25 May 2016

பாதிக்கப்பட்டோருக்கு பெருந்தோட்டங்களில் காணிகள்

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பயன்படுத்தப்படாத பெருந்தோட்டக் காணிகளை விசேட வர்த்தமானி மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அச்சுறுத்தலான பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு 1,46,000 காணி அலகுகள் தேவைப்படுவதாக காணி இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.
கேகாலை, இரத்தினபுரி, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு 146000 காணி அலகுகள் தேவைப்படுகின்றன.
இதற்கான காணிகளை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள பொருந்தோட்டக் காணிகளில் பயன்படுத்தப்படாத காணிகளைப் பெற்றுக்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அவ்வாறான காணிகளைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
காணி ஆணையாளர் நாயகம், நில அளவையாளர் திணைக்களம், காணி சீர்திருத்த செயலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தேவையான காணிகளை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு காணிகளை அடையாளம் காணும்போது தேசிய கட்டட ஆராய்ச்சி திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் உறுதிப்படுத்தல்கள் கட்டாயம் கவனத்தில் எடுக்கப்படும்.
மலையகப் பகுதிகளில் ஏலம் மற்றும் கராம்பு உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தமக்கு சொந்தமான நிலத்தைவிட்டு வெளியேற விரும்பாது தொடர்ந்தும் அதிலே இருக்கின்றனர். எனினும், இவ்வாறான பகுதிகள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. மீண்டும் அனர்த்தம் ஏற்படாத காணிகளை வழங்கவே தாம் தீர்மானித்திருப்பதாக  குறிப்பிட்டார்.
இவ்வாறான காணிகள் குறித்து கிராம சேவகர்களை பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும், பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலாளர் மற்றும் பிராந்திய காணி கச்சேரிகளுக்கு அறிவித்து அவற்றின் ஊடாக காணிகளை அடையாளம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணிகள் வழங்கப்படும் போது ஒரு குடும்பத்துக்கு தலா 10 முதல் 20 பேர்ச் காணிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், காணிகள் அடையாளம் காணப்பட்டதும் அமைச்சரவையில் முடிவெடுத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், கொழும்பில் முற்றிலும் வித்தியாசமான நிலைமை காணப்படுகிறது.
நீர்ப்பாசன அமைச்சுக்கு சொந்தமான இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றி அவர்களுக்கு பாதுகாப்பான காணிகளைப் பெற்றுக் கொடுத்து அவற்றில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment