26 May 2016

வடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் தொகை 20% க்கும் அதிகம்

வடக்கிலும், கிழக்கிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 20 சதவீதத்தைத் தாண்டி இருப்பதாகத் தெரிவித்த சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெற்கில் அதனை 4.7 சதவீதமாகக் குறைக்க முடிந்திருப்பதாகவும் கடந்த கால யுத்தமே வடக்கு, கிழக்கில் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
லேக்ஹவுஸ் நிறுவன கேட்போர் கூடத்தில் சமுர்த்தி இதழின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் நேற்று புதன்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தை வலுவூட்டுவது தொடர்பாக நாம் 1996 ஆம் ஆண்டு முதலே சிந்தித்து பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம். பொருளாதார ரீதியில் மக்களை வலுப்படுத்த வேண்டியமை குறித்து தொடர்ந்து அதிகாரிகளையும், சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் அறிவுறுத்தி வருகின்றோம்.
1994 இல் சமுர்த்தித் திட்டத்தை நாம் அறிமுகப்படுத்திய வேளையில் நாட்டில் உடனடியாக நலனோம்புதல் வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை கடுமையாக எச்சரித்ததோடு தொடர்ந்து அழுத்தங்களையும் பிரயோகித்தது.
பல்வேறு கட்டங்களில் நாம் வறுமை ஒழிப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளோம். வறுமையை ஒழிப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. முடிந்தளவுக்கு நிவாரணங்கள் உதவிகள், சலுகைகளை அரசு வழங்கினாலும் அவை உரிய வெற்றியைத் தரப்போவதில்லை. வறுமையில் சிக்கியுள்ளவர்களை உழைக்க ஊக்குவிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே எமது வறுமை ஒழிப்பு இலக்கை அடைய முடியும்.
தென்னிலங்கையில் இன்று வறுமையில் சிக்கி இருப்போரின் எண்ணிக்கை 4.7 சதவீதமாகும் ஆனால், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கில் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலைமையிலிருந்து வடக்கு, கிழக்குத் தமிழ் பேசும் மக்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கான செய்தியை நாம் வடக்கு, கிழக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
எமது நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனமான லேக்ஹவுஸிலிருந்து வெளியாகும் தினகரன் மூலமாக இந்தச் செய்தியை விடக்கு, கிழக்கு மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். சமுர்த்தித் திட்டத்தின் உதவியும், செயற்பாடுகளும் அந்த மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
யுத்தம் நடைபெற்றதன் காரணமாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியை அரசுகளால் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று நிலைமை மாறியுள்ளது. நல்லாட்சி அரசு மூலம் தெற்கைப் போன்றே வடக்கு, கிழக்கிலும் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரசால் தனியே செயற்படுத்த முடியாது. இச்சந்தர்ப்பத்தில் லேக்ஹவுஸ் நிறுவனம் இந்த நல்ல செய்திகளை நாடுமுழுவதும் கொண்டு செல்ல எம்மோடு இணைந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதோடு அதற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வறிய மக்களுக்கு உதவக்கூடியதான ஒரு அமைச்சுப் பதவி கிடைத்திருப்பதையிட்டு நான் ஆத்ம திருப்தியடைகின்றேன்.
அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். வறிய மக்களுக்கான எமது இந்த உதவிக்கரம் நீட்டும் வேலைத்திட்டத்துக்கு தொடர்ந்தும் உங்களது ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment