24 March 2016

அமரர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அமிர்தலிங்கம் அவரிகளின் இறுதி நிகழ்வின் போது பகீரதன் ஆற்றிய உரை

சென்று வாருங்கள் என் தாயே

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு

இது என் தாயாருக்கு மிகவும் பிடித்த குறள். இந்தக் குறள் சொல்வது போல, அவர் நேற்று நம்முடன் இருந்தார். இன்று இல்லை. பெற்றோர் திருமணமாகி பத்து ஆண்டுகளின் பின் பிறந்து, அவர்களின் மூத்த செல்லக் குழந்தையாய் 'தவம்' என வாய்நிறைய அழைக்கப்பட்டு, செழிப்பாக வாழ்ந்த என் தாயே!சென்றுவாருங்கள்.

என் தந்தையாரைக் கரம் பிடித்து அவருடன் இல்வாழ்க்கையிலும் அரசியலிலும் 35 வருடங்கள் அவரின் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்த என் தாயே! சென்றுவாருங்கள்.

தந்தை செல்வா அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு வீ ஏ கந்தையா, பட்டிருப்புத் தந்த பெருமகன் இராசமாணிக்கம் போன்றவர்களால் வளர்க்கப்பட்டு, முதலில் தமிழரசுக் கட்சி மேடைகளிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளிலும் உங்கள் பாட்டாலும் பேச்சாலும் உங்களுக்கென்று ஒரு தனி முத்திரை பதித்த என் அன் னையே! சென்றுவாருங்கள்.

 தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணிச் செயலாளராகவும் பின்னர் தமிழர் விடுதலைக் கூ ட்டணி மகளிர் பேரவைச் செ யலாளராகவும் செயற் பட்டுநீங்கள் சார்ந்த இயக்கத்துக்கும் எம் தமிழ் இனத்துக்கும் உங்கள் பங்களிப்பை ஆற்றிய என் தாயே! சென்று வாருங்கள்.

சட்ட மறுப்பு, உண்ணாவிரதம், உரிமைப் போராட்டம் என எல் லாவிதப் போராட்டங்களிலும் குறிப்பாக ஸ்ரீ எதிர்புப் போராட்டத் திலும் சத்தியாக்கிரகத்திலும் பங்குகொண்டு முத்திரை பதித்த என் தாயே! சென்றுவாருங்கள்.

1961இல் கைது செய்யப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் என் தந்தையுடன் தடுப்புக் காவலில் இருந்தபோது, இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலை செல்வதைக் கண்டு தன் குழந்தைகளை எண்ணி வாடிய என் தாயே! ஆறு மாதங்களின் பின் உங்களைப் பார்க்க நாங்கள் வந்தபோது, உங்களை மறந்ததனால் உங்களுடன் சேர மறுத்தோம். அப்பொழுது பதைத்துப் பரிதவித்த என் தாயே! சென்று வாருங்கள்.

 அரசியலில் தென் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட உலகில் தமிழர் வாழும் இடமெல்லாம் சென்று அனைவருடைய உள்ளங்களையும் கவர்ந்த என் தாயே! சென்றுவாருங்கள்.

ஆரம்ப வாழ்க்கை முதல் இன்று வரை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எதிர்கொண்டு, என் கணவர் இருக்கும்வரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை என வாழ்ந்து, அவர் மறைந்த பின்னும் தொடர்ந்து வந்த விமரிசனங்கள், தூற்றல்கள் அனைத்தையும் மன உளைச்சலுடன் தாங்கிய என் தாயே! சென்றுவாருங்கள்.

உங்கள் கணவர் உங்கள் கண்முன்னே காவல்துறையால் தாக்கப்பட்தையும் உங்கள் பிள்ளைகள் அரசியலில் தமிழினத்தின் விடிவுக்கு இது மருந்தாகுமெனில் அதை நான் தாங்குவேன் என இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்த என் தாNயு! சென்றுவாருங்கள்.

 நீங்கள் உப்பிட்டவர்களே உங்கள் கண்ணிறைந்த கணவரின் உயிரை உங்கள் முன்னால் பறித்தபோது அந்தப் பேரிழப்பைத் தாங்கி 26 ஆண்டுகளாக விதவை வாழ்க்கை வாழ்ந்த என் தாயே! சென்றுவாருங்கள்.

அந்நிய நாட்டிலே குடியேறி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் அன்பில் திளைத்து, சுய மரியாதையுடனும், சுய கவுரவத்துடனும் இறுதிவரை மகிழ்வாக வாழ்ந்த என் அன்னையே! சென்றுவாருங்கள்.

 என் மனைவியை உங்கள் மகள்போல அன்பு செலுத்தி, அவரின் ஆதரவுடன் உங்கள் வாழ்க்கையின ; இறுதி அத்தியாயம ;வரை இருந்து என் பிள்ளைகளின் அன்பை அநுபவித்து, அவர்களின் இசையை இரசித்து வாழ்ந்த என் தாயே! சென்றுவாருங்கள்.

 புகுந்த நாட்டில் பல தமிழ் அமைப்புக்களுடன் அவர்களுடன் பணியாற்றி, ஆதரவு கொடுத்து, அவர்களின் நட்பையும் அன்பையும் நிறையவே சம்பாதித்து வாழ்ந்த என் தாயே! சென்றுவாருங்கள்.

நான் எங்கள் நிதி திரட்டும் நிகழ்வுகளுக்கு ஆதரவளித்தீர்கள். பெற்றோரற்ற ஒரு சிறுவனை, உங்களுக்கு வரும் உதவிப்பணத்திலிருந்து ஒரு பங்கை வழங்கி, ஆதரித்த என் அன்னையே! சென்றுவாருங்கள்.

உங்கள் கணவரின் உயிரைப் பறித்தவர்கள் நீங்கள் வாழும்போதே அழிந்துபோவதைப் பார்த்தும் ஒரு சாதாரண பெண்ணாக ஆனந்தம் அடையாமல், தமிழீழப் போராட்ட முடிவைப் பார்த்து, எம் தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அழிந்ததைப் பார்த்து கண்ணீர்விட்ட என் தாயே! சென்றுவாருங்கள்.

உங்கள் அழகு முகத்தையும் இனிய குரலையும் இனி எப்போதும் கேட்கமுடியாது என எண்ணும்போது கவலை வந்தாலும் நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்தீர்கள் என உணரும ;போது என் மனத்தைத் தேற்றி கண்ணீர் மல்க விடைதருகிறேன். சென்றுவாருங்கள் தாயே! என் தந்தையுடன் இணைந்து உங்கள் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை முடியுங்கள் என விடைதருகிறேன். சென்றுவாருங்கள் அம்மா!
நன்றி- தேனீ

No comments:

Post a Comment