24 July 2009

ஏ-9 பாதைப் போக்குவரத்தும் வட பகுதி மக்களும்

யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து பஸ்கள் பயணிகளுடன் ஏ-9 பாதைக் கூடாக நேற்று முன் தினம் கொழும்பை வந்தடைந்தன. ஏ-பாதைக் கூடாகச் சிவிலியன் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த ஏற்பாடாகவே இந்த பஸ் சேவை இடம் பெற்றது. ஒரு மாத காலத்துக்குள் இப்பாதை சிவிலியன் போக்குவரத்துக்குத் திறந்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.அரசாங்க முக்கியஸ்தர்கள் வெளியிடும் தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

வட பகுதி மக்களைப் பொறுத்த வரையில் ஏ-9 பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் நாளாந்த வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது எனக் கூறலாம். வட பகுதி மக்களின் சமூக, பொருளாதார வாழ்வு தென்னிலங்கையுடன் தொடர்பற்றதாக இருந்ததில்லை. விவசாயமும் கடற்றொழிலும் வடக்கின் பிரதான பொருளாதார செயற்பாடுகள். உள்ளுர்த் தேவைக்கு மேலதிகமான உற்பத்தி முழுவதும் தென்னிலங்கைச் சந்தைக்கே அனுப்பப்பட்டு வந்தன. இவ்வாறு தென்னிலங்கைச் சந்தைக்கு அனுப்பப்படும் பொருட்கள் வடபகுதிப் பொருளாதாரத்தின் பிரதான அம்சமாக விளங்கின.
இதே போல சமூக வாழ்விலும் ஏ-9 பாதை முக்கியமானது. வடக்கு மக்களின் பல உறவினர்கள் தெற்கில் நிரந்தரமாக வசிப்பவர்களாக உள்ளனர். மங்கள மற்றும் அமங்கள நிகழ்வுகளில் உறவினர்கள் ஒன்று சேர்வதற்கு ஏ-9 பாதையே பயன்படுத்தப் பட்டது. இப்பாதைக்கூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றுசேர முடியாத நிலை ஏற்பட்டது.

ஏ-9 பாதைக்கூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் வடபகுதி மக்கள். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இப்பாதைக்கூடான போக்குவரத்து தடைப்பட்டதற்குப் புலிகளே பிரதான காரணம். புலிகளின் தூரநோக்கற்றதும் யதார்த்த விரோதமானதுமான செயற்பாடு காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுள் வட பகுதி மக்களின் சமூக, பொருளாதார வாழ் வில் ஏற்பட்ட பாதிப்பு முக்கியமானது.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் அரசாங்கம் அடைந்த வெற்றியின் விளைவாகவே போக்குவரத்து வசதிகள் உட்பட வடபகுதி இன்று வழமைக்குத் திரும்புகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரும் சில தலைவர்கள் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற கால கட்டத்தில் அதற்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டதை இச்சந்தர்ப்பத்தில் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். புலிகளின் தோல்வி இடம் பெறாதிருந்திருந்தால், ஏ-9 பாதைக் கூடாகப் போக்குவரத்துச் செய்வதையோ உற்பத்திப் பொருட்களைத் தென்னிலங்கைச் சந்தைக்கு அனுப்புவதையோ வடபகுதி மக்கள் நினைத்தும் பார்த்திருக்க முடியாது.

இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வட பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் பல செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.

ஏ-9 பாதைக்கூடான பரீட்சார்த்த பஸ் சேவையும் அவற்றுள் ஒன்று. இச்சேவை கிரமமாக இடம்பெற வேண்டுமென்பதே வட பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.சிவிலியன்களின் பிரயாணத்துக்கும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் ஏ-9 பாதையை எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில் திறந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது வடபகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
நன்றி- தினகரன்

No comments:

Post a Comment