28 January 2016

காணாமல் போனவர்கள் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஆராய்வு

இலங்கையில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தியோகபூர்வமற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் அரியா போர்மியுலா கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை மற்றும் மெக்சிக்கோவில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் குறித்த விபரங்களைத் தெரிவித்திருந்தார்.
இலங்கை விஜயத்தின் போது நான் சந்தித்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் கிடைத்த அனுபவங்களையும் சமந்தா பவர் இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். மெக்ஸிகோ இலங்கை நாடுகளில் இடம்பெற்ற காணாமல் போதல்களுக்கான காரணங்கள் மற்றும் சம்பவங்கள் வேறுபட்டதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் வெளிப்பாடு பொதுவானதாக இருந்ததாக சமந்தா பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
காணாமல் போதல் என்பது தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை காணாமல் போனவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடிய போது தனக்கு அறிய முடிந்ததாகவும் அவர் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவ சீருடையில் வந்தவர்களால் தனது 16 வயது மகள் இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் அவருடைய தாயார் என்னிடம் கூறியிருந்தார். தடுக்கச் சென்றபோது தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும் இது தொடர்வில் அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லையென்றும் அந்த தாயார் தன்னிடம் கூறியதாக சமந்தா பவர் குறிப்பிட்டார்.
கடத்தப்பட்ட நாளிலிருந்து ஆறு வருடங்களாக ஒவ்வொருநாளும் அந்தத் தாய் தனது மகளைத் தேடிவருகிறார்.
ஆனால் மகள் எங்கிருக்கிறார் என்பது அவருக்கு தெரியாதுள்ளது என்றும் சமந்தா பவர் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தனது அனுபவத்தைக் கூறியுள்ளார்.
“இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ‘காணாமல் போனவர்கள்’ என்ற சான்றிதழை வழங்குவதற்கான சட்டமொன்றை நிறைவேற்றியிருந்தது. இச்சட்டமானது காணாமல் போனவர்களின் உறவுகள் பலவந்தமாக மரண சான்றிதழில் கைச்சாத்திடுதல் என்ற மோசமான நடவடிக்கையைத் தடுத்து தமது அடிப்படை சேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சான்றிதழை வழங்கும் வகையில் அமைந்துள்ளது” என சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை மற்றும் மெக்சிக்கோ போன்ற நாடுகளில் தவிர்க்க முடியாதது. காணாமல் போனவர்கள் தொடர்பாக நம்பகமான, விரிவான தகவல்கள் இல்லாமல் இருப்பதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடக்கணக்காக காணாமல் போன தமது உறவுகளைத் தேடிய வண்ணம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி- தினகரன்

No comments:

Post a Comment