02 May 2009

அத்துமீறிய குடியேற்றத்தை தடுத்து நிறுத்துக- இரா. துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லைக் கிராமமான கெவுளியாமடு கிராமசேவையாளர் பிரிவு இல 135 சி என்னும் கிராமத்தில் 1990ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது அங்கு குடியிருந்த 10 குடும்பங்கள் இடம்பெயர்ந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இவர்களில் அனேகமானோர் வேளாண்மை, மீன்பிடி, மேட்டுப் பயிர்ச்செய்கை, வியாபாரம் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வந்ததோடு விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களுக்கும் மேட்டு நிலங்களுக்கும் உரி;த்துள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர்.
சுமார் 18 வருட காலமாகியும் அப் பிரதேசத்தில் இருந்துவந்த யுத்தச+ழ்நிலையால் உயிருக்குப் பயந்து மீண்டும் சொந்த இடம் போக முடியாமல் எப்போது சொந்த இடத்துக்கு போவதென எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்தபோது அனைத்து பொருளாதார வளங்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் இப் பிரதேசத்திலிருந்த வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை நிலங்கள் காடாக காட்சியளிப்பதோடு சில வயல் நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டும், சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்பட்டும் ஒரு சில நிறுவனங்களால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு ஓரிரு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. கடந்த வாரம் இப் பிரதேசத்தை பிரதேச செயலாளர் தலைமையில் பார்வையிடச் சென்றபோது அங்கு அத்துமீறிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டடிருந்தமை தெரியவந்தது.

எனவே அரசாங்கம் தமிழ் மக்கள் வாழ்ந்த கெவிளியாமடு கிராமத்தில் நடக்கின்ற அத்துமீறிய குடியேற்றத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இக் கிராம சேவையாளர் பிரிவை மேற்பார்வை செய்வதற்காக தற்காலிகமாக உகனை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதை மீண்டும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு இப் பிரதேச மக்கள் மேற்படி பிரதேசத்திற்கு மீண்டும் சென்று தங்களது விவசாய செய்கையை மேற்கொள்வதற்கும் இதைத் தொடர்ந்து இவர்களுக்குரிய காணாமல் போன கால்நடைகளுக்குப் பதிலாக கால்நடைகளை வழங்கி மீண்டும் தங்கள் தொழிலை ஆரம்பிப்பதற்கும் சம்பந்தப்பட்டோர் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு இவர்கள் நிரந்தரமாக இப்பிரதேசத்தில் வசிப்பதற்குரிய வீட்டுத் திட்டத்தை ஒரே இடத்தில் அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா. துரைரெத்தினம் (ரட்ணம்) கிழக்கு மகாணசபை முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment