யுத்தநிறுத்தத்திற்கு வெளிவிவகார அமைச்சர்கள் அழைப்பு : அரசு ஏற்க மறுப்புஇலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் வலியுறுத்தியுள்ளார். எனினும் இக்கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை விடுவிப்பதற்காகவும், அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் பொருட்டும் இந்த உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் என்றார்.
இவ்வாறு இலங்கையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வேண்டி சர்வதேசம் அழுத்தங்களை மேற்கொண்டு வருவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக அல்ல என மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மூன்று முக்கிய கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் பொருட்டு தமது இலங்கை விஜயம் அமைந்ததாக அவர் இதன் போது தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தினது அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பது குறித்தும் அதன்படி நடப்பது குறித்தும் இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் பொதுமக்கள் மோதல் பிரதேசங்களிலும் அதற்கு வெளியே இடைத்தங்கல் முகாம்களிலும் அவலப்படும் நிலைமை குறித்து கவலை வெளியிட்டதுடன் இவை தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மூன்றாவதாக இலங்கை அரசாங்கம், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணங்கி செயற்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமானதும், அமைதியானதுமான வாழ்க்கை முறைமையை உறுதி செய்வது தொடர்பிலேயே தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.
செய்தியாளருடனான சந்திப்பின் போது, பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்ணர் மோதல் பிரதேசங்களில் தற்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்தினை வெளியிடுகின்றனர். ஆனால் அங்கு உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியவில்லை.
எவ்வாறாயினும் அங்கு உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் மீட்கப்பட வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோளாக இருக்கிறது, அத்துடன் மோதல் பிரதேசங்களிலும், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமெனத் தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே மோதல் பிரதேச தொண்டு பணியாளர்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலமே பொதுமக்களின் உண்மையான நிலவரம் குறித்து வெளியுலகத்திற்குத் தெரிய வருவதுடன், அவர்களின் உண்மையான தேவை அறிந்து சேவை செய்யவும் முடியும் என குஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment