருக்கு. இப்படிப்பட்டவர்களையெல்லாம் உள்வாங்கினால் தலைமைப்பீடத்திடம் ஏன்? எதற்கு? இப்படிச்செய்தால் என்ன? என்று கேள்விகள் கேட்பார்கள்; ; விவாதிப்பார்கள். இவர்களை வைத்துக்கொண்டு தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்க முடியாது என்ற பயம் தலைமைப்பீடத்திலுள்ளவர்களுக்கு. தலைமைப்பீடத்திற்கு இன்று தலையாட்டிப் பொம்மைகளே தேவை. இப்படியான மக்கள் நலன் பேணாத  கட்சிக்கட்டமைப்பொன்றைக் கொண்டு விளங்கும் இன்றைய தமிழரசுக்கட்சி எவ்வாறு மக்கள் நலன் பேணும் அரசியலை முன்னெடுக்கும்.
தமிழரசுக்கட்சியை சுத்திகரிக்கும் நோக்கிலான மனப்பக்குவம், விசாலித்த சிந்தனை, அர்ப்பணிப்பு என்பன தற்போதைய அதன் தலைமைப்பீடத்திடமோ அல்லது அக்கட்சியின் இரண்டாம் வரிசை மற்றும் மூன்றாம் வரிசைத் தலைவர்களிடமோ இல்லை. இவர்கள் அனைவரும் எமக்கு ஏன் இந்த வீண்வம்பு என்று – ‘வேளாண்மை வெட்ட வந்த நமக்கு எல்லைப் பிரச்சனை எதற்கு’ என்று – தற்போது தங்களுக்குக் கிடைத்துள்ள பதவிகளைத் தக்க வைத்துக்கொண்டு பாராளுமன்றக் கதிரைகளின் அல்லது மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் அல்லது மாகாணசபை உறுப்பினர் அல்லது குறைந்த பட்சம் உள்@ராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் கனவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பவர்களே. ‘தமிழ்த்தேசியம்’ என்ற துரும்பு கையில் இருக்கும்வரை தேர்தல் சீட்டாட்டத்தில் இவர்கள்தானே மீண்டும் மீண்டும் வெல்லப்போகிறார்கள். எனவே கட்சியைத் தூய்மைப் படுத்தும் தேவை இவர்களுக்கு இல்லை. இவர்கள் மாலை மரியாதை, பொன்னாடை, மேடை மற்றும் நாடாவெட்டித் திறப்பதற்கு ஏதும் புதிய கட்டிடங்கள் ; அதிதிகளாகக் கலந்து கொள்வதற்கு பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போன்ற பொதுவைபவங்கள் ; தலையைக்காட்டிக் கொள்வதற்கு ஏதாவது ஆர்ப்பாட்டப் பேரணிகள் ; பத்திரிகைகளில் படம் வருவதற்கு ஏதாவது ஊடக சந்திப்பு என்பன கிடைக்காதா என்று தங்களையும் தங்கள் அரசியல் இருப்பையும் விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென அங்கலாய்த்துத் திரிபவர்கள். தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தாமல் மாற்றுச் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் இடம் கொடுக்காமல் இத்தகைய ‘பச்சோந்தி’களுக்கு இரு புறமும் நின்று சாமரம் வீசுகின்றன.
தமிழ் பத்திரிகைகளின் தினசரி மற்றும் வாரவெளியீடுகளின் அரசியல் பக்கங்களை நிரப்பும் அரசியல் ‘ஆய்வாளர்கள்’ தமிழ் அரசியலில் கடந்த அறுபத்தியேழு ஆண்டுகளாக அரைக்கப்பட்ட அதே மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து ஏமாற்று அரசியல் செய்யும் இத்தகையோரையே போற்றித் துதி பாடி மக்களை மீண்டும் மீண்டும் குறுந்தமிழ்த் தேசியவாத மூளைச்சலவை செய்து மக்களை மந்தைக் கூட்டங்களாக வைத்து மேய்க்கவே தங்கள் பேனா மையைப் பயன்படுத்துகிறார்கள். மக்களை அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தாமல் ஒரு ‘கும்பல் கலாசாரத்தை’ நோக்கியே மக்களைத் தமிழ் ஊடகங்கள் அழைத்துச் செல்கின்றன. சில அரசியல் கட்டுரையாளர்கள் தங்கள் ஆக்கங்களில் முழுப் பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முடியாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தவறுகளைப் பட்டும் படாமல் சொல்லித் தங்கள் எஜமானர்களைப் பாதிக்காத வகையில் செல்லமாகத் தட்டுகிறார்கள். மாற்றுச் சிந்தனையாளர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பற்றிக் காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் ஆக்கங்களுக்கு அல்லது அவர்களைப்பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் ஆக்கங்களுக்குத் தேசிய மட்டத்துத் தமிழ்ப் பத்திரிகைகள் களம் கொடுப்பதில்லை. ஒரு சில ஆக்கங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கும் அல்லது அவர்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் காட்டமான வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நுணுக்கமாகத் தேடிப்பிடித்து பத்திரிகையாசிரியர்கள் அவற்றைத் தணிக்கை செய்தும் விடுகிறார்கள். தமிழ்ப்பத்திரிகைகள் பத்திரிகா தர்மத்தைக் கைவிட்டு நடுநிலை தவறி பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றன. இது ஒரு சமூகத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதல்ல.
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். கடந்த காலங்களில் மாற்றுச் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் இடமளிக்க மறுத்த இறுக்கமான தமிழ்ச்சூழல் தமிழினத்தை இறுதியில் எங்கே கொண்டுபோய் விட்டது என்பதைத் தமிழ்ச்சமூகம் அனுபவ ரீதியாகப் பாடம் படித்தும் மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதாயில்லை. மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதற்கு மக்களை தற்போதைய தமிழ் அரசியல் தலைமை விடுவதாயில்லை. மாற்றம் தங்கள் அரசியல் பிழைப்புக்கு ஆப்பு வைத்து விடுமோ என்று தற்போதைய அரசியல் தலைமை அச்சம் கொள்கிறது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடி விவாதித்து அவற்றின் தீர்வுக்கான தீர்மானங்களைக் காய்தல் உவத்தல் இன்றி மேற்கொள்வதற்கான ஒரு ‘பொது வெளி’ இன்றைய தமிழ்ச் சூழலில் இல்லை. இதனை ஏற்படுத்த வேண்டுமாயின் ஒரு கட்டுக்கோப்பான - உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் அரசியல் கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடிய ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையொன்றினை இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ் மக்கள் ஏற்படுத்த வேண்டும். தேர்தல்களில் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களிப்பதால்  கந்தனோ கணபதியோ பாராளுமன்றத்திற்கோ அல்லது மாகாணசபைகளுக்கோ அல்லது உள்@ராட்சி மன்றங்களுக்கோ செல்வார்கள். அதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. எனவே தனி நபரை மையப்படுத்திய அல்லது கட்சியொன்றை மையப்படுத்திய அரசியலைக் கைவிட்டு மக்களை மையப்படுத்திய அரசியலை முன்னெடுப்பதற்கும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் செல்லவேண்டிய அரசியல் செல்நெறியைத் திசை காட்டுவதற்கும் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையொன்று இன்று அவசியம். இதனை எவ்வாறு ஏற்படுத்துவது?
இன்றைய தமிழ்ச்சூழலில் இதனை ஏற்படுத்துவதற்கு நடை முறைச் சாத்தியமான வழி யாதெனில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் மற்றும் வெகுஜன அமைப்புக்களையும் மற்றும் தனி நபர்களாக நின்று செயற்படும் சமூக, அரசியல் மற்றும் கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்களையும் உள்வாங்கி தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ‘புது வடிவம்’ பெற வேண்டும். இப் புது வடிவம் பெறும் புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவும் வேண்டும். தற்போதைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாக விளங்கும் தமிழரசுக்கட்சி இதனைச் செய்ய மாட்டாது. தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தானாகத் திருந்தப் போவதில்லை. மக்கள் தான் தலைவர்களைத் திருத்த வேண்டும். இதற்கான அழுத்தம் தமிழ் மக்களின் பல தரப்பட்ட தரப்புகளிலிருந்தும் தமிழரசுக்கட்சித் தலைமைக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களிடம் ஓர் விநயமான  வேண்டுகோள்.
உங்கள் அரசியல் செயற்பாடுகள் குறித்துப் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தாலும் கூட இன்று தமிழ் மக்கள் ஓரளவு நம்பிக்கை வைத்துள்ள மூத்த அரசியல் தலைவராக தாங்கள்தான் உள்ளீர்கள்.  உங்களுக்கும் அகவை எண்பத்திநான்காகி விட்டது. தங்கள் நடையிலும் சற்று தளர்வை அவதானிக்க முடிகிறது. வயோதிபம் இயற்கையானது. அது யாரைத்தான் விட்டு வைத்தது. எனவே தங்கள் காலத்திற்குள்ளாவது மேற்கூறப்பட்டவாறு ‘ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை’ ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுங்கள். அப்படிப்பட்ட ‘புதிய’ தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்கும் தகுதியும் தங்களுக்குத்தான் உண்டு. அதனை எவரும் தடுக்கப்போவதில்லை.  இப் ‘புதிய’ தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வடிவமைக்கும் கடமைப்பாட்டையும் பொருத்தப்பாட்டையும் வரலாறு தங்கள் மீது சுமத்தி இருக்கிறது.  இதனை நீங்கள் முன்வந்து செய்யவில்லையானால் தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். தமிழர்களுடைய  அரசியல் வரலாற்றில் தங்களால் வடு ஏற்பட அனுமதியாதீர்கள்.
- தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்-
-நன்றி- தேனீ-

No comments:

Post a Comment