விமான போக்குவரத்து சீராவதில் சிக்கல் : ஐஸ்லாந்து எரிமலையில் மீண்டும் சீற்றம்எரிமலைச் சீற்றத்தால் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்தை, மீண்டும் இயக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்தாலும், ஐஸ்லாந்து எரிமலையில் நேற்றும் சீற்றம் காணப்பட்டதால், விமானப் போக்குவரத்து மீண்டும் முழு அளவில் இயங்குவது கேள்விக் குறியாகியுள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீக் குழம்புகள், அப்பகுதி முழுவதும் பரவியுள்ளன. எரிமலை வெடித்ததால், அங்குள்ள வான் பகுதியில் 11 கி.மீ., தொலைவுக்கு சாம்பல் புகை மண்டலம் பரவியுள்ளது. இந்த சாம்பல் மண்டலத்தால், அந்த வழியாகச் செல்லும் விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்படும் என்பதால், கடந்த ஐந்து நாட்களாக ஐரோப்பாவிலும், அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பயணிகள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே முடங்கிக் கிடக்கின்றனர். விமான நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் விமான போக்குவரத்து அமைச்சர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று விவாதித்தனர். இதில், ஐரோப்பிய வான் பகுதியை சாம்பல் புகை மண்டலம் இல்லாத பகுதி, புகை மண்டலம் குறைவாக உள்ள பகுதி மற்றும் புகை உள்ள பகுதி என, மூன்று பிரிவுகளாக பிரிப்பது என்றும், இதில், புகை மண்டலம் இல்லாத பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் விமானங்களை குறைந்த அளவில் படிப்படியாக இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி குரேஷியா, ஜெர்மனி, சுவீடன், ருமேனியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேற்று குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் மட்டும், நேற்று 8,000த்தில் இருந்து 9,000 விமானங்கள் இயக்கப்பட்டன. இது, ஐரோப்பாவின் ஒட்டு மொத்த விமான போக்குவரத்தில் 30 சதவீதம் மட்டுமே. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஐந்து நாட்களாக தவித்து வரும் பயணிகளுக்கு, இது நிம்மதியை ஏற்படுத்தியது.
மீண்டும் சீற்றம்: இதற்கிடையே, ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் நேற்று மீண்டும் சீற்றம் இருந்ததாகவும், அதிலிருந்து அதிகமான தீக் குழம்புகள் வெளியானதாகவும் தகவல் வெளியானது. இருந்தாலும், இதனால், புகை மண்டலம் குறைவாகவே காணப்படுவதாகவும் கூறப்பட்டது. விமான போக்குவரத்து விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நிம்மதி அடைந்திருந்த பயணிகளும், விமான நிறுவனங்களும், எரிமலையில் மீண்டும் ஏற்பட்ட சீற்றத்தால் கவலை அடைந்துள்ளனர். பிரிட்டனின் பெரும்பாலான விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
பிரிட்டன் விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'எரிமலையில் இருந்து வெளியேறியுள்ள புதிய புகை மண்டலம், பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் நோக்கி பரவி வருகிறது. அட்லாண்டிக் கடல் பகுதியிலும் பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது. இது, விமான போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' என்றனர். எரிமலைச் சீற்றத்தால், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் விமான போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக, ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பங்கேற்க செல்லவிருந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்
நன்றி- தேனீ
நன்றி- தேனீ
No comments:
Post a Comment