முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணி குறித்து பேச்சுவார்த்தை
வடக்கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் இந்தியாவிலிருந்து வந்த நிபுணர்களுடனும்,இலங்கை இராணுவப் பொறியியலாளர் பிரிவினருடனும் முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட விரிவான பேச்சுவார்த் தைகளை நடத்தியுள்ளார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் கடந்த 23-07-2009 நடைபெற்ற இப் பேச்சுவார்த்தையில் மூன்று விதமான கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்து ஆராயப்பட்டதுடன், முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மக்களை மீளக் குடியமர்த்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துமுகமாகக் கண்ணி வெடிகளை அகற்றும் மனித நேயப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான அட்டவணையைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். இதன்படி, அரச அலுவலகங்கள், குடியிருப்புகள் என முன்னுரிமை அளித்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.கண்ணிவெடிகள் இல்லையென இனங்காணப்பட்ட பிரதேசங்கள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும். முக்கியமான பாதைகள் மற்றும் பிரதேசங்களில் ஏற்கனவே இராணுவத்தினர் கண்ணி வெடிகளை அகற்றிவிட்டனர் என்றார். இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை மேம்படுத்துவது குறித்தும் வவுனியா அரச அதிபர், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment