புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை கைவிட்டு தம் பிடியிலுள்ள பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் - ஒபாமா
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் படைத்தரப்பினருக்குமிடையில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கிடையில் பேசும் போது தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை கைவிட்டு, தம் பிடியில் வைத்திருக்கும் பொது மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும் என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா
அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக் குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். என்றார்
இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைத்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது. என்றார். இதற்கெல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதானம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment