05 February 2010

முந்தைய ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி

இலங்கையில் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டவாறு தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து தரப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரினார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் இந்த மாதம் 20ம் தேதி நடக்கும். இப்போதுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்தும், தேவைப்பட்டால் பென்னாகரம் இடைத்தேர்தல் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியும், அதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தருவதாக காஞ்சிபுரம் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

நளினி விடுதலை: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரச்னையில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துவிட மாட்டோம்.

சோனியா காந்திக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன் என்று நான் கூறியதாக நினைவில்லை. இவ்வளவு பெரிய பிரச்னையில் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.

மேனன் சந்திப்பு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வந்து என்னை சந்தித்தபோது, கடற்கரை பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் கருத்துகள் பரிமாறிக் கொண்டோம்.

தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும், இலங்கை ராணுவமும் தொடர்ந்து தாக்குவது பற்றி கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்தேன்.

இலங்கையில் விரைவில் தமிழர்களுக்கு உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் அரசியல் திருத்தம் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினேன்.

ஆயுதங்களுடன் நுழைய எவருக்கும் அனுமதியில்லை: இலங்கையில் போர் முடிந்த பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தமிழகத்திற்கு வருவதாக புகார் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளாக இருந்தாலும், அவ்வாறு இல்லாத தமிழர்களாக இருந்தாலும், யாரும் ஆயுதங்களுடன் தமிழகத்தில் நுழைந்து செயல்பட அனுமதி இல்லை என்றார் முதல்வர் கருணாநிதி.

No comments:

Post a Comment