இலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல்-ரயில் சேவை
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது மற்றும் புகையிரத சேவையை இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்துவது தொடர்பாக சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை முன்வைத்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இதனால், சாதாரண வருமானம் பெறும் பிரிவினரும் இலகுவாக இரு நாடுகளுக்குமிடையில் சென்று வர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். இரண்டாவது கூட்டத் தொடரின் போது
முன்வைக்கப்பட்ட யோசனைகளின் சில ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர்களின் முதலாவது அமர்வு 2007 இல் டில்லியில் நடைபெற்றது. இதன் போது இலங்கை, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான போக்குவரத்து தொடர்பில் யோசனையை முன்வைத்தது.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இம்முறை அமர்வின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது மற்றும் புகையிரத சேவையை இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்துவதான யோசனை முன்வைக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஜனாதிபதியின் 25 வருட கனவு நனவாகப் போகின்றது.
1985 ஆண்டுக்கு முன் போக்குவரத்து சேவை இடம்பெற்ற நிலையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் கொச்சினுக்குமிடையில் போக்குவரத்து இடம்பெறுவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் தலைமன்னார் வரை ரயில் தண்டவாளம் போடும் அதேநேரம் இந்திய ரயில்வே பிரிவினர் ராமேஸ்வரம் வரை விஸ்தரிப்பர் இந்நிலையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை இடம்பெறும்.
இதன்மூலம் குறைந்த செலவில் இரு நாடுகளுக்குமிடையில் சென்று வரமுடியும். உல்லாச பயணம் முதல் யாத்திரைகளை சாதாரண வருமானம் பெறுவோர் மேற்கொள்ளமுடியும். தற்போது ஒரு பகுதியினர் மட்டுமே விமானம் மூலம் வந்து செல்கின்றனர். இதன் ஊடாக பெருமளவானவர்கள் வந்து வியாபாரம் மேற்கொள்ள வழிவகுக்கும்.
தெற்காசியாவில் பல்வேறுபட்ட சமூகங்கள் உள்ள நிலையில் பிணைப்பை ஏற்படுத்த இது வழிவகுக்கும். தெற்காசிய அமைப்பில் இலங்கையும் மாலைதீவும் தவிர ஏனையவை நிலத் தொடர்புடையவையாகும். இதேவேளை இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு ரயிலூடாக நேரடியாக செல்வதற்கும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தெற்காசிய பிரஜைகள் நன்மையடைவர்.உலகின் ஐந்தில் ஒரு பகுதி சனத்தொகையை தெற்காசிய கொண்டுள்ளது.இம்மக்கள் தமது சமூக மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும்.
பிராந்தியத்துக்கு இடையிலான மக்களின் மத்தியில் தொடர்பாடல்களை உருவாக்குவதற்கு போக்குவரத்து மார்க்கத்தை அதிகரிப்பது மற்றும் அபிவிருத்தி உட்கட்டமைப்பின் ஊடாக மேற்கொள்ள முடியுமெனத் தெரிவித்தார்
No comments:
Post a Comment