25 July 2009

மக்களின் விருப்பத்துக்கு மாறாக தங்கவைத்திருப்பது நியாயமற்றது

நலன்புரி முகாம்களில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை தங்கவைத்திருப்பது நியாயமற்றதென உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முகாம்களிலிருந்து வெளியேற விரும்புவோரை விடுவிப்பதற்குரிய வழிவகைகளை உடனடியாக ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்ட அங்கீகாரமின்றி மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் அம்மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. வவுனியா முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சார்பாக உறவினர் ஒருவர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தார். கோவில்குளம் முகாம், வீரபுர முகாம் ஆகியவற்றின் பொறுப்பதிகாரிகள் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இம்மனுவின் முதல் மனுதாரர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவரென்றும் அவர் கடும் சுகயீனமுற்ற நிலையில் உள்ளதாகவும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட குடும்பத்தை விடுதலை செய்யுமாறு முகாம் அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட குடும்பத்தை விடுதலை செய்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment