25 July 2009

மூவின மக்களின் ஐக்கியம் அபிவிருத்தியே எமது ஒரே நோக்கம் - புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

முன்னொரு போதுமில்லாதளவிற்கு தமிழ் மக்கள் மிகப்பெரும் பாரிய நெருக்கடிகளையும் சுமைகளையும் துயரங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் சூழலிலேயே நாம் இன்று வவுனியா நகரசபை மற்றும் யாழ்.மாநகரசபைத் தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம். எனவே, கடந்தகால கசப்புணர்வுகளை,வேறுபாடுகளை மறந்து மக்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களையே தெரிவு செய்ய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வவுனியா நகரசபை தேர்தல் தொடர்பான நடைபவனி விரச்சாரக் கூட்டத்தில் வவுனியா வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் இன்று முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கடந்த கால சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைவில் இருத்தி பகைமை உணர்வுடன் செயற்படுவதை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும்.


வன்னியிலிருந்து மிகப் பெரும் துயரங்களுக்கு மத்தியில் உறவுகளை, உடைமைகளை, உடலின் அவயங்களைக் கூட இழந்து மிகப்பெரும் துயரங்களை அனுபவித்த நிலையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களின் கண்ணீர்க் கதைகள் எமது நெஞ்சங்களை இறுக்கிப் பிடித்துள்ளது.


வன்முறை அரசியல் கலாசாரத்தினால் பெரும் அவலங்களை எதிர்கொண்ட எமது மக்களுக்கு இன்று மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, உளவியல் ரீதியான சிகிச்சை என்பன பிரதான விடயங்களாகும்.


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மிகப் பெருமளவானோரின் உறவினர்,நண்பர்கள் வவுனியா நகர சபைப் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.


இங்குள்ளவர்களின் அன்றாட நடவடிக்கைளில் ஒன்றாக தினமும் முகாம்களுக்கு சென்று உறவினர்களை தேடுவது, அவர்களை சந்திப்பது என்பன தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்த துயரநிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.


கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் என்பனவற்றை எதிர் கொண்ட நிலையில் இந்த வன்னிமண்ணில் தொடர்ந்தும் கால் பதித்து களத்தில் நின்றவர்கள் எமது புளொட் உறுப்பினர்களேயாவர்.


ஜனநாயக செயற்பாடுகளுடன் மக்களின் மேம்பாட்டுக்காக அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் களத்தில் நின்ற எமது போராளிகள் பலரை வவுனியாவில் மட்டுமல்ல எமது தமிழர் தாயகப்பிரதேசமான வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இழந்துள்ளோம்.


தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான ஜனநாயக ரீதியான எமது அரசியல் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். எனவே, கடந்த காலங்களின் அனுபவங்களுடன் வவுனியா நகரில் மூவின மக்களின் ஐக்கியம், அபிவிருத்தி என்பனவற்றை கட்டியெழுப்ப நங்கூரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


இந் நிகழ்வில் முன்னாள் நகரசபைத் தலைவரும் தற்போதைய வேட்பாளருமான விசுலிங்கநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வவுனியா மாவட்ட புளொட் பொறுப்பாளர் பவான் உட்பட வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment