15 August 2009

கொழும்பு இந்திய இல்லத்தில் சுதந்திரதின நிகழ்வு

இந்தியாவின் 62 ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அலொக் பிரசாத் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்திய குடியரசு தலைவி பிரதீபா பட்டேலின் சுதந்திர தினச் செய்தியை அவர் வாசித்தார். மேலும் அச் செய்தியில் நாம் இன்று 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாட்டின் பாதுகாப்பைப் பேணும் எமது இராணுவப் படை, மத்திய, மாநில பொலிஸார், அனைத்து காவல் துறையினர், மற்றும் உலகம் எங்கிலும் உள்ள இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்து செய்தியைத் தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டின் சமூக நலத் திட்டங்களில் ஊழல் நடைபெறும்போது மக்கள் கொந்தளித்து எழுகின்றனர். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மக்களுக்கான சேவைத் திட்டங்கள் விரைவாக நடைபெற நிர்வாக சீர்திருத்தம் அவசியமாகிறது. மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட்டே ஆக வேண்டும்.

சவால்களை சமாளிப்போம். மக்களிடையே, தமக்குள்ள உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.தாம் வாழ்வில் மேம்பட நல்ல சந்தர்ப்ப வாய்ப்புகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்புகள் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றன.

இன்னொருபுறம் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தடுப்பது பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும். மக்களும் இந்தப் பணிக்கு முழு ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும்.

பொருளாதார தேக்க நிலையால் உலகளவில் பாதிப்பு ஏற்பட்டு வரும் இவ்வேளை, இந்தியா மிகத் திறமையாக நிலைமையைச் சமாளித்து வருகிறது.வளர்ச்சிப் பாதையில் நாடு தொடர்ந்து பயணம் செய்ய அனைவரும் உதவ வேண்டும்.

வளர்ச்சி சார்ந்த புதிய துறைகளில் நம்மை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள நலிவுற்ற பிரிவினர், வளர்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் இணையாமல் இன்னமும் ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்.

அமைதியுடன், அனைவருடனும் கூடி வாழ்வது என்பதே நமது கலாசாரத்தின் அடிநாதம். அப்பாவி மக்களை இலக்கு வைக்கும் தீவிரவாதம் நமது கலாசாரத்துக்கே எதிரானது. இதை அனைத்து மதங்களுமே ஏற்பதில்லை. தீவிரவாதம் கண்டிக்கத்தக்கது.

மதச்சார்பின்மை,சமத்துவம்,அனைத்து மதங்களையும் மதித்து நடப்பது போன்ற கொள்கைகளைப் பின்பற்றி நடப்பது நமது இந்தியா.

நாடு முன்னேற்றப் பாதையில் தொடர, வகுப்பு நல்லிணக்கம் முக்கியமானதாகும்."

இவ்வாறு அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment