08 February 2016

இலங்கையில் 'தமிழ் மாநில அரசு' கோரிக்கை

இலங்கையில் ஒற்றையாட்சி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவை மாற்றப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை அமைக்கப்பட வேண்டும் என ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.
அவ்வகையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கருத்தறியும் கூட்டம் ஒன்றிலேயே இந்தியாவில் உள்ளது போன்ற சமஷ்டி முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்று கிளிநொச்சியில் தனது முதல் நாள் அமர்வை நடத்தியபோதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
தற்போதுள்ள மாகாண அரசு முறைமைக்கு பதிலாக இலங்கையில் ஐந்து மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கிளிநொச்சி அமர்வில் பங்குபெற்றவர்கள் கேட்டுள்ளனர்.
அவற்றில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாநிலம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு தமிழ் மாநில அரசு என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐந்து மாநில அரசுகளில் குறிப்பாக மலையகத் தமிழ் மக்களுக்கான சுயாட்சி அலகு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
தேர்தல் நடைமுறையில் மாற்றம், பெண்களுக்கு ஆட்சி அதிகாரங்களில் கூடுதல் பிரதிந்தித்துவம் ஆகியவையும் புதிய அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நன்றி- பி.பி.சி தமிழ்

No comments:

Post a Comment