17 August 2009

அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என பேரினவாத கட்சிகள் போல் பேசுகின்றனர்.

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்த வகையில் குரல் எழுப்பி வருகின்ற இவ் வேளையில் அம்மாகாணத்தைச் சேர்ந்த சிலர் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என பேரினவாத கட்சிகள் போல் பேசுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் 16-08-2009 மாலை ஏறாவூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட 87-ஆவது சர்வதேச கூட்டுறவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கவலை தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில் எமது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்தாலும் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புதல்,மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறவேற்றக்கூடிய அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

20 வருடங்களுக்கு முன்பு 13ஆவது அரசியல் யாப்பு திருத்தப்படி மாகாண சபை மூலம் அதிகாரப் பகிர்வு முறை கொண்டு வரப்பட்டாலும் 20 வருடங்களின் பின்னரே அது கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைத்தது.

தேசிய ரீதியில் தற்போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசப்பட்டு வந்தாலும் மாகாண சபை அதிகாரப் பகிர்வுக்கு மேல் எதனையும் எதிர்பார்க்க முடியாத நிலையே தற்போது காணப்படுகின்றது.

இந்நிலையில் 13ஆவது அரசியல் யாப்பு திருத்தப்படி மாகாண சபைக்கு அதிகாரம் முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசாங்கததைக் கோருகின்றோம். இதற்கு சகலரும் இணைந்து செயல்பட வேண்டிய கால கட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகளினால் தோற்றுவிக்கப்பட்டு வரும் அரசியல் முரண்பாடுகளினால் அந்த இலக்கை அடைய முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் இப்போது தோன்றியுள்ளது. மாகாணசபைக்கு அதிகாரம் வேண்டும் என்பதில் கிழக்கின் மூவின மக்களிடையே எத்தகைய கருத்து முரண்பாடுகளும் இல்லை என்பதை அந்த அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

இம்மாகாணத்தில் சகலரும் ஒரு கட்சியின் கீழ் இணைந்து செயல்பட வேண்டும் என சிலர் கூறுகின்றார்கள்.அது ஜனநாயகம் அல்ல. விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகளாக செயல்பட முற்பட்டது போல் தான் அந்த அரசியல்வாதிகளும் முனைகின்றார்கள். அப்படியான நிலைமை ஏற்பட்டால் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை அது தோற்றுவிக்கும்" என்றார்.

No comments:

Post a Comment