24 May 2016

கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ள இளையதலைமுறை

நாங்க சொன்னா, செய்துட்டுத்தான் வேற வேலை. தெரியும்தானே, இயக்கம் இல்லையெண்டு சொல்லினம். நாங்க தேவையெண்டா என்ன சரி செய்வம். கை எண்டா கை, கால் எண்டா கால்..."
இன்றைய யாழ்ப்பாணத்தைக் கலக்கும் வார்த்தைகளும் இவைதான். கலகலப்பாக்கும் வார்த்தைகளும் இவையே. சாதாரண சனங்களை இந்த வார்த்தைகள் கலக்கிக் கவலைப்படுத்துகின்றன. Ghang இளைஞர்களை இவை கலகலப்பாக்குகின்றன. மறுவளமாகச் சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் இவை சவால் விடுகின்றன.
“யாழ்ப்பாணம் கொஞ்சம் விநோதமாகத்தான் தெரிகிறது. வழமையாகச் சாப்பிடச் செல்லும் கடையில் வருபவர்களில் பெரும்பாலும் ஒரு மார்க்கமாகவே இருப்பார்கள். முறைப்பாக , வலுச் சண்டைக்குத் தயாராக இருப்பதைப்போல, 'என்னடாது ஒரே அக்கியூஸ்ட்டுகள் சூழ் உலகமாகவே இருக்கே' என்று தோன்றும்.“ இப்படிச் சொல்கிறார் ஒரு Face Book நண்பர்.
ஓரிரு மாதங்களுக்குமுன்னர் நண்பன் ஒருவன் வெளிநாட்டிலிருந்து பேசும்போது சொன்னான். "மச்சான் அங்க பயமடா. ஏதும் பிரச்சினையெண்டாச் சொல்லு, பெடியங்கள் இருக்கிறாங்கள்" எனப் பீதியைக் கிளப்பினான்.
"டேய், நான் வேலையா வந்திருக்கேண்டா, பிரச்சினை பண்ணவா வந்தேன்?" என்றேன்.
"சப்போர்ட்டுக்கு ஆள் இல்லாம அங்க இப்ப இருக்கேலாது" வின்னர் படத்தில் வடிவேலு சொல்லும் ரத்த பூமி என்பது போல சொல்லிக்கொண்டிருந்தான்.
அது உண்மைதான். இப்போது யாழ்ப்பாணத்தைப் பார்க்கும்போது...
“அலுவலகம் அமைந்திருக்கும் ஏரியாவில்தான் யாழ் உயர்நீதிமன்றம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில், கடைகளில் கோர்ட் கேஸ் விஷயமாக அலைபவர்கள், குற்றவாளிகளின் நண்பர்கள், இன்னமும் மாட்டிக்கொள்ளாத குற்றவாளிகள், இன்றோ நாளையோ யாரையோ வெட்டப் போகிறவர்கள், இளம்பயிராக வளர்ந்துவரும் கொலைஞர்கள்தான் அதிகம்.
நேற்று இரவு சாப்பிடும்போது எதிரே இருவர் சுவாரசியமாக யாரையோ அடித்தது, ஜெயில் வாழ்க்கை பற்றியெல்லாம்  லயித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையிடையே என்னையும் பார்த்தார்கள். பாஷையே தெரியாத ஆள்போல சலனமில்லாமல், என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்“.
- இது இன்னொரு நண்பருடைய துக்கம்.
அப்படியென்றால், யாழ்ப்பாணம் இப்பொழுது கலவரபுமி என்றாகி வருகிறதா?
சந்தேகமேயில்லை. நிச்சயமாக.
“யாழ்ப்பாணத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அதிரடிப்படையை அழையுங்கள்“ என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். “யாழ்ப்பாணத்தில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளை, மது, போதைப்பொருள்பாவனை போன்றவை கட்டுமீறி நிகழ்கின்றன. இதற்குப் பின்னணியில்  சில சக்திகள் உள்ளன“ என வடமாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலைமையைக்குறித்து யாழ்ப்பாணத்தின் மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து கடந்த வாரம் அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறார்கள். நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞான தேசிக பரமாச்சார்யாரும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசமும் இணைந்து விடுத்துள்ள அந்த அறிவிப்பில் - “வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். குற்றச்செயல்களைத் தடுப்பது என்பது ஒட்டு மொத்தச் சமூகத்தின் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது. இந்தச் சீரழிவு நிலை தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்புச் சமூகத்துக்குள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பவர்களும் அரசியல்வாதிகளும் இதுவிடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிக்க முன்வருதல் வேண்டும்“ என்று கூறியிருக்கிறார்கள்.
“யுத்தகாலத்தில் உயிரை கையில் பிடிப்பதா விடுவதா?“ என்று தவித்த களைப்பு அடங்க முன், இப்பொழுது இப்படியொரு சோதனையா?“ என்பதே பலருடைய கவலையும். “ஒரு தொகுதி இளைஞர்கள் Gang என்றும் Group என்றும் றோட்டில் திரிவதைப் பார்க்கும்போது வேறு எப்படித்தான் தோன்றும்?“ என்று கவலைப்படுகிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர். இதனால் ஒரு யுத்தகாலத்தை ஒத்த அச்ச உணர்வு சனங்களிடம் ஏற்பட்டுள்ளது.
தினமும் பத்திரிகைகளில் கொலை, கொள்ளை, வாள்வெட்டு, திருட்டு, பலாத்காரம் என்ற சேதிகளே வந்து கொண்டிருக்கின்றன. யாரைப்பார்த்தாலும் இந்தச் சேதிகளைப் பற்றியே கவலையோடு கதைக்கிறார்கள். வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வீதியில் பயமில்லாமல் போக முடியாது. பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு அமைதியாகவும் ஆறுதலாகவும் இருக்க முடியாது. யுத்தகால நெருக்கடிகளை விட இந்த நெருக்கடிகள் பயங்கரமானவை என்று சொல்லும் அளவுக்கு துக்கம் தரும் நிலைமைகள் வளர்ந்திருக்கின்றன.
“கம்மாலை“ என்ற கத்தி, மண்வெட்டி, புல்லுக்கிண்டி, சத்தகம், பாக்குவெட்டி போன்ற தொழில் ஆயுதங்களைச் செய்யும் இடங்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை யாழ் நீதிமன்றம் விடுத்திருக்கிறது. “கம்மாலைகளில் அரிவாள் போன்ற மனிதர்களைத் தாக்கும் ஆயுதங்கள் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றம்“ என்று.
இந்த அளவுக்கு யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் கீழிறங்கி, நெருக்கடியை நோக்கிச் செல்லக்காரணம் என்ன? இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? இதற்கான பின்னணிகள் என்னவாயிருக்கும்? இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதன் முடிவு என்ன? இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் யார்? அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் அல்லது இப்படி நடந்து கொள்கிறார்கள்?
சில இளைஞர்கள் இன்று கட்டுப்பாடற்ற ஒரு வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இப்படியானவர்கள் மிக இளைய வயதிலேயே பெற்றோரின் பேச்சை மதிக்காமல் தங்கள் இஸ்டத்துக்கு நடக்கிறார்கள். அப்படியே பாடசாலைகளில் ஆசிரியர்களைப் பொருட்படுத்தாமல் விடுகிறார்கள். கொஞ்சம் வளர்ந்து விட்டால், வீடுகளுக்கு வருவதையும் குறைத்துக் கொண்டு, தனியாக அறையெடுத்துத் தங்கிவிடுகிறார்கள். அல்லது நான்கைந்து நண்பர்களாக இணைந்து தங்குமிடங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அங்கே புதிய தொடர்புகள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. மது, புகைத்தல் என்று இன்னொரு உலகம் அறிமுகமாகிறது. ஒரு சுதந்திரமான – கட்டுப்பாடற்ற வாழ்க்கை இது என்ற நினைப்பும் ஏற்படுகிறது. பெற்றோரின் கவனிப்பும் கட்டுப்பாடுகளும் கேள்விகளும் இல்லாத ஒரு நிலையில் எப்பொழுது, எங்கே வேண்டுமானாலும் போகலாம். வரலாம் என்ற நிலை ஏற்பட எதுவும் செய்யலாம் என்ற எண்ணம் வளர்கிறது. இது அவர்களை ஹீரோவாக்கி விடுகிறது.
இதைப்பற்றியெல்லாம் தெரிந்தாலும் சில பெற்றோரால் எதுவுமே செய்ய முடிவதில்லை. இதைக் கட்டுப்படுத்த முற்பட்டால் இதையும் விட மோசமான நிலைக்குப் போய்விடுவார்களோ எண்ணம். இருக்கின்ற கொஞ்ச நஞ்சத் தொடர்புகளையும் உறவையும் துண்டித்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் பிள்ளைகளுக்கு அடங்கி விடுகிறார்கள். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளும் பிள்ளைகள், தங்களுடைய செலவுக்கான பணத்துக்காகவே பெற்றோருடன் பேசுகிறார்கள் - வீட்டுக்கு வருகிறார்கள். இப்படி வரும்போது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் உரையாடல்கள் ஒரு போதும் சுமுகமாக நடப்பதில்லை. “காசைத்தரப்போகிறாயா இல்லையா?“ என்ற மாதிரியே அமையும். அப்படி ஒரு நிபந்தனையை உறவின் பேரால் வைத்துக் கொள்ளும் பிள்ளைகள், ஒரு எல்லைக்குப் பிறகு, தாங்களாகவே தங்களுக்குத் தேவையான பணத்துக்கு முயற்சிக்கிறார்கள். இதுவே திருட்டு, கொள்ளை எனத் தொடங்கி  ரவுடித்தனமாக வளர்கிறது. இந்த ரவுடித்தனத்துக்கு சினிமா நன்றாக வழிகாட்டுகிறது.
சினிமாவில் வரும் வில்லன்களே இவர்களுக்குக் கதாநாயகர்கள். அந்த வில்லத்தனமே இவர்களுக்குப் பிடித்த, தேவையான ஒன்று. அதில் காட்டப்படும் உத்திகளும் அசாத்திய உணர்வும் இவர்களுக்குத் தாராளமாக உதவுகின்றன. அந்த நிழல் உலகத்தை இவர்கள் நிஜமாக்குகின்றனர். இதுவே இன்று யாழ்ப்பாணத்தில் வளர்ச்சியடைந்து Gang என்ற புதிய கலாச்சாரமாகியுள்ளது.
இந்தக் Gangs ஐ அல்லது Groups களை சில சக்திகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. குறிப்பாகப் புலனாய்வுப் பிரிவினர் அப்படிப் பயன்படுத்துவதாக யாழ்ப்பாண மக்களிடம் ஒரு அபிப்பிராயமுண்டு. இதனால்தான் இவைகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ் தயக்கம் காட்டுகிறது என்றும் கருதப்படுகிறது. ஆனால் இதைப் பொலிஸ் தரப்பு மறுக்கிறது. தாம் முறைப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம். கடந்த ஆண்டு இதைப்போல அட்டகாசம் செய்து கொண்டிருந்த “ஆவா குறூப்“பைப் பிடித்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் நடந்த பல திருட்டுக்களையும் கொலைச் சம்பவங்களின் சூத்திரதாரிகளையும் கண்டு பிடித்தது பொலிஸ்தானே. அப்படியிருக்கும்போது பொலிஸ் மீது இப்படிக் குற்றம் சாட்டுவது பொருத்தமானதல்ல. இப்பொழுதும் பொலிஸ் உசாராகவே உள்ளது. பொலிஸ்க்கு மக்கள் உதவவேண்டும். அப்பொழுதுதான் குற்றவாளிகள் தப்பிக்கொள்ள வழியிருக்காது என்கிறது பொலிஸ் தரப்பு.
பொதுவாகவே இந்த மாதிரியான குற்றச் செயல்கள் எங்கும் எப்பொழுதும் நடப்பதுண்டு. இது இரண்டு வகையில் அமையும். ஒன்று, தனிப்பட்ட ரீதியில், விதிவிலக்காக எப்போதாவது நிகழும் ஒன்றிரண்டு சம்பவங்கள். இவற்றில் ஈடுபடுகின்றவர்களும் மிகச் சிலராக, மனநிலைப் பிறழ்வுக்கு நெருங்கியவர்களாக இருப்பர். இவற்றைச் சட்டமும் நீதித்துறையும் சமூகமும் கட்டுப்படுத்தி விடும். இது அமெரிக்காவிலும் நடக்கும். சீனாவிலும் நடக்கும். கொழும்பிலும் நடக்கும். இரண்டாவது, குறிப்பிட்டளவு தொகையினர் அணிகளாக இந்த மாதிரிச் செயல்களில் ஈடுபடுவது. இது ஒரு சமூக விளைவு. இளைஞர்களைக் கையாளவும் வழிப்படுத்தவும் தெரியாத ஒரு சமூக நிலை வரும்போது இத்தகைய நிலை ஏற்படுவதுண்டு. இத்தகைய சம்பவங்கள் அல்லது இந்த மாதிரியான நிலை முன்னர்  யாழ்ப்பாணத்திலும் இருந்ததுண்டு. குறிப்பாகச் சமூகத்தின் நெறிமுறைகளைப் பேணும் தலைமைத்துவ வெற்றிடங்கள் நிகழும்போதும் அரசியல் தலைமைகளில் வீழ்ச்சியேற்படும்போதும் இந்த நிலைமை ஏற்படும்.
யுத்தம் தொடங்குதற்கு முந்திய – முப்பது ஆண்டுகளுக்கு முன்பான - யாழ்ப்பாணத்தைத் தெரிந்தவர்களுக்கு இதுமாதிரியான சம்பவங்களைப் பற்றிய பல கதைகள் நினைவிருக்கும். அப்பொழுதும் கோஷ்டி மோதல்கள் நடந்திருக்கின்றன. கசிப்புக் காய்ச்சப்பட்டிருக்கிறது. தெருச்சண்டியர்களும் ஊர்ச்சண்டியர்களும் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள். திருட்டும் வழிப்பறியும் நடந்திருக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கமலா என்ற மாணவி கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்குச் செய்திகளுக்காகவே ஈழநாடு பத்திரிகையின் விற்பனை அதிகரித்திருந்தது. இந்த மாதிரியான சம்பங்களைக் கட்டுப்படுத்தவும் இப்படி அட்டகாசம் பண்ணுகின்றவர்களை இல்லாதொழிக்கவும் (கவனிக்க இல்லாதொழிக்கவும் என்பதை) இயக்கங்கள் தண்டனை வழங்கத் தொடங்கின. இதனால் “சமூக விரோதி, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர்“ எனக் குறிப்பிடப்பட்டுப் பலர் மின்கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இயக்கங்கள் மேற்கொண்டிருந்தன. இதற்காக “கசிப்புக் காய்ச்சுவது குற்றம்“ என்றும் “கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவதை விட போராட்டத்தில் பங்களிப்பது மேல்“ என்றும் சுவரொட்டிகள் கூட ஒட்டப்பட்டன.
