04 January 2016

மக்களுடன் இரண்டறக் கலந்த புரட்சிக் கட்சியாக வளர்வோம் முன்னேறிச் செல்வோம்!

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொண்ட ஒரு புரட்சிக் கட்சியாக முன்னேறிச் செல்வோம் என்று கொல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்) தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு பணித்ததை ஏற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்) நிறைவேற்றியுள்ள தீர்மானம் வருமாறு:

‘’நாம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ள அரசியல் நடைமுறை உத்தியின் அடிப்படையில், நமது கட்சியின் சுயேச்சையான பலத்தை வலுப்படுத்துவதற்காக, உறுதிமிக்க - போர்க்குணம் கொண்ட மக்கள் போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் நமது ஸ்தாபனத்தின் வலுவை மேலும் பலப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் உறுதியேற்கிறோம். இந்த நிலைப்பாடு, மக்கள் ஜனநாயக முன்னணிக்கு முன்னோடியாக விளங்கும் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக இந்திய மக்கள் மத்தியில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை மாற்றி அமைத்திடுவதையும், அதன் மூலம், மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.இதனை நிறைவேற்றிட பிளீனம் கீழ்க்கண்டவாறு முடிவு செய்திருக்கிறது:

வெகுஜனங்களுடன் ஜீவனுள்ள தொடர்பை (மாஸ் லைன்) ஏற்படுத்திக் கொண்டு சுயேச்சையான பலத்தை வேகமாக அதிகரிப்பதன்மூலமும், நம் தலையீட்டின் சக்தியையும், இடதுசாரி ஒற்றுமையையும் வலுப்படுத்துவதன் மூலமும், இடது மற்றும் ஜனநாயக முன்னணியை ஒரு தேர்தல் முன்னணியாக மட்டும் ஏற்படுத்தாமல், பிற்போக்கு ஆளும் வர்க்கங்களைத் தனிமைப்படுத்தக்கூடிய விதத்தில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு போராடும் கூட்டணியாக அமைத்திடுவது;

தற்போது முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கிற்குள் இருக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களில் உள்ள பிரிவினர்களை வென்றெடுக்கக்கூடிய விதத்தில் கூட்டு இயக்கங்களை நடத்துவதன் மூலமும் ஒன்றுபடுவது; போராடுவது என்கிற இரு கடமைகளையும் நிறைவேற்றிடக்கூடிய விதத்திலும் ஐக்கிய முன்னணி உத்திகளை வலுவாக அமல்படுத்திடுவோம்.

வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைமைகளுக்கேற்ப நம் அரசியல் நடைமுறை உத்திகளில் நெகிழ்வான உத்திகளைக் கடைப்பிடித்திடுவது;மக்களை அணிதிரட்டிடவும் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான இயக்கங்களிலும் பல்வேறு சமூக இயக்கங்களுடன் கூட்டு மேடைகளை அமைத்திடுவது; இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவதை பிரதானமாகக் கொண்டு அதற்கேற்ப தேர்தல் உத்திகளை உருவாக்கிடுவது

வர்க்க-வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்திட

கிராமப்புறங்களில் நிலவும் நிலப்பிரபு - பணக்கார விவசாயி கூட்டுக்கு எதிராக, விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், சிறு,குறு விவசாயிகள், கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாது வேறு பிரிவுகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் நாட்டுப்புற ஏழை மக்களின் இதர பிரிவினர் இடையே விரிந்த அளவிலான முன்னணியைக் கட்டிட வேண்டும்.n கேந்திரமான மற்றும் பிரதான தொழிற்சாலைகளில்(key and strategic industries) பணியாற்றும் தொழிலாளர்களை அணிதிரட்டிட வேண்டும். முறைசார்ந்த மற்றும் முறைசாராத தொழில்களில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அணிதிரட்டிட வேண்டும். தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், பெண்கள் முதலான அமைப்புகளிடயே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பகுதி வாரியாக அமைப்புக்களை (area-based organisations) உருவாக்கிட வேண்டும்.

நகர்ப்புற ஏழை மக்களையும் பகுதி அளவில் அணிதிரட்டிட வேண்டும்; ஏழை மக்கள் பார்க்கும் வேலைகளின் அடிப்படையிலும் இயக்கங்களை அமைத்திட வேண்டும்.

நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் செயல்பாடுகளை வலுப்படுத்திட வேண்டும். குறிப்பாக, சிந்தனையாளர் மன்றம், கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான மேடை போன்று பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி அவர்களிடையே தத்துவார்த்தப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.அவர்களிடையே அறிவியல் உணர்வையும் வளர்த்திட வேண்டும். குடியிருப்போர் சங்கங்கள், ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் தொழில்சார்ந்த அமைப்புகளிலும் செயல்பாடுகளை வலுப்படுத்திட வேண்டும்.

இத்தகைய வழிமுறைகளின் மூலமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டாயம் செய்திட வேண்டும் என பிளீனம் கீழ்க்கண்டவற்றை தீர்மானித்திருக்கிறது:

போர்க்குணமிக்க வெகுஜன மற்றும் வர்க்கப் போராட்டங்களை கட்டவிழ்த்துவிடும் வகையில் நம்மை வலுப்படுத்திக் கொள்ள ஒட்டுமொத்த இந்திய மக்களுடன் நமது தொடர்புகளை பலப்படுத்திட வேண்டும்.

மக்களுடனான உயிரோட்டமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் வெகுஜன அடித்தளத்திற்கான விரிவான செயல்பாடுகளை சீரிய முறையில் அமல்படுத்த வேண்டும்.

நாட்டுப்புறத்தில் உள்ள சுரண்டப்படும் அனைத்துப்பிரிவினரின் போராட்டங்களிலும் ஒற்றுமையை உருவாக்குவதன் மூலம் ஜனநாயகப் புரட்சிக்கு அச்சாணியாக விளங்கும் விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச்செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் - விவசாயிகள் இடையே கூட்டணியை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்திட வேண்டும்.பிரதானமாக நம்முடைய கவனம் கீழ்க்கண்ட அம்சங்களில் முக்கியமாக இருந்திட வேண்டும்

கட்சியின் செல்வாக்கை விரிவாக்கக்கூடிய விதத்தில், இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் பின்னே மக்கள் அணிதிரளக் கூடிய விதத்தில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளில் வர்க்க, வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்திட வேண்டும்.

மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகளை ஏற்படுத்தி, கட்சியைக் கட்டமைக்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களை உயர்தரமான ஊழியர்களாக மாற்றி, ஒரு புரட்சிகரமான கட்சியைக் கட்டக்கூடிய விதத்தில் ஸ்தாபனத்தை செம்மைப் படுத்திட வேண்டும்.

கட்சிக்குள் இளைஞர்களை ஈர்க்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்குச் சித்தாந்தங்களுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டங்களை வலுப்படுத்திட வேண்டும்.

மேலும் பிளீனம் கீழ்க்கண்டவாறும் தீர்மானித்துள்ளது:

“இவ்வனைத்துப் பணிகளும் கட்சியின் மத்தியக் குழு மையத்திலிருந்து தொடங்கி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். மாநிலக் குழுக்கள் இந்த முடிவுகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வேண்டும். ஓராண்டு காலத்திற்குப்பின் இதனை மறுஆய்வு செய்திட வேண்டும்.’’

“சுரண்டும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, நாட்டில் உள்ள சுரண்டப்படும் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கலகம் செய்திடாமல், அத்தகைய கலகங்களில் வெகுஜன மக்களை அணிதிரட்டாமல் எந்தவொரு சமூக மாற்றமும், உண்மையில் சாத்தியமில்லை.

இறுதித் தீர்வில், வரலாற்றைப் படைப்பவர்கள் மக்கள்தான். புரட்சிகர வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு புரட்சிக் கட்சியாக, இத்தகைய மக்கள் எழுச்சியின் முன்னணிப் படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும்’’ என்று பிளீனம் தன்னுடைய தீர்மானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்கிறது.

“நம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றி முன்னெடுத்துச்செல்லக்கூடிய விதத்தில், நம் உறுதியை நாம் இரட்டிப்பாக்கிக் கொள்வோம்.

“ஓர் அகில இந்திய வெகுஜன அடித்தளத்துடன், ஒரு வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யைக் கட்டுவதை நோக்கி முன்னேறுவோம்.”

“மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகொண்ட ஒரு புரட்சிக் கட்சியாக முன்னேறிச் செல்வோம்’’.

தமிழில் : ச.வீரமணி   
 
நன்றி- தேனீ
 

No comments:

Post a Comment