08 January 2016

குடிநீரை மீள வழங்க வடக்கு மாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் பகுதி மக்களுக்கு மாற்றீடாக வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களின் நிலையை அவதானத்தில் கொண்டு தனது ஆளுகைக்குட்பட்டுள்ள பிரதேச சபைகளின் ஊடாக குடிநீரை மீள வழங்க வடக்கு மாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் செயற்பட்டிருந்த மின்னுற்பத்தி நிலையங்களால் கடந்த காலங்களில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளாதாக அறியவந்ததன் அடிப்படையில், என்னால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் ஆரம்ப ஆய்வுகளின் மூலம் அது குறித்து கண்டறியப்பட்டிருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் மேலும் ஆராயுமுகமாக நான் அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக அம்முயற்சி தடைப்பட்டது.  இருப்பினும் தற்போதைய ஆட்சியிலும் இவ் விடயம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவந்ததன் காரணமாக, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவருவதாக அறிய முடிகிறது.  

இந்நிலையில், இந்நீரில் அவ்வகையான பாதிப்புக்கள் இல்லை என்றும், மலக் கிருமிகளே இருப்பதாகவும் கூறி, இம்மக்களை உள ரீதியில் பாதிப்படையச் செய்திருக்கும் வடக்கு மாகாண சபை, தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேச சபைகளின் மூலம் இதுவரையில் வழங்கப்பட்டுவந்த குடிநீரையும் தற்போது நிறுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  இச்செயற்பாடானது, அம்மக்களைப் பாதிப்படையச் செய்யும் ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாடாகவே தெரியவருகின்றது. சுயலாப அரசியலில் ஈடுபடுவோர் தங்களது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொதுமக்களை பழிவாங்கக்கூடாது. எனவே, தங்களது சுய நோக்கங்களுக்காக சுன்னாகம் பகுதி மக்களை பழிவாங்காமல், தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேச சபைகளின் மூலம் இம்மக்களுக்கு குடிநீர் வழங்க வடக்கு மாகாண சபை முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment