11 February 2016

தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தியவர்கள் அதற்கு நிகரான தீர்வையே எதிர்பார்ப்பார்கள்

வடக்கு, கிழக்கு மக்கள் ஒரு தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி போராடியவர்கள். அதற்காக பல தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு தீர்வு என்று சொல்லும்போது அதற்கு நிகரான தீர்வைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடா்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கமூக மேம்மாட்டு அமையத்தின் சார்பில் யோசனைகளை முன் வைக்கும் போதே  தெரிவித்துள்ளா்

அவர் மேலும் கூறுகையில் அரசியல் அமைப்பு மாற்றம் 2016 ஆம் ஆண்டில் கொண்டுவரப்படுமா? என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் இருக்கிறது. மக்கள் அமைப்புகள், தனிநபர்கள் எல்லோரது கருத்துக்களையும் கேட்டறியும் இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகின்றோம். இது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெறுகிறது.

கடந்த காலங்களில் அரசியலமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்படும்போது அரசியலமைப்பு முறைமைகளில் துறைசார்நதவா்களின் கருத்துகள் மட்டுமே பெறப்பட்டு புதிய அரசியலமைப்பு மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டுவந்ததால் அதனுடைய தாக்கத்தை இந்த நாடு இன்று உணர்ந்துள்ளது. அதனால், பல்வேறு நெருக்கடிகளையும், யுத்தத்தையும், பாதிப்புகளையும் நாடு எதிர்கொண்டது. அந்த அனுபவங்களின் வாயிலாக இப்போது மக்கள் எல்லோரையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்த ஆலோசனையில் இணைத்து அவர்களது கருத்தைகளையும் உள்வாங்கி ஒரு பூரணமான தெளிவான அரசியலமைப்பு முறையை கொண்டுவருவதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால், இது இலகுவான விடயம் அல்ல என்பதனையும் நாங்கள் புரிந்திருக்கின்றோம். ஏனென்றால், இங்கே மக்கள் குறிப்பாக, நான் இந்த கிளிநொச்சி மாவட்டத்தின்  மக்கள் சார்பாக சொல்லுவதானால், இந்த மாவட்டம் இன முரண்பாடு அல்லது யுத்தம் காரணமாக பல்வேறு அழிவுகளைச் சந்தித்த மாவட்டம். இந்த அழிவு இந்த மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், நெருக்கடிகள் காரணமாக அரசுகள் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மையையே நாம் காண்கின்றோம். ஏராளமான வலிகளைச் சுமந்த மக்கள் என்கின்ற அடிப்படையில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்களும், அவநம்பிக்கையும் இந்த அரசியலமைப்பு, அரசுகள் மீது இருக்கின்றது. அதனால், இந்த மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அரசியலமைப்பு திருத்தத்தில் முக்கியமான விடயமாக நான் கருதுகின்றேன்.

எனவே அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என நான் நினைக்கின்றேன் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் நாம் தீர்வு தொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்கின்றோம். வடக்கு, கிழக்கு மக்கள் ஒரு தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி போராடியவர்கள். அதற்காக பல தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு தீர்வு என்று சொல்லும்போது அதற்கு நிகரான தீர்வைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

நீண்டகாலமாக தனி தேசம் ஒன்றை அமைப்பதற்காக பல தியாகங்களைச் செய்தவர்கள். ஆகவே, மக்களின் அந்த உணர்வுகளை ஒட்டுமொத்தமான இலங்கையும், அரசியல் தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் மக்கள் தீர்வைப் பற்றி பேசும்போது ஆக அதி உச்ச அதிகாரங்களுடைய ஒரு அலகைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். அதுவும் வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகப் பிரதேசத்தை உள்ளடக்கிய காணி பொலீஸ் அதிகாரங்களை கொண்ட ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் பெறக்கூடிய ஒரு அலகைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அது பிராந்திய அலகாக இருந்தால் என்ன, மாகாண சபையாக இருந்தால் என்ன அது அதியுச்ச சபையாக இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதற்கு முன்பு இது விவாதிக்கப்படும்போது நடைமுறையில் கொண்டுவரலாமா என்பது தொடர்பான வலுத்த சந்தேகங்கள், சூழல்கள் இருக்கின்றன. ஏனென்றால், பாராளுமன்றத்தின் புதிய அரசியலமைப்பு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்தகட்டமாக நாடுதழுவிய ரீதியில் சர்வஜன வாக்கெடுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். மிகவும் நெருக்கடியான, சவாலான விடயங்கள் இவை.

அதற்கு முன் தேசிய நல்லிணக்கம் என்று நாம் உச்சரிக்கின்றோம். அநேகமாக எல்லாத்தரப்புகளும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். சர்வதேச நாடுகள் கூட இதனை வலியுறுத்துகின்றன. இலங்கை அரசியலில் இது தினமும் பேசும் பொருளாக தேசிய நல்லிணக்கம் உள்ளது. ஆனால், நடைமுறையில் எந்தளவில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக நடைமுறைச் செயற்பாடுகள் இருக்கின்றன? என்பது சந்தேகமே. வெறும் சுந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதத்தை படித்துவிட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று சொல்லுவதை தமிழ் மக்கள் நம்புவதற்கு தயாராகயில்லை.

வடக்கு, கிழக்கிலே குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்திலே இன்னும் இந்த மக்கள் தாம் ஒரு சுற்றிவளைப்புக்குள் இருக்கின்றோம் என்ற உணர்வில்தான் இருக்கின்றார்கள். சுற்றிவளைப்புக்குள் கண்காணிக்கப்படுகின்றோம், இரண்டாம்தர பிரஜையாக இருக்கின்றோம் என்ற உணர்வில்தான் இருக்கின்றார்கள். அந்தளவிற்கு மக்களின் வாழ்விடங்கள் மற்றும் நாளாந்த செயற்பாடுகளுக்கு இராணுவப் பிரசன்னம் ஒரு இடையூறாக இருக்கின்றது. இராணுவ குடியிருப்புகள் முக்கியமாக பாடசாலைகளுக்கு அருகாமையில், கோயிலுக்கருகாமையில், மக்களின் விளைநிலங்கள் என்பன இராணுவத்தினரின் பிடிக்குள் இருக்கின்றது. ஆகவே, இப்படியான சூழல்களை உருவாக்கிக்கொண்டு தமிழ் மக்களிடமிருந்து தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஒரு சமிக்ஞை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டுவருவதற்கு முன்பு, தமிழ் மக்களின் நம்பிக்கையை நல்லிணக்கமாக வென்றெடுப்பது ஆட்சியில் ஒரு முக்கிய விடயமாகும். அதுபோல அபிவிருத்தி சமநிலையையும் விரைவாக உருவாக்க வேண்டும். தெற்கில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி மாதிரி இந்த மக்களின் வாழ்நிலை மேம்பாடு, பிரதேச அபிவிருத்தியை விரைவாக முன்னேற்ற வேண்டும். சமனான அபிவிருத்தி சமநிலையை உருவாக்கிக் காட்டினால்தான் தேசிய நல்லிணக்கம் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தேசிய நல்லிணக்கம் என்பது அவசியம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நம்பிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

எங்களுடைய சமூக மேம்பாட்டு அமையம் சமர்ப்பித்தது ஒரு முழுமையான நிபுணத்துவ அறிக்கையல்ல. அதில் நாங்கள் முக்கியமான அடிப்படைகளை வலியுறுத்தியிருக்கின்றோம். குறிப்பாக, அதிகார பரவாக்கல் அலகு எப்படி அமைய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றோம். மொழி, மத சுதந்திரங்களைப் பற்றி சொல்லியிருக்கின்றோம். குறிப்பாக, இந்த பகுதியிலே இருக்கக்கூடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து இங்கே வாழ்கின்ற மக்களின் வாழ்நிலை மேம்பாடு அல்லது அவர்களுக்கான ஒரு தனி பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியிருக்கின்றோம். அது மிக மிக முக்கியமானது. ஏனென்றால், நாங்கள் தனியான மலையக மக்களுக்கான உள்ளக அலகொன்றை தேடவில்லை. ஆனால் அவர்களின் மேம்பாட்டுக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.

அதைவிட, சமூகப் பாதுகாப்பு ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால், நாங்கள் சமூக கட்டமைப்புகளை குறிப்பாக,  இங்கே வாழ்கின்ற மக்களுக்கும் இடையே சமூக ரீதியான கட்டமைப்பு பலவீனங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு உள்ளது போன்று இங்கேயும்  அவசியமாக உணரப்பட்டுள்ளது. அதை வெளிப்படையாகச் சொல்லுவதில் பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால், அதில் உண்மையிருக்கின்றது. அவர்களுக்குரிய அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். அந்த ஏற்பாடுகள் உள்ளகப் பிரச்சினையாக தற்போது கைவிடப்பட்டால் எந்தக் காலத்திலும் உள்ளகத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. உள்ளக அலகுதான் இந்தப் பிரச்சினையைப் பார்த்துக்கொள்ளும் என்றால் உள்ளக அலகுக்குள் சட்டரீதியான ஏற்பாடுகள் தேசிய மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான வலுவான அதிகாரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

அத்துடன், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் இது கிட்டத்தட்ட அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாக நான் கருதுகின்றேன். ஏனென்றால், இலங்கையின் கடல் எல்லை சம்பந்தமாக சரியான வரையறைகள் பின்பற்றப்படுவதில்லை. அது வரையறுக்கப்பட்டால்தான் இந்திய இழுவைப் படகுகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சமூகத்திற்கு நிம்மதி கிடைக்கும். ஆகவே, இலங்கையின் கடல் எல்லை சரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். குடியேற்றவாசிகள் எல்லை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர். ஆனால், எங்களுடைய நாட்டுக்குள் எல்லை மீறி வரும் கடற்றொழிலாளர்களுக்குரிய தண்டனை குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே, இந்த விடயம் அரசியலமைப்பில் சரியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம்.

வடக்கு, கிழக்கில் இந்த நிபுணர்கள் குழு சென்று பொதுமக்கள், அமைப்புகள், தனிநபர்கள், என எல்லோருடைய அபிப்பிராயங்களையும் கேட்டு உருவாக்கிய அறிக்கையில் வடக்கு, கிழக்கு மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படுமாயின் தீர்வு விடயத்தில் இவை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்காகும்.

No comments:

Post a Comment