02 May 2009

தொழிலாளர் வர்க்கத்துக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. தேசம் இல்லை. வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கிறது. மேதினக் கூட்டத்தில் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பொதுச் செயலாளர் தோழர்.தி.ஸ்ரீதரன்

சோஷலிச ஐக்கிய முன்னணியின் (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, தேச விடுதலை முன்னணி) மேதினக் கூட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்றது. அக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர். தி.ஸ்ரீதரன்

1800 களின் பிற்பகுதியில் தொழிலாளர் வர்க்கம் தனது எட்டு மணிநேர உரிமையை உலகளாவியளவில் நிலைநாட்டியது. 1930 களில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் இலட்சியங்களை இலங்கையில் முன்னெடுத்தது. இங்கு குழுமியிருக்கும் நீங்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புதிய தலைமுறையினர் நீங்கள். உங்கள் முன் உரையாற்றும் போது ஒரு பெருமித உணர்வு எனக்கு ஏற்படுகிறது.

இலங்கையின் சமூக அரசியல் வாழ்வை செம்மைப்படுத்துவதில் இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமை இன சமூகங்களின் உரிமை பால் சமத்துவம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

1970களின் நடுப்பகுதியில் அன்றைய ஜே.ஆர் ஆட்சியில் திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இலங்கையின் தொழிலாளி வர்கத்தினரிடையே இன ரீதியான பிளவு கொண்டு வரப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் யுத்தமும்; வன்முறையும் என்றாகிவிட்டது. இந்த நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இது பெரும் தடைக்கல்லாக அமைந்திருந்தது.

இப்போது யுத்தம் முடிவுக்கு வரும் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இடதுசாரி இயக்கம் தனது செயற்பாடுகளை இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு அதிகரிக்க வேண்டும். மாசடைந்த அரசியல் சூழல் தூய்மையாக்கப்பட வேண்டும்.

இந்த மேதினத்தில் ஐக்கியப்பட்ட இடதுசாரிகள் அரசியல் அதிகாரப் பகிர்வினூடாக தேசத்தை ஒன்றிணைப்போம் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர்.

எமது நாடு பல இனங்களின் வானவில்லாக கட்டியெழுப்பப்பட வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று பேசுவதற்கு மாறாக இலங்கையர்கள் என்று பேசுவதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் மனக்காயங்கள் ஆற்றப்பட வேண்டும்.
இன்று வடக்கின் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தெற்கின் மக்கள் சுனாமியால் எமது கரையோர சமூகம் பேரனர்த்தத்தை சந்தித்தபோது தலையில் சுமந்து சென்று உதவிகள் புரிந்தார்கள்.

இன்றும் வன்னி மக்களின் அவலம் கண்டு பெருவாரியான சிங்கள மக்கள் வேதனையுறுகிறார்கள். முகாம்களில் சொல்லொணா துன்பங்களில் வாழும் மக்களின் இடர் துடைப்பதில், வன்னியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்பதில் தெற்கின் தொழிலாளி வர்க்கம் வடக்கின் தொழிலாளி வர்கத்திற்கு தனது கரத்தை நீட்ட வேணடும்.

1990 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மார்க்சியம் காலாவதியான தத்துவம் என உலக முதலாளித்துவம் பிரச்சாரங்களை பாரியளவில் முன்னெடுத்தது.

ஆனால் வரலாற்றின் இயக்கவியல் அதனை குறுகிய காலத்திலேயே பொய்யாக்கியது. லத்தீன் அமெரிக்காவிலும், நேபாளத்திலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் கண்கூடானவை.

இன்று உலகளாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்களுக்கும் மார்க்சிய வழியில்தான் தீர்வு காணமுடியும்.

தொழிலாளர் வர்க்கத்துக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. தேசம் இல்லை. வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கிறது.

No comments:

Post a Comment