27 February 2016

ஒருநேர உணவுக்கு கையேந்தும் இலங்கை, இந்தியத் தமிழர்கள்

கடந்த மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரம் இலங்கை மக்களுடன் ஒப்பிடும் போது மிகவும் இழிவு நிலைக்கு சென்றுள்ளது என அண்மையின் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதில் இலங்கையில் மிகவும் மோசமான பலவீனமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் ஓய்ந்து ஏழு வருடகாலம் வெற்றிகரமாக சென்றிருந்தும் வடகிழக்கின் வாழ்வாதாரம் மிகவும் மந்தநிலையிலே சென்று கொண்டிருக்கின்றது. எமது சிறிய நாட்டில் ஒரு பகுதியினைச் சேர்ந்த மக்கள் பிரியாணி சாப்பிடும் போது வடகிழக்கு, மலையக மக்கள் ஒருநேர உணவுக்கே கையேந்தும் நிலைக்கு சென்றுள்ளது.
இலங்கையின் இன ரீதியான வறுமை கடந்த காலத்தில் இலங்கையின் வறுமைமட்டம் படிப்படியாக குறைவடைந்து தற்பொழுது அது 6.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது பாரிய முன்னேற்றம் என உலக வங்கி உட்பட பல நாடுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இனம் வறுமைநிலை
இலங்கை 6.7
சிங்களவர் 5.9
இந்தியத் தமிழர் 9.4
இலங்கைத் தமிழர் 12
முஸ்லிம் 6.5

இலங்கையின் வறுமைநிலை 6.7ஆகக் காணப்பட பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களின் வறுமைநிலை இதனையும் விடக் குறைவாக 5.9 விழுக்காட்டினைக் காட்டிநிற்கின்றது. ஆனால் அதிகூடிய வறுமையினை இலங்கைத் தமிழர்கள் (12 %)கொண்டுள்ளார்கள். இதற்குப் பிரதான காரணம் கடந்த மூன்று தசாப்தகால யுத்தமாகும். அத்தோடு யுத்தத்தக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்கிய தமிழ் தேசியம் வடகிழக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்தத் தவறியமையினால் இவர்களின் வறுமைகடந்த ஏழு வருட காலத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

தமிழ் மக்களை கைவிட்டுள்ள டயஸ்போரா

போர் நடைபெற்ற காலத்தில் டயஸ்போராவின் பங்களிப்பு பாரியளவில் காணப்பட்டது. உலகநாடுகளில் தமிழர் வாழும் பிரதேசமெல்லாம் இலங்கையில் தமிழ் இனம் ஒன்று உள்ளது என்பதனை பறைசாற்றுவதில் தவறவில்லை. அத்தோடு டயஸ்போரா என்றால் இலங்கை அரசாங்கம் நடுங்கிய காலம் இருந்தது.

அப்பேர்ப்பட்ட டயஸ்போரா யுத்தம் ஓய்ந்து இந்த ஏழு வருட காலத்தில் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதற்காக நிலையான அரசியல் தீர்வுக்குப் பின்னர்தான் இந்தசெயல்பாட்டை தொடங்க உள்ளோம் எனதமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுமாயின் அதுவிழலுக்கு இறைத்த நீராக இருக்கும். இருந்தும் குலைக்கும் நாய்க்கு தேங்காய் கட்டி எறியுமாப் போல் அற்ப உதவிகளை செய்யும் போது அதனை தூக்கிப்பிடித்துபெரிதுபடுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளார்கள்.மக்கள் எதிர்பார்ப்பது இவ்வாறான உதவிகள் அல்ல நிலையான வாழ்வாதாரத்துக்கான உதவி என்பதனை இவர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

இந்தியத் தமிழரின் வறுமை இலங்கைத் தமிழருக்கு அடுத்தபடியாக வறுமையில் உள்ள இனமாக இந்தியத் தமிழர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் 9.4 வீதமான வறுமை நிலையில் உள்ளார்கள். இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் பிரதானமான வருமானத்தைக் காட்டியவர்கள் இந்த மலையக மக்களாகும். இவர்களின் வாழ்வாதாரத்தை துயர் தரும் நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் மலையக அரசியல்வாதிகளாகும்.

யுத்தம் நடைபெறாத பிரதேசமாக மலையகம் காணப்பட்டாலும், மலையக அரசியல்வாதிகளின் தூர நோக்கற்ற செயல்பாடு காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

மலையக அரசியல்வாதிகள் மாறிவந்துள்ள அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியினை தொடர்ச்சியாகப் பெற்றிருந்தாலும் இவர்களின் செயல்பாடுகள் விசேடத்துவம் மிக்கவையாகக் காணப்படவில்லை. இதன் காரணத்தினால் மலையக மக்கள் இன்றும் ஒருவேளை உணவுக்கு கையேந்தும் நிலையில் உள்ளார்கள். மலையக அரசியல்வாதிகளின் தந்திரோபாயத்தினை பின்பற்றிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் அமைச்சுப் பதவியினை கொண்டு பாரிய செயல்பாட்டினை முஸ்லிம் பிரதேசத்தில் மேற்கொண்டதன் காணரமாக இவர்களின் வறுமை 6.5 ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகூடிய வேலையின்மையினைக் கொண்டுள்ள இலங்கை, இந்தியத் தமிழர்கள் கடந்த யுத்தம் காரணமாகவும் அதன் பின்னர் சமாதான காலத்தில் ஏற்பட்ட அரசியல் பலவீனம் காரணமாக வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வேலையின்மை வீதம் அதி கூடிய நிலையில் உள்ளது. அதேபோல்இலங்கையில் இந்தியத் தமிழர்களும், அதிகூடிய வேலையின்மையும், குறைந்த வேதனத்தினை கொண்டவர்கள் கூடுதலாக உள்ளார்கள்.

இனம் வீதம்
இலங்கை 32.1
சிங்களவர் 28.8
இந்தியத் தமிழர் 46.3
இலங்கைத் தமிழர் 44.4
முஸ்லிம் 37.2

மொத்த தொழிலாளர் படையில் நாளொன்றுக்கு 350 ரூபாவினை கூலியாகப் பெறும் தொழிலாளர்களின் வீதம் என்ன என்பதனைப் பார்ப்பதன் மூலம் வறுமை நிலைக்கான பிரதான காரணத்தினை உணர முடியும்.

இலங்கையில் 32.1 வீதமான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு இரண்டரை அமெரிக்க டொலரைப் ஊதியமாகப் பெறுகின்றார்கள். ஆனால் இந்தியத் தமிழர்களில் 46.3 வீதமான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு இரண்டரை அமெரிக்க டொலரைப் பெறும் தொழிலாளர்களாக உள்ளனர்.

இலங்கையில் ஆகக் கூடுதலானவர்கள் இந்தியத் தமிழர்கள் இந்த ஊதியத்தினைப் பெறுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

நாளொன்றுக்குரூபா 350 சம்பாதிக்கும் இவர்களின் குடும்ப பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதனை இங்கு கூற வேண்டிய அவசியமில்லை.

அதேபோல் இதற்கு அடுத்தபடியாக 44.4 வீதமான இலங்கைத் தமிழர்கள் நாளொன்றுக்கு இரண்டரை அமெரிக்க டொலரைப் பெறும் தொழிலாளர்களாக உள்ளார்கள். இதில் 37.2 வீதமான முஸ்லிம்களும், 28.8 வீதமான சிங்களவர்களும் நாளொன்றுக்கு இரண்டரை அமெரிக்க டொலரைப் பெறும் தொழிலாளர்களாக உள்ளார்கள்.

ஆகவே இதில் இருந்து ஒரு விடயத்தினை உலக வங்கி தெளிவுபடுத்த மறக்கவில்லை. ஆகக் குறைந்த கூலியில் ஆகக் கூடுதலான மக்கள் தொழில் செய்யும் இனமாக இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் உள்ளார்கள். இதன் காரணத்தினால் அதிகூடிய வறுமையுள்ளவர்களாக இவர்கள் உள்ளார்கள்.

எனவே இம் மக்களுக்கு பொருத்தமான வேலையினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசும் இவ் இனம் சார்ந்த அரசியல்வாதிகளும் முயற்சிக்கவேண்டும். அத்தோடு போர்காலத்துக்கு முன்னர் தொழில்பட்ட தொழிச்சாலைகள் இன்று வரை மீண்டும் திறக்கப்படாத நிலைகாணப்படுகின்றது. இப்படியிருக்கும் போது எவ்வாறு வேலைவாய்ப்பினை இம் மக்கள் பெற்றுக் கொள்ளமுடியும்.

அதிகுறைந்த கூலியினைப் பெறும் வடக்குமாவட்டம்

தொழிலாளர் படையில் இலங்கையின் வேலையின்மை வீதம் 4.3 ஆகக் காணப்படுகின்றது. இதில் கிழக்குமாகாணம் 11.2ஆகவும்,வடக்குமாகாணம் 10.2 வீதமாகவும் உள்ளது. இது வடக்கு, கிழக்கில் மூன்று மடங்கு அதிகரிப்பினைக் காட்டுகின்றது.

அத்துடன் ஒருநாள் கூலியின் அடிப்படையில் இலங்கையில் ஆகக் குறைந்த கூலியில் அதிகூடிய மக்கள் தொழில் செய்யும் மாகாணமாக வடக்கு, கிழக்கும் மலையகமும் உள்ளது.

தொழிலாளர் படையில் ஒருநாளில் 2.5 டொலர் நாள்கூலிபெறும் தொகையினை பார்க்கும் போது, இலங்கை 32.1 வீதமாக காணப்படுகின்றது. இந்த நிலை வடக்கில் உள்ள மாவட்டங்களான யாழ் மாவட்டம் 42.6, வவுனியா 23.1, மன்னார் 60.9, முல்லைத்தீவு 74.4, கிளிநெச்சி 57.2 ஆக உள்ளது.

இலங்கையில் முக்கால்வாசிப் பேர் நாள் ஒன்றுக்கு 350 ரூபாவுக்கு கூலிபெறும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பாரிய இயற்கை வளத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான எந்த செயல்பாட்டையும் போர் ஓய்ந்து ஏழு வருடகாலம் சென்றபின்னரும் அரசாலும், டயஸ்போராவினாலும் மேற்கொள்வதற்கான பூர்வாங்க செயல்பாட்டுக்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூடமைப்பினால் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவர்கள் தமிழ் மக்களை எத்தியோப்பியா நிலைக்கு கொண்டு செல்லப் போகின்றார்களா?. அதேபோல் இந்தியத் தமிழர்களையும் மலையக அரசியல்வாதிகள் எத்தியோப்பியா நிலைக்கு கொண்டு செல்லப் போகின்றார்களா?. இல்லையேல் இவர்களிடம் உள்ள எதிர்கால பொருளாதார செயல் திட்டத்தினை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறுமுன்வைக்கவில்லையாயின் அது இம் மக்களுக்கு இவர்கள் செய்யும் துரோகமாகஅமையும்.

No comments:

Post a Comment