விடுதலைப் புலிகள் ஆதிக்கம் பெற்ற பிறகு, அவர்கள் நீதித்துறையையும் சட்டத்தைப் பேணும் காவல்துறையையும் உருவாக்கினர். அந்த நீதிமன்றங்களிலும் காவல்நிலையங்களிலும் கூட இந்தமாதிரிக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரினால் கூட்டம் நிரம்பியே இருந்தது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகப் புலிகள் சிறப்புப் பிரிவுகளையே காவல்துறையில் உருவாக்கியிருந்தனர். இந்தப் பிரிவுக்கும் தண்ணிகாட்டிவிட்டுக் காரியம் பார்க்கிற பேர்வழிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு புலிகளின் புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. இதனால், சில சந்தர்ப்பங்களில் நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் அப்பால் நேரடியாகவே புலிகளால் மரணதண்டனை வழங்கப்பட்ட சம்பங்களும் நடந்ததுண்டு.
மட்டுமல்ல, சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் கூட இந்த மாதிரிக் குறூப்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. அவற்றைப் படையினரும் பயன்படுத்தினார்கள். புலிகளும் பயன்படுத்தினார்கள். இறுதியில் இவர்களில் சிலர் இரண்டு தரப்பினாலும் பலியிடப்பட்டதும் உண்டு. 
இப்பொழுது யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற இந்தக் குற்றச் செயல்கள், பெரும்பாலும் 17 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாலேயே செய்யப்படுவதாக பொலிஸ் பதிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 17க்கும் 23 வயதுக்கும் உட்பட்ட மாணவப்பருவத்தினரே இதில் கூடுதலாக ஈடுபடுகின்றனர். இன்னும் கூர்மையாகப் பார்த்தால், படித்த, வசதியான பின்னணியைக் கொண்ட குடும்பத்தின் பிள்ளைகளே இவற்றில் அதிகமாகச் சம்மந்தப்படுகிறார்கள். இன்னொரு கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம், இவர்கள் பெரிய – புகழ்பெற்ற பாடசாலையின் – பாடசாலைகளின் மாணவர்களாக இருப்பது.
2010 இல் விஜயின் “சுறா“ படம் திரையிட்டபோது இதே பாடசாலையின் மாணவர் அணியொன்று, பாடசாலைச் சீருடையில் “ராஜா தியேட்டர்“ வாசலின் முன்னே நின்று  “ட்ரம்“ வாத்தியத்தை அடித்து ஆடிப்பாடி அட்டகாசம் செய்தது. அக்கம் பக்கத்திலிருந்த கடைக்காரர்களும் வழிப் பயணிகளும் இதை வேடிக்கை பார்த்தனர். சிலர் கவலைப்பட்டனர். ஆனால், இந்த மாணவர்களின் இந்த நடத்தையைக்குறித்து யாரும் கண்டிக்கவும் இல்லை. எந்தப் பத்திரிகையும் எழுதவில்லை. ஏனென்றால் இது பெரிய பள்ளிக்கூடச் சங்கதியாச்சே. இன்னொரு படக்காட்சியின் ஆரம்பத்தில் இதுபோல இளைஞர் சிலர் பாலாபிஷேகம் செய்து அட்டகாசம் செய்தனர். அப்பொழுது  வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அந்த இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. இதுமாதிரியான சம்பவங்கள் அங்கங்கே நடந்தன. இருந்தும் யாரும் அவற்றைப்பொருட்படுத்தில்லை. 
இப்படியான நிகழ்ச்சிகளின் வளர்ச்சியே கொலை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகங்கள், மது, போதைப்பொருள் பாவனை, அடிதடி, அடாவடி, வாள்வெட்டு, பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளிடமும் இளம் பெண்களிடத்திலும் விடுகின்ற சேட்டைகள், முதியோரைப் பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்தல், கேலிப்படுத்துதல் என்று இன்றைய நிலையை எட்டியுள்ளது. இதுவே இன்று சமூக நெருக்கடியாகவும் சமூகத்தின் பொதுக்கவலையாகவும் மாறியிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது அண்மையில் பார்த்த “பாபநாசம்“ சினிமாதான் நினைவில் வருகிறது. அந்தப்படத்தின் கதையும் இன்றைய யாழ்ப்பாண நிலைமையும் ஒன்றாகப் பொருந்துகின்றன. வசதிகளும் பிள்ளைப்பாசம் என நினைத்துப் பெற்றோர் கொடுக்கும் அபரிதமான விட்டுக்கொடுப்புகளும் பிள்ளைகளுக்குத் தாராளமாகப் பணத்தைக் கையில் கொடுப்பதும் மோசமான  விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே இது. இப்படிச் செல்லம் கொடுக்கப்படும் பிள்ளைகளால் பெற்றோரும் கவலைப்பட வேண்டியுள்ளது. பிறரும் துன்பப்பட வேண்டியிருக்கிறது. 
“குற்றமும் தண்டனையும் இல்லாத சமூகம்“ என்று எந்தக் காலத்திலும் எங்கும் ஒரு புனிதச் சமூகம் இருந்ததில்லை. இருப்பதும் இல்லை. ஆனால், இதை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருப்பதே சமூகத்தினதும் சட்டத்தினதும் பொறுப்பாகும். இதற்கே கல்வியும் சமயங்களும் இலக்கியமும் கலைகளும் பண்பாட்டு நடவடிக்கைகளும் சமூக விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் முன்மாதிரிகளும் தேவைப்படுகின்றன. நீதித்துறையும் அரசும் இவற்றுக்கு அனுசரணையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். இவை தமது அறிவார்ந்த செயற்பாட்டின் மூலமாக வழிப்படுத்த முடியும். குறிப்பாக இளைய தலைமுறையின் ஆற்றலையும் துணிச்சலையும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக அவர்களை நல் விளைவுகளின் பக்கமாகச் செயற்பட வைக்க முடியும்.
ஆனால், இதைப்பற்றிப் பெரியவர்கள் சிந்திப்பதில்லை. பொறுப்பானவர்கள் அக்கறைப்படுவதில்லை. இளைஞர்களின் ஆற்றலுக்கு வழிகளை உண்டு பண்ணும் விதமாக, அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக ஒழுங்குகளைச் செய்வது கிடையாது. பிள்ளைகளைக் கல்வியில் ஈடுத்துவதே பெற்றோரின் ஒரே குறிக்கோள். அதற்கப்பால் எதுவும் இல்லை. இதற்காகப் பிள்ளைகளை மிகச் சிறுபராயத்திலிருந்தே பாடசாலைகளுக்கும் ரியுசனுக்கும் பிரத்தியேக வகுப்புகளுக்கும் என்று வதைக்கத் தொடங்குகிறார்கள். இதனால் பிள்ளைகளுக்கு ஓய்வில்லை. அவர்கள் விளையாடுவதற்கும் பிறருடன் பழகுவதற்கும் உறவினர்களுடன் கொண்டாடுவதற்கும் வாசிப்பதற்கும் வழி கிடையாது. இதெல்லாம் அவர்கள் தனிமைப்படுதற்கும் மன நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் காரணமாகின்றன. ஆனால், இதைப்பற்றிப் பெரும்பாலான பெற்றோர் சிந்திப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய பிள்ளைகள் உயர்ந்த புள்ளிகளைப் பெற வேண்டும். முதல் நிலையை அடைய வேண்டும். அவ்வளவே. எட்டுப் பத்து வயது வரையில் பிள்ளைகள் பெற்றோரின் இந்தமாதிரியான நெருக்குவாரத்திற்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருப்பார்கள். பிறகு, அவர்கள் மெல்ல மெல்லத் திமிறத் தொடங்குவர். இதன் வளர்ச்சியடைந்த விளைவே வாளேந்துவதில் வந்து முடிகிறது. ஆகவே, குற்றங்களையும் அதற்கான காரணங்களையும் குற்றவாளிகளையும் நாமே உருவாக்குகிறோம் என்ற விழிப்புணர்வு சமூகத்திற்கு வரவேண்டும். அதையே இன்றைய யாழ்ப்பாணம் எதிர்நோக்கியுள்ளது.
- கருணாகரன்-

No comments:

Post a Comment