முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வழங்கப்பட்டமையானது சர்வதேசத்திற்கான இலங்கையின் பொறுப்புக்கூறல் உறுதி மொழிக்கு முரணான செயல் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதி தருணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இக்காலப்பகுதியில் இராணுவத்திற்கு கட்டளை வழங்கியவரை இலங்கையின் பாராளுமன்றத்திற்குள் உள்வாங்குகின்றமை உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் தாக்கம் செலுத்தும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி தருணம் வரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக தற்போதைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா செயற்பட்டார். இந்நிலையில் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் இடம்பெற்றதாகவும் சட்ட விரோத ஷெல் தாக்குதல்கள் உள்ளிட்ட கைதிகளின் கொலை தொடர்பாகவும் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பொறுப்புக் கூறும் வகையில் கடந்த ஆண்டு ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்தமை அதன் பின்னர் நியமனம் வழங்கியமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள மூத்த இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கும் நிலைப்பாட்டின் சமிஞ்சையாகவே காணப்படுகின்றன. ஆகவே பொறுப்புக் கூறும் விடயத்தில் சர்வதேசத்திற்கு வெறுமனே வெ ள்ளை பூசுவதாக அமையாது அர்த்தப்புஸ்டியாக்க வேண்டும்.

No comments:
Post a Comment